நேர்மை பணம் சம்பந்தப்பட்டதல்ல; சொன்ன சொல் மீறாமல் இருப்பது -கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது - குடும்பத்திடம் உண்மையாக இருப்பது சமூகத்திடம் நியாயமாக இருப்பது-
இனிய நினைவுகளால் மட்டுமே நிரம்பி வழிவது. அனைத்தையுமே அது உள்ளடக்கியது.
நம் எண்ணம், சொல், செயல் ஆகியவை ஒரே புள்ளியில் குவியவேண்டும். அவற்றில் அன்பும், பண்பும் விஞ்சி யிருக்கவேண்டும் அப்போதுதான் நம் நேர்மையில் நேர்மை இருக்கும்.
மற்றவர்களுக்காக நேர்மையாக இருப்பவர்கள், அவர்கள் தனிமையில் இருக்கும் போதெல்லாம் தவறிழைப்பார்கள். தடுக்கி விழுவார்கள். அவர்களுக்கு நேர்மை முகமல்ல; முகமூடி மட்டுமே.
நேர்மை என்பது நம் ஆன்மா தடம் பிறழாமல் இருக்க விளக்காக இருக்கும் ஒளிச்சுடர். எந்தச் சூழலிலும் தன் உண்மைத் தன்மையையும், உயிர்த்தன்மையையும் இயல்பாக வைத்திருக்கும் மன முதிர்ச்சியே. நேர்மை, சொர்க்கம், நரகம் என்ற சொற்களுக்காகத் தன்னை வரையறுக்காமல், செய்கிற செயலே நேர்மையின் நெறிதிறம் என்று வாழ்பவர்கள் சான்றோர்கள்.
பெரியார் சின்ன வயதில் மூட்டை தூக்கிய அனுபவத்தைக் குறிப்பிடும்போது, "நான் மூட்டை தூக்கியபோது பாரத்தினால் முதுகு குனிந்து இருக்குமே தவிர அவமானத்தால் தலைகுனிந்ததில்லை" என்று கூறியிருக்கிறார். நேர்மையாக இருந்து கூழ் குடிப்பது, தவறுகள் செய்து பால் பாயாசம் செய்து சாப்பிடுவதை விட மேன்மையானது.
சாக்ரடீஸ் சிறைச்சாலையில் மரணதண்டனை விதிக்கப்பட்டு அடைக்கப்பட்டார். அவருடைய சீடர்கள் அவர் தப்பிப்பதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்தனர். ஆனால் சாக்ரடீஸ் அவர்கள் யோசனையின்படி தப்பிக்க மறுத்துவிட்டார். கிளர்ச்சியான சிந்தனையாளரான அவர் நேர்மையாக நடந்துகொண்டார்.
நேர்மையாக இருப்பவர்கள் நேர்மையாக இருந்தால் மட்டும் போதாது அவர்கள் தங்கள் நேர்மையை அவ்வப்போது வெளிப்படுத்தாவிட்டால் அவர்களின் பெயரால் வேறு யாராவது பணம் பண்ணி விடுவார்கள்.
கலையிலும் நேர்மை, செயலிலும் நேர்மை, தொழிலும். நேர்மை என்று வாழ்பவர்கள் வாக்கு சத்தியமாக ஜொலிக்கிறது. மாணவராக இருக்கும்போதே ஆசிரியர் சொல்லியும் காப்பியடிக்க மறுத்தவர் மகாத்மா. நம்முடைய சொல் மிகவும் வலிமை வாய்ந்ததாக மாறவேண்டுமானால் வாய்மை இருக்க வேண்டும்.
வாய்மையே நேர்மை அதுவே நம் கடமையாக இருக்கவேண்டும்.