
உலகத்தில் பிறந்த அத்தனை உயிரினங்களும் இன்பமாக இருப்பதைதான் விரும்புகின்றன. மயில் ஆடும் நடனம் ஆகட்டும், தாய்ப் பசுவை கண்டு துள்ளல் போடும் கன்றாகட்டும், மனிதன் வாய்க்கொள்ளாமல் சிரிக்கும் சிரிப்பாகட்டும் அனைத்தும் உணர்த்துவது மகிழ்ச்சியைத்தான்.
மகிழ்ச்சியின் முதல் மூலதனம் எது என்று பார்த்தால் அது ஆரோக்கியம்தான். ஆரோக்கியம் நன்றாக இருந்தால்தான் மனிதனால் அன்றாட வேலைகளை திண்டாடாமல் செய்ய முடியும். ஆரோக்கியத்தில் ஏதாவது சிறிது குறைபாடு வந்தால் கூட நாம் செய்ய வேண்டிய காரியங்கள் தள்ளிப்போகும். விடுமுறை எடுக்க வேண்டி வரும். மருத்துவரிடம் செல்ல வேண்டி இருக்கும். அப்பொழுது கவலைகள் சூழும்.
இதைத் தவிர்க்க உணவில் கட்டுப்பாடு அவசியம். உடல் உழைப்பு அதைவிட அவசியம். நிம்மதியாக தூங்கி எழுந்தால் உற்சாகத்திற்கு குறை இருக்காது. என் தோழி ஒருவர் எப்பேர்பட்ட விருந்துக்கு சென்றாலும் சரி வீட்டிலே விதவிதமாக சமைத்து அனைவருக்கும் பரிமாறினாலும் சரி. அந்த குறிப்பிட்ட அளவை மட்டும் தாண்ட மாட்டார். சிறு வயது முதல் இதையே பழக்கப்படுத்தியதால் இன்று 65 வயதிலும் பார்த்தால் நம்ப முடியாத அளவுக்கு ஒரு இளமையும், தேஜஸ்சும், முகமளர்ச்சியும் எப்பொழுதும் இருப்பதை காணலாம்.
குறிப்பாக டெலிவரிக்கு மருத்துவமனைக்கு சென்றதைத் தவிர வேறு எதற்காகவும் மருத்துவமனைக்கு சென்றதே இல்லை அவர். இந்த உணவுக் கட்டுப்பாட்டால் கிடைத்த மிகப்பெரிய லாபம் ஆரோக்கியமே.
"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்பார்கள். அதேபோல் எதிலும் மன நிறைவு கொள்வது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். என் உறவினர் ஒருவர் மிகப்பெரிய விவசாயி. சில நேரங்களில் விவசாயம் பொய்த்து போவதும் உண்டு. அப்பொழுதும் கலங்க மாட்டார். சாப்பாட்டிற்கு வந்துவிட்டது போதும். அடுத்த போகத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
இயற்கை எல்லோருக்கும் என்ன விதித்ததோ அதைத்தானே எனக்கும் விதித்திருக்கிறது. நான் மட்டும் எப்படி அதில் இருந்து மாறுபட முடியும் என்று ஒரே மனோபாவத்தில் இருப்பார். நன்றாக விளைந்தாலும் உழைப்புக்கு தகுந்த பலன் கிடைத்திருக்கிறது நிம்மதி என்று கூறுவார் இதுதான் மனநிறைவு என்பது. இப்படி ஒரு நிறைவு இருந்துவிட்டால் மகிழ்ச்சிக்கு கேட்க வேண்டுமா என்ன?
இன்று எல்லாமே கைநழுவி போய்விட்டாலும் நாளை என்று ஒன்று இருப்பது நிச்சயம்தானே. அதில் இன்று இழந்ததை நாளை பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை வைத்தால் போதும். மனம் தளராமல் உழைக்க முற்படும். யார் எந்தவிதமான விமர்சனம், எதிர்மறையான பேச்சுக்கள் பேசி தடுத்தாலும் நாம் நம்பிக்கையுடன் செயல்படும் போது அவை அத்தனையையும் முறியடித்துவிடலாம்.
என் தோழியின் மகள் ஒருவருக்கு சிறு வயதில் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை. வீட்டில் கேட்டபொழுது இவ்வளவு பெரிய குண்டு உடம்பை வைத்துக்கொண்டு உனக்கு நாட்டியம் ஆட முடியும்? சும்மா அதை விட்டுவிட்டு வேறு வேலையை பாரு என்று அம்மா அப்பா ஒத்துக்கொண்டாலும் மற்றவர்கள் கேலி பேசி தடுக்க நினைத்தார்கள். ஆனால் அவள் விடாப்பிடியாக கற்றுக்கொண்டு ஆடி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தியும் வருகிறார்.
இது எனக்கு நம்மால் எதுவும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையையும், நம்பிக்கையையும் உண்டாக்கி இருக்கிறது. அதுவே எனக்கு ஒரு சுயமரியாதையை ஏற்படுத்துகிறது என்று பெருமிதமாக கூறுகிறாள். ஆதலால் மற்றவர்கள் என்ன சொன்னாலும் நம்மால் இது முடியும் என்று நம்பவேண்டும். ஆதலால்,
ஆரோக்கியமே மிகப்பெரிய சொத்து.
மனநிறைவே மிகப்பெரிய புதையல்.
நம்பிக்கையே மிகச்சிறந்த நண்பன்...!!
என்பதை நினைவில் நிறுத்தி நம் கடமையை செய்ய முற்படுவோமாக! இந்த மூன்றும் என்றென்றும் நம் மகிழ்ச்சியை பெருக்கிக்காட்டும் மூலதனமாக செயல்படும் என்பது உறுதி.