நாம் எந்தப் பதவிக்குப் போவதாக திட்டமிட்டாலும் அதற்கேற்ப நம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அப்பதவி எதிர்பாராத விதமாய் கிடைத்தாலும் உன் நம் அறிவு, அனுபவமும் பற்றாக்குறையாக இருந்து நம்மை காட்டிக் கொடுத்துவிடும். காமராஜர் தொண்டனாக தொடங்கி, சத்தியமூர்த்தியிடம் பயிற்சி பெற்று தயார் செய்து கொண்டார். அதுபோல் நாம் எதை அடைய ஆசைபடுகிறோமோ அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து நம்மை தயார்படுத்த வேண்டும்.
பல மைல் தூரங்கள் சென்று சட்டப் புத்தகங்களை இரவல் வாங்கிப் படித்து வழக்கறிஞரானார் ஆப்ரகாம் லிங்கன். அதிவேகமாக செல்லும் ஒரு விமானத்தைத் கண்டுபிடிக்கப் போகும் ஒரு மனிதன் பொறியியல் பற்றி அறியாமல் எதையும் கண்டுபிடிக்க முடியாது. இரவோடிரவாக ஒரு விதை மரமானதாக நாம் கேட்டதில்லை. இரவோடிரவாக ஒருவன் விஞ்ஞானியாகவோ, கலைஞனாகவோ, தலைவனாகவோ ஆவதில்லை. ஒரு மனிதன் ஒரு பாறையை பிளக்க அதன் மீது சம்மட்டி கொண்டு அடி மீது அடியாக அடிக்க, அவன் அடித்த 100வது அடியில் பாறை பிளந்தது. அவன் எனக்குத் தெரியும் அந்த 99 அடிகளும் அந்தப் பாறையை பிளப்பதற்கு காரணமாக இருந்தது என்றானாம். தன்னைத் தயார் செய்து கொண்ட மனிதன் குறிக்கோளை அடைய திட்டம் வகுக்கிறான். ஆனால் வெற்றியோ திட்டத்தை நிறைவேற்றும் செயல் திறனைப் பொறுத்து இருக்கிறது.
பலருக்கும் ஆசை இருக்கிறது. லட்சியம் இருக்கிறது. சிலர் சோம்பலடைந்து ஒத்திப் போடுகிறார்கள். சிலருக்கு அவநம்பிக்கை பிறந்து விடுகிறது. செய்யாமலிருக்க சிலர் சமாதானம் தேடுவார்கள். இதைத்தான் பலரும் சோடா பாட்டில் உத்சாகம் என வேடிக்கையாக குறிப்பிடுவார்கள். சோடா பாட்டிலை திறந்தவுடன் நொங்கும் நுரையுமாகப் பொங்கும். ஆனால் சிறிது நேரத்தில் பாதி அள அளவில் தண்ணீராய் நிற்கும்.
சிந்தனையும் உழைப்பும் சேரும் போதுதான் அங்கே ஒருமித்த பலன்கள் கிடைக்கின்றன. தனியாக ஒன்று மட்டும் எந்த சிறந்த பலனையும் அளிப்பதில்லை. எழுது என்றார் ஞானி. ஏன் என்றால் எழுது முன் சிந்திக்கிறார்.
எழுதிய பின் அதன்படி நடக்க முயல்வாய். ஆகவே எழுது. "உலக மனிதர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். பேசபவர்கள் என்றும் செய்பவர்கள் என்றும், செய்பவர்களாலேயே இவ்வுலகம் முன்னேறி வருகிறது. "துரதிருஷ்டவசமாக நம் நாட்டில் உழைப்பை கேவலமாக எண்ணுகிறோம். உழைக்க வேண்டியவர்கள் நமக்குக் கீழ் உள்ள மனிதர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
பள்ளிகளில், கல்லூரிகளில் கல்வி பயில்வது "நம் அறிவை உபயோகித்துப் பிழைக்கத்தான்" என்று திடமாக நம்புகிறோம். ஆனால் உழைப்பைப் பற்றி நம் மனோபாவம் மாறாத வரை முன்னேறுவது கஷ்டம். தஞ்சை மாவட்டத்தில் நாதசுவரம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள் விடியற்காலை சுமார் இரண்டு மணி நேரம் கடுமையாக பயிற்சி செய்வார்கள். அந்த இசை மன்னர்கள் எத்தனை ஆண்டு காலம் கடும் பயிற்சிக்கு தங்களை ஆக்கிக் கொண்டார்கள் என்பது பலருக்கும் தெரியாது. அதேபோல் அடுப்படியில் புகுந்த எந்த பெண்ணும் முதல் நாளே சமையல் நிபுணராக ஆவதில்லை. "மேதைத்தனம் என்பதெல்லாம் ஒரு சதம். உத்வேகமும் 99 சதம் கடும் உழைப்பும்தான்" என்றார் ஒரு மேதை. வெற்றிக்கு உழைப்புதான் குறுக்கு வழி.