ஆரோக்கியமே நம் வாழ்வின் வெற்றிக்கு அடிப்படை!

Health is the basis of success in our life!
Health awarnessImage credit - pixabay
Published on

ங்களிடம் படிப்பு இருக்கிறது. நிறைய பணம் இருக்கிறது. கார் இருக்கிறது. பங்களா இருக்கிறது. மனைவி, மக்கள் என எந்த குறையும் இல்லை. ஆனால் உங்களிடம் முக்கியமான ஒன்று இல்லை. அது ஆரோக்கியம். உங்களுக்கு பலவிதமான வியாதிகளும் இருக்கின்றன. எல்லா வசதிகளும் இருந்தும் உங்களால் எதையும் நிம்மதியாக அனுபவிக்க முடியவில்லை. நினைத்ததை சாப்பிடக்கூட முடியவில்லை. இத்தகைய ஒரு வாழ்க்கையை யோசித்துப் பாருங்கள். எவ்வளவு கொடுமையான வாழ்க்கை. ஆரோக்கியமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நாம் இந்த பதிவில் சற்று பார்க்கலாம்.

நாம் அன்றாடம் உபயோகிக்கும் நம்முடைய மோட்டார் சைக்கிள், கார், ஏசி போன்ற பொருட்கள் பழுதாகாமல் இருக்க வேண்டுமென விரும்பி அவ்வப்போது சர்வீஸ் செய்து நன்றாக வைத்துக் கொள்ளுகிறோம். இவை பழுதாகிப் போனாலும் வேறொன்றை உடனே வாங்கிக் கொள்ளலாம். ஆனால் நாம் நம்முடைய உடலைப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்று ஒருபோதும் சிந்திப்பது கூட இல்லை. வியாதி என்ற ஒன்று வந்த பின்னர்தான் அதற்கான தீர்வை நோக்கி ஓடுகிறோம். மருத்துவர்கள் எச்சரித்த பிறகே உடற்பயிற்சிகளைச் செய்யத் தொடங்குகிறோம். பலர் காலம் கடந்து செல்வதன் காரணமாக விலை மதிக்க இயலாத உயிரைக் கூட இழக்க நேரிடுகிறது. முறையான உடற்பயிற்சி, அளவான உணவு, கடின உழைப்பு இவற்றின் மூலம் பல வியாதிகளை நம்மால் வரும் முன்னால் தடுக்க முடியும். ஆரோக்கியமாக வாழ முடியும்.

உடல் நலம் மிகவும் முக்கியம். அதைவிட முக்கியம் மனநலம். நம்முடைய மனதானது ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் இருந்தால்தான் நம்மால் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும். மனம் எக்காரணத்திலாவது சோர்ந்துபோய் பாதிக்கப்பட்டால் நமது உடல் நலம் வெகுவாக பாதிப்படையும்.

தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் நமது மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு மிகவும் அவசியமாகும். சிலர் தொடர்ந்து ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருப்பார்கள். பணம் ஒன்றே அவர்களுடைய குறிக்கோள். ஆனால் ஒரு கட்டத்தில் சம்பாதித்த பணத்தை அவர்களால் அனுபவிக்க இயலாமல் போய்விடும் துர்பாக்கியமான நிலைமை உண்டாகிவிடுகிறது. கடினமாக உழைக்கவேண்டும். ஆனால் இடையிடையே சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிலும் ஒரு வரைமுறையை பின்பற்றி வாழப் பழகிக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் உடல்நலம் நிச்சயம் கெடும். பின்னர் உழைக்கவே முடியாத அளவிற்கு நிலைமை மோசமாகிவிடும்.

உணவை அளவாக சாப்பிடுங்கள். பசி எடுத்த பின்னரே சாப்பிடுங்கள். எண்ணெயால் செய்யப்பட்ட திண்பண்டங்களை அடிக்கடி சாப்பிடாதீர்கள். பழங்களை தினந்தோறும் சாப்பிடப் பழகிக் கொள்ளுங்கள். காற்கறிகள் மற்றும் கீரைகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் நிறைய குடியுங்கள்.

தினந்தோறும் குறைந்தபட்சம் அரைமணிநேரமாவது நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். காலையில் நடப்பது நல்லது. முடிந்தால் முறையாக மூச்சுப்பயிற்சிகளை கற்றுக் கொண்டு காலையில் தினமும் செய்தால் நோய் உங்களை நெருங்க பயப்படும்.

இதையும் படியுங்கள்:
உடலும், மனமும் சுறுசுறுப்பாக இயங்கினால்தான் வெற்றி!
Health is the basis of success in our life!

உடல் நலம் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியமானது மனநலம். மனதை எப்போதும் லேசாக வைத்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். டென்ஷன் உடல் நலத்தின் முதல் எதிரி என்பதை நினைவில் கொள்ளுங்கள். பொறாமையும் கோபமும் உங்கள் உடல்நலத்தைக் கெடுத்து உங்களை அழித்து விடும். எந்த சூழ்நிலையையும் நிதானமாக யோசித்து அந்த சூழ்நிலையை உங்களுக்கு பயன்படும் விதத்தில் சாதகமாக்கிக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் வெற்றி பெறத்துடிப்பவர்களும் சாதனை செய்ய விரும்புபவர்களும் ஆரோக்கியத்தின் அவசியத்தை உணரவேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் தீட்ட இயலும் என்பது பழமொழி. உடலும் மனமும் நலத்தோடு இருந்தால்தான் சுறுசுறுப்பாக இயங்கி சாதனைகளைச் செய்து அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். சாதனைகள் நிகழ்த்தி பாராட்டு மழையில் நனையுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com