
ஆங்கிலத்தில் ‘ஹானஸ்டி’ என்று சொல்லப்படுகின்ற 'நேர்மை' எனப்படுவது, மனிதர்களிடத்தில் இருக்க வேண்டிய அல்லது எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு குணம். நேர்மைத் திறம் என்பது, ஒருவர் உண்மையாகவும், நேர்மையாகவும், நீதியாகவும் நடந்துகொள்ளும் ஒரு பண்பு.
பொதுவாக மனிதர்கள் தங்களிடத்தில் பழகுபவர்கள் நேர்மையாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் அந்த நேர்மையை மற்றவர்களிடத்தில் பழகுகின்ற போது வெளிப்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
நேர்மையுடையவர்கள் சமூகத்தில் என்றும் ஒரு நல்ல மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்று விடுகிறார்கள். ஆனால் இந்த காலகட்டத்தில், அவர்களை ஏமாளிகள் என்றும், பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் நினைப்பவர்களும் உண்டு.
ஒருவரின் தோற்றத்தை அல்லது உருவத்தை வைத்து 'நேர்மை' மதிப்பிடப்படுவதில்லை. ஒருவருடைய கல்வி, பதவி, வசதி அல்லது தொழில் மூலமாக நேர்மையாளர் என்கிற பட்டத்தை பெற்று விட முடியாது.
ஏனென்றால் 'நேர்மை' என்பது ஒருவர் தன்னுடய மனதில் உள்ளதை பேசும் முறை, பேசுவதை போல் நடந்துகொள்ளும் முறை மற்றும் அவருடைய செயல் ஆகியவற்றைப் பொறுத்தது. அதாவது அவரிடத்திலிருந்து இயல்பாகவே வெளிப்படுகின்ற குணாதியசம்.
அப்படி ஒரு குணாதிசயத்தை, வியக்க வைக்கும் நேர்மைத்திறம் பற்றி ஒரு கதையைப் படித்த போது தெரிந்துகொள்ள முடிந்தது.
ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியரை, அவருடைய முன்னாள் மாணவர் ஒரு விழாவில் சந்திக்கின்றார். அப்போது "நான் உங்கள் முன்னாள் மாணவன். உங்களுக்கு என்னைத் தெரிகின்றதா?" என்று ஆசிரியரை கேட்கிறார்.
ஆசிரியரோ "மன்னிக்கவும். எனக்கு நினைவில் இல்லையே" என்றார்.
"அய்யா, நீங்கள் செய்த செயல் ஒன்று, என்னுடைய குணத்தை மாற்றி, ஒரு நல்ல எதிர்காலத்தை நான் உருவாக்கிக்கொள்ள உதவியாக இருந்தது..."
“ஓஓ...அப்படியா... என்னுடைய எந்த செயல் உங்களை மாற்றியது?" என்று மாணவரிடத்தில் கேட்டார் ஆசிரியர்.
அதற்கு அந்த முன்னாள் மாணவர்,
“ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழனுடைய விலையுயர்ந்த கடிகாரத்தை, நான் திருடி விட்டேன். அப்போது ஆசிரியரியாக இருந்த உங்களிடத்தில் அவன் அந்த கடிகாரத்தைக் காணவில்லை என்று சொன்னான். நீங்களும் அந்தக் கடிகாரத்தை யார் எடுத்து இருந்தாலும், அதை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவிக்க, அதை நான் எப்படி திருப்பித் தருவது என்று மிகவும் மன சங்கடத்தில் இருந்தேன் .
உடனே நீங்கள் வகுப்பறையின் கதவை அடைத்து விட்டு, எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னீர்கள். நான் மாட்டிக்கொள்ளப் போகிறேன் என்ற எண்ணத்தில், பயத்தோடு இருந்தேன். அந்த வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவர்க்கும் மத்தியில் நான் திருடியது தெரிந்தால், அது மிகவும் அவமானமாக இருக்கும் என்று எனக்கு கவலையாக இருந்தது .
