
கால நேரங்களை கிரகங்கள் தான் ஆட்டிப் படைக்கின்றன என்ற மாய நம்பிக்கையில் விழுந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் உண்டு . மனிதனுடைய வாழ்க்கையில் கடின நேரங்கள் மனிதர்களின் செய்கையினால், அதிகாரங்களின் மாற்றங்களினால், மனிதர்களின் மத்தியில் ஏற்படுகின்ற பல தொழில் நுட்ப போட்டிகளால், இனமொழி ஜாதி மத வேறுபாடுகளால், ஒவ்வொருத்தருக்கும் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடிகளால், அந்தந்த காலச் சூழ்நிலைக்குட்பட்ட போராட்டங்களினால் ஏற்படுகின்றது. இவை தவிர்க்க முடியாதவை. காரணம் எல்லோருடைய மனநிலையும், எண்ணங்களும், சொற்களும், செயல்களும் ஒரே மாதிரியானவை அல்ல.
இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவரவரும் அவரவருக்குகந்த அவரவர்க்கு வேண்டிய மாற்றத்தை செய்கின்றார்கள். அதற்காக அவரவர் அவரவருக்கு ஏற்ற முடிவுகளை எடுக்கின்றார்கள். அப்படி எடுக்கப்படுகின்ற முடிவுகள் சூழ்நிலைகளால் ஒருவருக்கு நன்மையானது மற்றவருக்கு தீமையாகிறது.
ஒருவருக்கு சரியானது மற்றவருக்கு தவறாகிறது. ஒருவருக்கு சாதகமானது மற்றவருக்கு பாதகமாகிறது. ஒருவனின் நல்ல நேரம் மற்றவருக்கு கெட்ட நேரமாகி விடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எதுவுமே நிலையற்றது. எல்லாம் மாறக் கூடியது. சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல் அடிக்கடி மாறக்கூடிய நிலையற்ற மனநிலையை மனிதர்கள் கொண்டிருப்பது தான் காரணம்.
கடின நேரங்கள் ஒருவர் வாழ்க்கையில் ஏற்படும்போது நிச்சயம் அவரது எண்ணம் சொல் செயல் உணர்வு அனைத்துமே பாதிப்படையத்தான் செய்யும். அதே நேரத்தில் இந்த கடின நேரங்கள் நிலையற்றவை. நிலையானது அல்ல. அதை நிலையானதாக ஆக்கி விடக்கூடாது.
கடினமானவர்கள் கடைசி வரை கடினமானவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களையும் கடினமானவர்களாக ஆக்கி விடுவார்கள். அதோடு ஒரு வித மாயப் பெருமையும் அடித்துக் கொண்டு அறியாமையில் உழல்வார்கள். எனவே, இவர்களிடம் நெருக்கத்தை நட்பை தவிர்த்து விலகி விடுங்கள்.
கடின நேரங்களில் மந்திர, மாந்த்ரீகம் தேடி ஓடுவதை விட இறைவன் உங்களுக்குக் கொடுத்திருக்கின்ற ஆற்றலை முழுமையாக பயன்படுத்துங்கள். முதலில் உங்களை நம்புங்கள். நம்பிச் செயல்பட்டுக் கொண்டே இருங்கள். இயற்கையை நம்புங்கள். இயற்கையின் ஆற்றலை நம்புங்கள் காரியங்களை நடத்திக் கொண்டே இருங்கள்.
காரியங்களை நடக்க விடுங்கள். உங்கள் அனுபவங்களிலிருந்துதான் பற்பல நல்ல நல்ல பட்டறிவுகளை பெற்றுக் கொள்ள முடியும். இந்த பட்டறிவு அல்லது அனுபவ அறிவு என்பது இருந்தால்தான், அடுத்தடுத்து வரப்போகின்ற கடின நேரங்களை சந்தித்து சகித்திடவும் தவிர்த்திடவும் அல்லது சாதகமாக்கிக் கொள்ளவும் முடியும். உங்களுக்கு ஏற்படுகின்ற கடின நேரத்திலிருந்தே எப்படி நன்மையை உருவாக்கி முன்னேற்றம் கண்டு சாதனை படைப்பது என்ற நிலையை தெளிவை கால விழிப்புணர்வோடு உருவாக்கி விடவும் முடியும்.