மனித குலம் இன்னும் தழைத்தோங்கி கொண்டிருக்க இதுதான் காரணமோ?

Help each other
Help
Published on

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் 

நன்மை கடலின் பெரிது 

 - என்றார் வள்ளுவர்.

பிரதிபலன் பார்க்காமல் பிறர் நமக்கு செய்யும் உதவியானது கடலை விட பெரியது  என்பதே இதன் பொருள். இந்த மாதிரியான ஒரு அபூர்வ நிகழ்வினை இன்றைய காலகட்டங்களில் பார்க்கும்போது மனதுக்கு மிகவும் நிறைவாக இருக்கிறது. ஏனென்றால் பல நேரங்களில் எதிர் வீட்டில் இருப்பவரின் பெயர் தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் முகமறியாத மனிதர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பும் ஆறுதலுமான வார்த்தைகளும் வறண்ட நிலங்களில் விழும் மழை நீரை போல மீண்டும் நம் மனதில் மனித குலத்தின் மீதான நம்பிக்கையை ஊற்றெடுக்க வைத்து விடுகின்றன.

சமீபத்தில் ஒரு நாள் எனது மகனை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சென்று இருந்தேன். வரும் வழியில் திடீரென மழை பிடித்துக் கொண்டது. எப்படியும்  வீடு வந்து சேருவதற்கு 5 நிமிடமாவது ஆகிவிடும். வீட்டில் மற்றொரு குழந்தையை தனியாக விட்டுவிட்டு சென்றிருப்பதால் மழைக்காக இன்னொரு இடத்தில் ஒதுங்குவதும் சாத்தியமில்லாத காரியமாகி விட்டது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே வேகமாக நடக்கும் வேளையில் ஒரு பெரிய வீட்டின் கதவை திறந்து கொண்டு பெண்மணி ஒருவர் அவசரமாக குடையைக் கொண்டு வந்து நீட்டினார். 'நீங்கள் தினமும் இந்த வழியில் செல்வதை நான் பார்த்திருக்கிறேன் நாளை வரும் போது குடையை கொண்டுவந்து தாருங்கள், குழந்தையோடு நனைய  வேண்டாம்!' என்று சொன்ன அந்த பெண்மணியின் வார்த்தைகளும் அவரின் செயல்களும் மனதுக்கு மிகவும் நெருக்கமாகிவிட்டது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது.

இதுதான் மனிதர்களுக்கே உரிய தனித்துவம் என்றும், இந்த ஒரு உணர்வு  மனிதனுக்குள் இன்னும் ஊற்றெடுத்துக் கொண்டிருப்பதால்தான் மனித குலம் இன்னும் தழைத்தோங்கி கொண்டிருக்கிறது என்றும் தோன்றியது.

மறுநாள் அந்த குடையைக் கொண்டு சென்று கொடுத்த போது அந்த பெண்மணி 'அடிக்கடி வீட்டிற்கு வாருங்கள்!' என்று கூறினார். உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இதற்கு முன் அதே வழியில் சென்றிருந்தாலும் கூட ஒரு முறை கூட அந்த பெண்மணியை நேருக்கு நேர் பார்த்ததும் இல்லை, அவரோடு பேசியதும் இல்லை. அவரிடம் விடைபெற்ற போது தான் ஒரு விஷயம் நன்கு புரிந்தது. இந்த உலகம் அடிப்படை தேவைகளான உணவு,  உடை,  இருப்பிடத்தோடு நான்காவதாக உறவுகள் ஒன்றையும் ஆழமாக தேடிக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடிந்தது.

மற்றொரு நாள் ஒரு குறிப்பிட்ட பணியை பற்றிய செய்தியை தெரிந்து கொள்வதற்காக பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. ஏற்பட்ட சிக்கலை விளக்கி கூறி அதன் தற்போதைய நிலை என்ன? என்பது தெரிய வேண்டும் என்று கேட்டபோது, எதிர் முனையில் பதில் அளித்தவர் அதற்குரிய காரணத்தை கூறிவிட்டு 'கவலைப்படாதீர்கள் மேடம்! நிச்சயம் நல்லது நடக்கும்' என்று கூறினார். அலுவலக ரீதியாக ஒன்றை  தெரிந்து கொள்வதற்காக நடைபெறும் உரையாடலில் எதிர் முனையில் இருப்பவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அவர் கூறிய அந்த  வார்த்தைகள் மனிதர்கள்மேல் ஒரு  நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்:
சாணக்கியர் கூற்று! இந்த 8 மனதில் ஏற்று!
Help each other

வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் ஆயிரம் பிரச்சனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய வாழ்க்கையில் நம் மனம் எதிர்பார்ப்பது இந்த ஒரு சிறு அன்பையும், பாராட்டையும், நம்பிக்கையையும் தானே!

ஒரு விஷயத்தை நன்கு நினைத்துப் பாருங்கள்! நம்மிடையே இருக்கக்கூடிய சிறுசிறு நல்ல பண்புகள் தானே நம்மை மற்றவர்களோடு ஒன்றுசேர்த்துக் கொள்ள உதவுகின்றன! நாம் நம்முடைய உறவுகளையும் நட்புகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும், பிறர் நம்மை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும் முக்கிய காரணம் நம்மிடையே இருக்கும் குண நலன்கள் தானே! அப்படியானால் இன்று நாம் கற்றுக்கொள்ள வேண்டியதும் கற்றுக் கொடுக்க வேண்டியதும் இத்தகைய ஆகச் சிறந்த பண்புகளைத் தானே!

எத்தகைய மனிதனையும் மாற்றக்கூடிய வல்லமை ஒருவருடைய மிகச் சிறந்த நற்பண்புகளுக்கு உண்டு. நாம் எதிர்கொள்ளும் மனிதர்களிடம் நமக்கு அவை கிடைக்க விட்டாலும் பரவாயில்லை, ஆனால் நாம் சந்திக்கும் மனிதர்களிடம் நல்ல ஒரு நட்பையும் பாராட்டையும்  அன்பையும் விதைத்து செல்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com