
வாழ்க்கை என்பது எதிர்பார்ப்புகளின் முடிவில்லா சுழற்சியாகத்தான் இருக்கிறது. சமூகம் நம்மை எப்படி பார்க்கிறது, என்ன எதிர்பார்க்கிறது, குடும்பம் என்ன எதிர்பார்க்கிறது, நண்பர்கள் என்ன நினைக்கிறார்கள், என்று பல்வேறு விதமான சிந்தனைகள் நம் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த சத்தத்தில். நமக்கு விடுதலையை தரும் சில உண்மைகளில் ஒன்றை நாம் மறந்துவிடுகிறோம். ஆமாங்க, நமக்கு விடுதலையை தருவது மகிழ்ச்சிதான். நாம் எல்லாவற்றையும் நினைத்து கவலைப்பட்டு அந்த மகிழ்ச்சியை முற்றிலும் இழந்துவிடுகிறோம். மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கான ஐந்து எளிய வழிமுறைகளை பார்க்கலாமா..?
அனைவரையும் மகிழ்விக்க முயற்சி செய்வதை நிறுத்துங்கள்:
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி அதிகமாக கவலைப்படுவதுதான் மகிழ்ச்சியின்மைக்கான முக்கியமான காரணமாகும். மற்றவர்களை திருப்திப்படுத்துவதை பற்றி நினைத்துகொண்டே இருந்தால், நீங்கள் உங்களுடைய சொந்தத் தேவைகளை நிறைவேற்றிகொள்ள முடியாமல் உங்களுடைய மகிழ்ச்சியையும் இழந்து விடுவீர்கள். உண்மை என்னவென்றால், நீங்கள் என்ன செய்தாலும், சிலர் அதை ஏற்க மாட்டார்கள். அவர்களுக்கு என்னைப் பிடிக்குமா?”, இந்த பொருள் பிடிக்குமா? என்றெல்லாம் சிந்தித்து கொள்வதற்குப் பதிலாக, “நான் இதைச் செய்தால் எனக்கு என்னைப் பிடிக்குமா?” என்று கேட்டுப் பாருங்கள். அது உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடும்.
இரக்கத்திற்கும் அதிக அக்கறைக்கும் உள்ள வித்தியாசத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்:
மற்றவர்களைப் பற்றி அக்கறை கொள்வது அவசியம்தான். அவ்வாறு செய்வதால் அது நம்மை அடுத்தவர்களோடு இணைத்து வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது. ஆனால் இரக்கம் அதிகப்படியான அக்கறையாக மாறும்போது, நீங்கள் சுமக்க முடியாத சுமைகளை சுமக்க வேண்டியதாக இருக்கும். உதாரணத்திற்கு உங்களுடைய நண்பர் ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது, நீங்கள் அதைப் பற்றி அவரிடம் கேட்கலாம், முடிந்த உதவிகளை அவருக்கு செய்யலாம், அனுதாபம் கொள்ளலாம். ஆனால் நீங்கள் அவர்களை விட அதிகமாக அவர்களின் வலியை உள்வாங்கினால், அது அதிக அக்கறை காட்டுதலுக்கு சமமாகும்.
வெற்றி, தோல்வி அல்லது வேறு எதுவாக இருந்தாலும், அதைப் பற்றியே நினைத்து கொண்டு இறுக பிடித்துக்கொண்டால் அது துன்பத்தை உருவாக்குகிறது என்று புத்த மதம் நமக்குக் கற்பிக்கிறது. விட்டுவிடுவதே அதற்கான மாற்று மருந்து. ஒரு விஷயத்தையோ அல்லது முடிவையோ உங்களால் மாற்ற முடியாது என்ற பட்சத்தில் அதை பற்றி மேற் கொண்டு யோசிக்காமல் விட்டு விடுவதுதான் நல்லது. நீங்கள் ஒரு செயலிற்கான விளைவை விட அதற்கான முயற்சியில் கவனம் செலுத்தும்போது, நீங்கள் அமைதியைக் காணலாம்.
உங்கள் மனதை நேர்மறை எண்ணத்தோடு சுத்தமாக வைத்திருக்கவும்:
நம்முடைய வாழ்க்கையானது, கடமைகள் மற்றும் எதிர்பார்ப்புகளால் நிறைந்திருப்பதால் நாம் அதிகமாக கவலைப்படுகிறோம். குழப்பங்களை அதிகரித்து கொண்டால், அது உங்கள் மனதையும் அசுத்தப்படுத்தலாம்.
ஓப்பீட்டைத் தூண்டும் சமூக ஊடகக் கணக்குகளைப் பின்தொடர்வதை நிறுத்துதல், உங்களை சோர்வடையச் செய்யும் கடமைகளையோ அல்லது எண்ணங்களையோ நிராகரித்தல் அல்லது ஒவ்வொரு நாளும் அமைதியான நேரத்தை ஒதுக்குதல் ஆகியவற்றின் மூலமாக மனதை சுத்தமாக வைத்திருக்க முடியும்.
தியானமும் மன உறுதியும் இங்கு சக்தி வாய்ந்தவை. ஐந்து நிமிட சுவாசம் கூட உங்கள் மனம் நீங்கள் சுத்தம் செய்யக்கூடிய ஒரு இடம் என்பதை உங்களுக்கு நினைவூட்டும்.
குற்ற உணர்ச்சியின்றி எல்லைகளை அமைக்கவும்:
எல்லைகள் என்பது சுயமரியாதையின் செயல். நீங்கள் "இல்லை" என்று சொல்லும்போது, நீங்கள் சுயநலமாக இருக்கிறீர்கள் என்பதாக அர்த்தம் இல்லை. சில நேரங்களில் நீங்கள் உங்களுடைய நலனுக்காக இதை கூற வேண்டி இருக்கலாம். உங்களிடம் பணம் குறைவாக இருக்கும் சமயத்தில் நெருங்கிய நண்பர்களோ அல்லது உறவினர்களோ பண உதவி கேட்டால் அந்த சமயத்தில் உங்களால் கொடுக்க இயலாது. ஆனால் நீங்கள் என்னிடம் இப்போது இல்லை என்று எப்படி சொல்வது என்று எண்ணி கொண்டிருந்தால் உங்களுடைய ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்.
சில சமயங்களில் உண்மையிலேயே அக்கறை கொள்ளும் விதத்தில் சில முக்கிய காரணங்களும் இருக்கும். அந்த சமயத்தில் நீங்கள் எப்படியாவது உதவி செய்ய முயற்சிக்கலாம். ஆகவே நம்முடைய எல்லைகளை முக்கியமான இடங்களில் அதிக இருப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் வெளிப்படுத்தினால் நல்லது.
நமக்கு எது தேவையோ அவசியமோ அதில் அக்கறையோடு தியானத்தை செலுத்தி, மனிதிலிருந்து வேண்டாத எதிர்பார்ப்புகளை அகற்றிவிட்டால் நிச்சயமாக மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.