
நம்முடைய வாழ்வில் நாம் எத்தனை முறை ஒரு காரியத்தை முயற்சித்து தோற்றோம் என்பது முக்கியமில்லை. தோற்றாலும் அதை திரும்பி முயற்சித்தோமா? என்பதே மிக முக்கியமாகும். விழுந்தாலும் எழுபவனே வாழ்வில் வெற்றியடைகிறான். இதை உணர்ந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு காட்டிலே குருகுலம் ஒன்று இயங்கி வந்தது. அந்த குருகுலத்தில் உள்ள ஆசிரியருக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒவ்வொரு வருடமும் சிறந்த மாணவன் அல்லது மாணவியை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் தருவார். இப்படிப்போய் கொண்டிருக்க, ஒரு குறிப்பிட்ட வருடத்தில் அவருக்கு சிறந்த மாணவனை தேர்வு செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. ஏனெனில், அவரிடம் படித்துக் கொண்டிருந்த மாணவர்களில் மூன்று மாணவர்கள் படிப்பிலும், ஒழுக்கத்திலும், கலைகளிலும் சரிசமமாக இருந்தனர். இதனால் அந்த மூன்று மாணவர்களுக்கும் சோதனை ஒன்றை வைக்க முடிவு செய்தார் ஆசிரியர்.
ஒருநாள் குருகுலத்தில் இருக்கும் தன்னுடைய வீட்டில் இருந்துக்கொண்டு அந்த மூன்று மாணவர்களை அழைத்தார். அந்த மாணவர்கள் வீட்டில் நுழையும்போது ஆசிரியர் மிகவும் சோகமாக அமர்ந்திருந்தார். அவர் கைகளில் ஒரு கூண்டு இருந்தது. அந்த மாணவர்கள் ஆசிரியரிடம், ‘ஏன் இவ்வளவு சோகமாக இருக்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு ஆசிரியர் சொன்னார், ' நான் இந்த கூண்டில் ஒரு அழகிய பறவையை வளர்த்து வந்தேன். ஆனால், இன்று காலை அந்த ஆற்றுப்பக்கமாக செல்லும்போது பறவையை இளைப்பாற திறந்துவிட்டேன். ஆனால், அது திரும்பி வராமல் பறந்து சென்றுவிட்டது என்று சோகமாக கூறினார்.
உடனே மாணவர்களும் தாங்கள் அந்த பறவையை பிடித்து தருவதாக கூறினார்கள். இதைக்கேட்ட ஆசிரியர் பறவை பறந்து சென்ற இடத்தை காட்ட மாணவர்களை அழைத்து சென்றார். அவர் சொன்னதுப்போல சிறிது தூரம் சென்றதும் ஒரு பெரிய ஆறு வந்தது. ‘இங்கேதான் என் பறவை பறந்து சென்றுவிட்டது. அநேகமாக அந்த காட்டிற்குதான் சென்றிருக்கும்’ என்று கூறினார். இதை கேட்ட மாணவர்கள் ஆற்றில் நீச்சலடித்து செல்ல முயற்சிக்க ஆற்றில் முதலைகள் இருப்பதை ஆசிரியர் நினைவுப்படுத்துகிறார். ‘அங்கேயிருக்கும் பாலத்தில் ஒவ்வொருவராக சென்றால் காட்டை அடைய முடியும்’ என்று கூறுகிறார்.
முதல் மாணவன் அந்த பழைய பாலத்தில் நடந்து செல்கிறான். அது மிகவும் பழுதடைந்து இருந்ததால், உடைந்து இருந்தது. இந்த மாணவனுக்கு வேறு வழியில்லை. உடைந்த பகுதியில் கைகளை வைத்து செல்ல வேண்டிய நிலை. அப்படி செல்ல முயற்சித்தப் போது தண்ணீரில் விழுந்துவிட்டான். அவசரமாக நீச்சல் அடித்து கரைக்கு வந்து சேர்ந்தான். இப்போது இரண்டாவது மாணவன் அந்த பாலத்தில் செல்கிறான். அவனும் முதல் மாணவனைப்போல தண்ணீரிலே விழுந்துவிட நீச்சல் அடித்து கரையை வந்து சேருகிறான்.
இப்போது மூன்றாவது மாணவன் முயற்சிக்கிறான். அவனுக்கும் தோல்வியே மிஞ்சியது. ஆற்றில் விழுந்த அவனும் நீச்சல் அடித்துக்கொண்டு கரையை வந்து சேருகிறான். ஆனால் அவ்வாறு கரைக்கு வந்த மூன்றாவது மாணவன் ஆசிரியரிடம் சென்று, ‘நான் இன்னொரு முறை முயற்சித்துப் பார்க்கலாமா?’ என்று கேட்டான். அப்போது ஆசிரியர் முடிவு செய்கிறார் அந்த மூன்றாவது மாணவனே சிறந்த மாணவன் என்று.
இந்தக் கதையில் சொன்னதுபோல, தோல்வி அடைவது என்பது சகஜமான விஷயம்தான். ஆனால், தோல்வி அடைந்தாலும் விடாமுயற்சியைக் கைவிடாமல் திரும்ப முயற்சிப்பவனே வாழ்வில் வெற்றிப் பெறுகிறான்.