படிக்கும் வயதில் படிப்பதற்குக் கஷ்டப்படுகிறவர்கள் பிற்காலத்தில் ரொம்ப கஷ்டப்படுவார்கள். ஆசை ஆசையாய் தன் மகனை வளர்ந்த அம்மா ஒருத்தருக்கு திடீரென BP சர்க்கரை எல்லாம் வந்து விட்டது. காரணம் தெரியுமா? மகன் டாக்டர் படிப்பு படிக்க வேண்டும் என்பது அவள் ஆசை. ஆனால் மகனோ மறுத்து விட்டான். தாயின் கனவு அறுந்தது. பி.பி பிறந்தது. படிக்க வேண்டிய காலத்தில் கஷ்டப்பட்டால் எதிர்காலம் என்ன ஆகும். யோசிக்க வேண்டாமா?
இலக்கியக் கூட்டம் ஒன்றில் லேனா தமிழ்வாணன் ஒரு நல்ல கருத்தைச் சொன்னார். காசு கொடுத்து அவர் வாங்கிய புத்தகத்தின் ஒரு வரிக்கு விலை முழுவதும் கொடுக்கலாம் என்றார். என்ன வரி?. "கஷ்டப்படாமல் இருக்கக் கஷ்டப்படுங்கள்" என்ற வரிதான். அதுமட்டுமல்ல. இனம் புரியாத எதிர்பாராத கஷ்டங்கள் வராமல் இருக்க திட்டமிட்டு கஷ்டப்படலாமே!
பிற்காலத்தில் சௌகரியங்கள் இல்லாமல் கஷ்டப்படுவதைத் தடுக்கலாம். முதுகுவலி, மூட்டுவலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி ஒழுங்காகச் செய்யலாமே. ஒழுங்கற்ற எதிர்பாராத கஷ்டங்களைத் தவிர்க்க திட்டமிட்ட கஷ்டங்கள் படுவது அவசியம். எனவே கஷ்டப்படாமல் இருக்கக் கஷ்டப்படுங்கள் என்ற வாக்கியம் ஒரு வாழ்க்கைச் சூத்திரம்.
பிள்ளைப்பேறு கஷ்டம்தான். தாய் அதைப்படாமல் இருந்தால் நாம் வந்திருக்கவே முடியாது. இளைய தலைமுறை ஜாலியாக இருக்கவே விரும்புகிறது. ஆப்ரகாம் லிங்கன் சின்னவயதில் கஷ்டப்பட்டார். ஜனாதிபதியானார். வயலில் உழவன் கஷ்டப்படவில்லை என்றால் நமக்கு சோறு கிடைக்குமா? பள்ளிக்கு நடக்க, புத்தகம் திறக்க, பாடம் படிக்க, துணிமணிகளை அடுக்க அம்மா அப்பாவிற்கு உதவ மறுக்கிறார்கள் இளம் பிள்ளைகள். இது சோம்பல். அவர்கள் இன்று கொஞ்சம் கூட கஷ்டப்படவில்லை என்றால் பிற்காலத்தில் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
சின்னப் பட்டாம்பூச்சி ஒன்று கூட்டிலிருந்து வெளியேறும்போது அவஸ்தையுடன்தான் பயணத்தை ஆரம்பிக்கிறது. இதை மாணவருக்கு உணர்த்த ஆசிரியர் ஒருவர் வழி செய்தார். அது கூட்டிலிருந்து வெளியேறும் துயரத்தைப் பார்க்கட்டும் என்று மாணவர் மத்தியில் விட்டு விட்டுப் போனார். அது கூட்டிலிருந்து வெளியே வர வேதனைப்படுவது கண்டு ஒரு மாணவன் அது வெளியே வரும் ஓட்டையைப் பெரிதுபடுத்தினான். அது சுலபமாக வர உதவி செய்தான். ஆனால் பட்டாம்பூச்சி மகிழவில்லை. வெளியில் வந்ததும் அதனால் பறக்க முடியவில்லை. செய்தி அறிந்த ஆசிரியர் காரணம் கூறினார். கூட்டிலிருந்து சிறு துளை வழி வெளியேற சிரமப்படும் போதுதான் அது தன் சிறகுகளை அசைத்து அசைத்து பழகுகிறது. ஆதற்கு வாய்ப்பே இல்லாததால் இறகுகளை அசைக்க அதற்குத் தெரியவில்லை. அது மட்டுமல்ல. அதன் உடலில் ஒரு திரவமாக சுரக்கிறது. அதுவே அதன் பாதுகாப்புக் கவசம். இது இன்றி வண்ணத்துப்பூச்சி இறந்து போனது.
சிரமங்கள்தான் நம்மை பலப்படுத்துகின்றன. கஷ்டங்கள்தான் நம்மை வலுப்படுத்துகின்றன. துயரங்கள்தான் நம்மை உருவாக்குகின்றன. எதிர்பாராத சிரமங்களைத் தவிர்க்க எதிர்பார்த்த சிரமங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம்.