
இந்த பரந்து விரிந்த உலகத்தில் பிறந்த நாம் அனைவருமே ஜெயிக்க பிறந்தவர்கள். நாம் எடுத்த காரியங்களில் நமக்கு தோல்வி என்பது வந்தாலும், நம் திறமையை வெளிக்காட்டி ஜெயிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. எனவே, தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம். இதை தெளிவாக புரிந்துக் கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.
ஒரு தொழிலதிபர் தன் தொழிலில் படுதோல்வி அடைந்த நிலையில், தெருவில் வருவோர் போவோரை மனவேதனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரின் வீட்டின் எதிரில் ஒரு குப்பைத்தொட்டி இருப்பதை கவனிக்கிறார். அதையே சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். முதலில் ஒருவர் வந்து குப்பைத்தொட்டியில் தனக்கு தேவையான பழைய பேப்பர்களை எடுத்து சாக்கில் நிரப்பிக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் இன்னொருவர் வந்து அதே குப்பைத்தொட்டியில் தனக்கு தேவையான பாட்டில்களை எடுத்துக் கொண்டிருந்தார். மறுபடியும் ஒருவர் வந்து தனக்கு தேவையான தட்டு, பிளேஸ்டிக் ஆகியவற்றில் சாக்கில் போட்டுக் கொண்டிருந்தார். அதன் பிறகு ஒரு நாய் வந்து இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு போனது. கடைசியாக வந்த பசு குப்பையில் இருந்த பச்சை இலையை சாப்பிட்டுவிட்டு போனது.
இதை பார்த்த அந்த தொழில் அதிபர் தனக்குத்தானே சொல்லிக் கொள்கிறார், ‘ஒரு சின்ன குப்பைத் தொட்டியால் இத்தனை பேர் வாழ்கிறார்கள் என்றால், இங்கே பரந்து விரிந்து கிடக்கும் இந்த உலகத்தில் நம் எல்லோரும் எப்படியெல்லாம் பிழைத்து வாழலாம்’ என்று தனது மனதை திடப்படுத்திக்கொண்டு தோல்வியடைந்த தன்னுடைய பழைய தொழிலை ஆரம்பிக்க கிளம்பினார்.
இந்தக் கதையில் சொன்னதுப்போல, தோல்வியடைந்ததை நினைத்து வருந்தாமல், நம்மை சுற்றிப் பாருங்கள். இவ்வளவு பெரிய உலகத்தில் நமக்கென்று ஒரு வழி இல்லாமல் போய்விடுமா என்ன? ‘எல்லாம் முடிந்துவிட்டது’ என்று தோல்வியைக்கண்டு துவண்டு போகும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்பட்டு பாருங்கள். தோல்வியடைந்தாலும் எழுந்து வரக்கூடிய மனதைரியம் இருந்தால் போதும் வெற்றி நிச்சயம். இதை தெளிவாக புரிந்துக்கொண்டால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.