
மனிதன் பிறந்தது முதல், கருப்பையில் இருக்கும் பொழுதும் கூட இறக்கும் வரை பிறர் உதவி இன்றி வாழ முடியாது. "எனக்கு யாருடைய தயவும் தேவை இல்லை என்று சொல்பவனுடைய அறியாமையைப்போல, அகங்காரத்தைப்போல வேறு எதுவும் கிடையாது. கடவுள் நம்மைப் படைத்ததே நாம் அன்பும், கருணையும் கொண்டு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொண்டு வாழுவதற்காகவே அன்றி, வேறு எதற்காகவும் அல்ல. ஒருவன் எந்த அளவுக்கு அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துகிறானோ அந்த அளவுக்கு அவனுடைய மனம் அமைதி அடைகிறது. விசாலமாகிறது. ஏனெனில், இதுதான் அவனது படைப்பின் இயல்பு.
சில பேர்கள் உங்களிடம் நேரடியாக உதவி கேட்க தயங்குவார்கள். அல்லது வெட்கப்படுவார்கள். அவர் நம்மிடம் வந்து கேட்கட்டுமே என்று இருக்காமல், நீங்களே நிலைமையை அறிந்து வலியச் சென்று உதவி செய்யவும் நீங்கள் உதவி செய்யும் பொழுது இந்த உதவி நமக்கு எப்படி பிற்பாடு பயன்படும் என்று தினைக்காதீர்கள். இதற்கு 'வியாபார உதவி' என்று பெயர்.
ஒரு குரு, மக்களிடம் சென்று, "தியானம் செய்யுங்கள் பிறருக்கு உதவி செய்யுங்கள்" என்று பலவாறாக எடுத்துரைத்தார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து, "இப்படி நீங்கள் கூறுகிறீர்கள். இதனால் உங்களுக்கு என்ன பயன்? என்று கேட்டார்.
அதற்கு குரு "எந்தப் பயனும் இல்லை" என்றார். அந்த ஆள் மேலும் “அப்படி என்றால் எதற்காக இந்தக் காரியத்தை செய்கிறீர்கள்? என்று கேட்டார்.
குரு நீங்கள் மாலையில் கடற்கரையில் உட்கார்ந்து ஓய்வு எடுக்கிறீர்களே எதற்காக? இதனால் என்ன பயன்? என்று கேட்டார்.
நாம் பயன் கருதி பல காரியங்களைச் செய்தாலும் ஒரு சில காரியங்களை நம் ஆத்மாவுக்காக பயன் கருதாது செய்ய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் இந்த சமூகத்துக்குக் கடன்பட்டிருக்கிறோம். பல பேர்கள் உங்களுடைய உணவு, இருப்பிடம், உடை போன்றவைகளுக்கு தன் உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
நீங்கள் உயர, நீங்கள் நல்லபடியாக வாழ, இந்தச் சமூகம் உங்களுக்கு பலவழிகளில் உதவி செய்திருக்கிறது. ஆகவே, நீங்களும் இந்த இந்த உலகத்துக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும். இந்த உலகத்தில் உங்களுடைய பெயரும் பதிக்கப்பட வேண்டும். இரக்கப்படுவது உங்கள் அன்பு மனம். உதவி செய்வது உங்கள் கருணை மனம். ஒருவரிடம் இந்த இரண்டு மனமும் இருக்கவேண்டும்.
ஒன்றுமே இல்லாத சந்நியாசிகள் கூட இந்த உலகத்துக்கு ஏதாவது செய்கிறார்கள். உங்கள் இலக்கை அடைய அதுவும் உதவி செய்யவும். ஏனென்றால், நீங்கள் எந்த அளவுக்கு இந்த உலகத்துக்கு உதவி செய்ய நினைக்கிறீர்களோ, அதற்கு மேலும் இந்த உலகம் உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கும் .நீங்கள் வெறும் வெற்றி வெற்றி" என்று மட்டும் தியானம் செய்து கொண்டு இருப்பது அவ்வளவு பலனைக் கொடுக்காது.
உங்கள் இலக்கின் வெற்றி எங்கிருந்து வரும்? இந்த உலகத்தில் இருந்துதான். இல்லையா? அப்படி இருக்கும்பொழுது, நீங்கள் இந்த உலகத்துக்கு எதுவுமே செய்யாமல், உங்கள் இலக்கின் வெற்றியை அடைந்து ஒரு பயனும் இல்லை என்பதால் பிறருக்கு உதவி செய்ய தயங்காதீர்கள்.