
"பயணங்கள் நமக்கு பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுக்கின்றன" – பெஞ்சமின் டிஸ்ரேலி.
அந்தப் பெரிய மலை அடிவாரத்தில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன், தான் மூங்கில் மற்றும் தழைகளால் கட்டமைத்திருந்த அந்தக் குடிலையும் பசுமையான வயலில் விளைவித்திருந்த தானியங்களின் வளர்ச்சியையும் கண்டு பெருமிதத்துடன் அலைபேசி வாயிலாக தனது பெற்றோர்களுக்கு காணொளி பதிவாக காண்பித்திருந்தான்.
அவனின் தந்தை அதற்கு மறுமொழி அனுப்பி இருந்தார் "நீ வெற்றி பெற்று விட்டாய் மகனே. நினைத்ததை சாதித்து விட்டாய். மகிழ்ச்சி" என்று. அவன் நினைத்துப் பார்த்தான். தந்தை தன்னைப் பாராட்டியது அவனுக்குள் பெரும் மகிழ்ச்சியை உண்டு செய்தது. ஏனெனில் மெத்தப் படித்திருந்த அவனின் மகிழ்ச்சி பயணங்களில் மட்டுமே என்பதை அவன் உணர்ந்தே இருந்தான்.
ஒரு கட்டத்தில் பல லட்சங்கள் வருமானம் மிக்க தனது பணியை விட்டுவிட்டு தான் சேர்த்து வைத்திருந்த பணத்தின் மூலம் பல திசைகளில் பயணிக்க ஆரம்பித்தான். பயணத் திட்டத்தை தன் பெற்றோரிடம் கூறியபோது அவன் தந்தை ஒப்புக்கொள்ளவே இல்லை. "உன் அலுவலகத்தில் கிடைக்காத வெற்றி எப்படி உன் பயணத்தின் மூலம் கிடைக்கும்" என்று வாதாடினார் அவர். அவன் எதிர்த்து வாதாடவில்லை. சொல்வதை விட செயலில் இறங்கி சாதித்து காட்டுவதே வெற்றியின் முதல் படி என்று உணர்ந்தவன் அவன். தந்தையிடம் விடை பெற்று விட்டு பயணிக்க தொடங்கினான். ஒவ்வொரு பயணத்திலும் அவன் கற்றுக் கொண்ட அநேக வழிகள் அவனுக்கான களத்தை அமைத்துக் கொடுத்தது.
இதோ தன் இடையறாத பயணங்களினால் பல்வேறு அனுபவங்களைப் பெற்றதுடன் பசுமை கொஞ்சும் இந்த மலையடிவாரத்தை அவன் தனக்கானதாக தேர்ந்தெடுத்துக்கொண்டான். இதில் வசிக்க ஒரு குடிலை அமைத்துக் கொண்டான். விவசாயத்தைக் கற்று இன்று ஒரு விவசாயியாக அவன் மிளறுகிறான். அவன் தந்தை வாயாலே பாராட்டையும் பெற்று விட்டான். அவன் தன் நண்பனிடம் கூறியது இது, நான் "வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் ரசித்து ரசித்து ஜெயிக்கும் வழியை கண்டுபிடிக்கிறேன் என் பயணங்களில் மூலம்".
இயற்கை நம்மை ஓரிடத்தில் தேங்க விடாமல் தொடர்ந்து இயங்க வைக்கும் தன்மை கொண்டது. இதை புரிந்து கொண்டால் நமது பயணங்களை ஆக்கபூர்வமான குறிக்கோளை நோக்கிய பயணமாக அமைத்து, நமது சக்தியை தகுந்த முறையில் செலவு செய்து நல்ல அனுபவங்களைப் பெற முடியும்.
புது முயற்சிகளும், செயல்களும் சவால்களோடுதான் இருக்கும் என்ற புரிதலுடன், அவற்றை மனவுறுதியோடு எதிர்கொள்வதுதான் வெற்றிக்கு வழி.
பயணங்களின்போது நாம் சந்திக்கும் பலதரப்பட்ட சூழல்கள், பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள், நாம் அறியாத பல வாய்ப்புகள் இவையே நமக்குள் இருக்கும் திறமையை ஊக்குவிக்கும் காரணிகளாகும். பயணங்களின் புதிய சூழல்கள் நம்மைப்பற்றி நாமே பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்ள நல்லதொரு வாய்ப்பாக அமையும். முக்கியமாக பயணங்கள் நமக்கு பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுப்பது உண்மை.
ஆகவே, பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தவற விடாமல் பயணித்து வாழ்வை ரசித்து வாழ்வில் வெற்றி காண்போம்.