அந்த நேரத்தில் நீங்கள் "யார் அந்தப்பொருளை எடுத்திருந்தாலும், அவர்களுக்கு நான் எந்த தண்டனையையும் தரப்போவதில்லை. நீங்கள் செய்த தவறை நீங்களே உணர்ந்து திருந்திக்கொள்ள ஒரு வாய்ப்பு தருகிறேன், அதனால் மாணவர்கள் எல்லோரும் வரிசையாக நில்லுங்கள். ஆனால் கண்ணை மூடிக்கொண்டுதான் நிற்க வேண்டும்" என்றுச் சொல்லவே, நாங்கள் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு நின்று இருந்தோம். நீங்கள் ஒவ்வொரு மாணவனின் சட்டைப் பையை , உடையை, ஆராய்ந்துக்கொண்டே வந்தீர்கள்.
என்னுடைய சட்டைப்பையிலும் கையை விட்டு, நான் மறைத்து வைத்திருந்த அந்த கடிகாரத்தை எடுத்துவிட்டீர்கள். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் யாருக்கும் அது தெரியாது. அதற்கு பிறகு நீங்கள் அந்த கடிகாரத்தை அந்த மாணவனிடம் கொடுத்து விட்டீர்கள்.
ஆனால் இது பற்றி என்னிடம் எப்போதுமே நீங்கள் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இதைப் பற்றி சொல்லவும் இல்லை. நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றியதும் இல்லாமல், என்னைத் திட்டாமல் இருந்தீர்கள்.
நான் என்னுடைய தவறை உணர்ந்தேன். அந்த சம்பவத்தில் இருந்து நேர்மையாக வாழ வேண்டும் என்கிற ஒரு சிந்தனையை எனக்குள் ஏற்படுத்தி விட்டீர்கள்” என்று தழுதழுத்த குரலில் அந்த மாணவர் சொன்னார்.
இதனைக்கேட்ட அந்த ஆசிரியர் "அப்படியா... மிகவும் சிறப்பு" என்றார்.
இப்போது அந்த மாணவர் மீண்டும் கேட்டார்.
"அய்யா, இப்பொழுதாவது என்னை தெரிகின்றதா?!" என்று கேட்க, அதற்கு அந்த ஆசிரியர்...
"இல்லையே!... அப்போது அந்தக் கடிகாரத்தை எடுத்தவர் யார் என்பது எனக்கும் தெரியாது. ஏனென்றால் நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார்.
அந்த ஆசிரியரின் பதில் அந்த மாணவரை ஆச்சரியப்பட வைத்ததோடு கண்கலங்கவும் வைத்து விட்டது. தவறு செய்தவரை தண்டிக்க மாட்டேன் என்று அவர் கொடுத்த வாக்குறுதிபடி நேர்மையாகவும், ஒரு மாணவனின் மனம் நோகக்கூடாது என்று நினைத்து செயல்பட்ட அந்த ஆசிரியரின் எண்ணம் அற்புதமானது!. நேர்மையானது!
'நெஞ்சில் உரமும் இன்றி, நேர்மைத் திறமும் இன்றி
வஞ்சனை சொல்வாரடி கிளியே......வாய்ச் சொல்லில் வீரரடி '
மனதில் உறுதி இல்லாதவர்கள், நேர்மையைக் கடைபிடிக்கும் திறனும் அற்றவர்கள். வெறும் வாய்ப்பேச்சில் நேர்மையைப் பற்றி பேசுகிறவர்கள் வஞ்சகர்களே! என்று பொருள்பட மகாகவி பாரதியார் பாடியிருக்கிறார்.
மற்றவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் மரியாதையையும் அதிகரித்துக்கொள்ள, மனதில் உறுதியோடு, நீங்களும் நேர்மையைக் கடைபிடியுங்கள்.