விதியை நம்பியவர் வென்றதில்லை!

Daily life...
Lifestyle articleImage credit - pixabay
Published on

மது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் பல திறமைசாலிகளைப் பார்த்து ஆச்சர்யப்படுவோம். இவர்கள் பிற்காலத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்று பிரபலமாவார்கள் என்று கணித்திருப்போம். ஆனால், நாளடைவில் அவர்களில் மிகச்சிலரே வெற்றி அடைகிறார்கள். பெரும்பாலானவர்கள் நாம் எதிர்பார்த்த அளவு சாதனைகள் புரிவதில்லை என்பதைவிட இருந்த சுவடே தெரியாதபடி காணாமல் போய்விடுவதுண்டு.

அவர்களில் எவரையாவது சந்திக்க நேரும்போது, 'சின்ன வயதில் பள்ளியில் கால்பந்து விளையாட்டில் சூரப்புலியாக இருந்த நீங்கள், தற்போது சம்பந்தமே இல்லாமல் கணக்கு எழுதிக்கொண்டிருக்கிறீர்களே என்று கேட்டால். பெரும்பாலானவர்கள் சொல்லும் பதில் என்னவாக இருக்கும் தெரியுமா?

விதி…

'விதி' என்ற ஒற்றைச் சொல்லில் அவர்களது தோல்விகளை மறைத்துக் கொள்வார்கள். விதி என்பது தங்களுக்குத் தாங்களே எழுதிக்கொள்ளும் முடிவுரை என்ற உண்மை அவர்களுக்குப் புரிவதில்லை.  விதி என்பது எழுதப்படுவது அல்ல. ஏற்படுத்திக்கொள்வது என்பதே நிதர்சனமான உண்மை.

தோல்வி அடைந்த மனிதர்களை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் அவர்களிடம் மூன்று குணாதிசயங்கள் இருப்பதை கண்டிப்பாக காண முடியும். அதில் முதலாவது. சாதனை புரிந்தே தீரவேண்டும் என்ற அக்னி, அதாவது வெறி இருப்பதில்லை. இந்த வெறி இல்லாதவர்களிடம் எத்தனை திறமை இருந்தாலும் அவர்கள் பிரகாசிப்பதில்லை.

இரண்டாவது, அவர்களது செயல்பாடுகள் சீராகவும், தொடர்ச்சியாகவும் ஒரே விஷயத்தில் இருப்பதில்லை. இன்று ஒன்றில் ஆர்வமாக இருப்பவர்கள், நாளை வேறொன்றில் தீவிர ஈடுபாடு காட்டுவார்கள். சில நாட்களில் மீண்டும் புதிதாக வேறொன்றின்மீது ஆர்வம் என்று வெற்றி நோக்கத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். மூன்றாவது அவர்கள் வெற்றி வரும் வரை பொறுமையாக தாக்குப்பிடித்து நிற்பதில்லை. தற்காலிகத் தோல்விகளுக்கு பயந்து பின் வாங்கி விடுவார்கள். தற்காலிக தடங்கல்களும், நிராகரிப்புகளும், தோல்விகளும் முயற்சிகளைக் கைவிட அவர்களுக்குப் போதுமானவையாக இருக்கும்.இந்த மூன்று தவறுகளையும் வெற்றியாளர்கள் செய்வதில்லை என்பதை பல வெற்றியாளர்களின் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சி என்பது எதிர்காலம் இல்லை... அது நிகழ்காலம்!
Daily life...

ஒரு துறையில் வெற்றியடைய வேண்டும் என்று விரும்பினால், அதில் உறுதியாக நிற்க வேண்டும்.  திறமை மட்டுமே வெற்றி பெற போதுமானதல்ல என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். எத்தகைய திறமையாளருக்கும் உடனடி லாட்டரி போல் வெற்றி வந்து மடியில் விழுந்துவிடாது. வெற்றிப் பயணத்தின்போது தடங்கல்கள், தோல்விகள் சகஜம் என்பதை மனபூர்வமாக ஏற்றுக்கொண்டு ஈடுபாடு குறையாமல் தொடர்ந்து பயணப்படுங்கள். நீங்களாக ஏற்றுக்கொள்ளாத வரை தோல்வி நிச்சயமானதல்ல. அது வெற்றிக்கு முந்தைய இடைநிலையே. பொய்யான விதியை ஏற்றுக்கொண்டு முயற்சியைக் கைவிடாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com