
குளிருக்கு இதமாக டீ, காபி என அருந்துவோம். அதையே சக்தி மிகுந்த சிறந்த பானமாக மூலிகைக் கொண்டு தயாரித்துப் பருக குளிருக்கு கதகதப்பாக இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும்.
ஆம்லா தேநீர்:
கிரீன் டீயையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த பானம் இது.
நெல்லிக்காய். 2
புதினா இலைகள் 6
இஞ்சி ஒரு துண்டு
ஓமம் 1/2 ஸ்பூன்
தேன் சிறிது
நெல்லிக்காயை கொட்டையுடன் சிறிது தட்டி எடுக்கவும். இஞ்சியின் தோல் நீக்கி நசுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு தட்டிய இஞ்சி, நெல்லிக்காயையும் போட்டு ஓமத்தையும், புதினா இலைகளையும் கையால் நன்கு கசக்கி சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். எசன்ஸ் முழுவதும் நீரில் இறங்கியதும் சிறிது நேரம் ஆற வைத்து வடிகட்டி ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருக ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த சத்து மிகுந்த பானம் தயார்.
முட்டைகோஸ் தேநீர்:
முட்டைகோஸ் 1/2 கப்
சியா விதைகள் 1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு சிறிதளவு
உப்பு சிறிது
மிளகு தூள் 1 ஸ்பூன்
நாட்டு சக்கரை 1/2 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய முட்டைகோஸுடன் சிறிது உப்பு, சேர்த்து வேக விடவும். நன்கு வெந்ததும் கரண்டியால் மசித்துக் கொண்டு மிளகுத்தூள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஊற வைத்த சியா விதைகள், எலுமிச்சை சாறு, நாட்டுச்சக்கரை சிறிது ஆகியவற்றைக் கலந்து பருக குளிருக்கு ஏற்ற, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சுவையான பானம் தயார்.
அதிமதுர தேநீர்:
அதிமதுர துண்டு 2
(அ) பொடி 1 ஸ்பூன்
தண்ணீர் 2 கப்
தேன் சிறிது
அதிமதுரம் பொடியாகவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கின்றது. இனிப்பு சுவை கொண்ட ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் கொண்ட அதிமதுரத்தை பொடியாகவோ அல்லது அதிமதுரத் துண்டை இரண்டு கப் தண்ணீரில் தட்டி போட்டு கொதிக்க விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து ஆறேழு நிமிடங்கள் கொதித்ததும் இறக்கி வடிகட்டி சிறிது தேன் கலந்து பருக தொண்டை வலி, தொண்டைக் கமறல், தொண்டைப்புண், சளி, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது.