நாம் ஒரு விஷயத்தைச் செய்யும்போது வெற்றியைப் பற்றிக் கவலைப்படாமல் செய்வதை தீவிரமான விருப்பத்துடன் செய்ய வேண்டும். எதிர்பார்ப்பு எங்கே இருந்தாலும் அங்கே ஏமாற்றத்திற்கும் தயாராக இருக்கவேண்டும். வெற்றியும் தோல்வியும் நாணயத்தின் இரு பக்கங்கள். சுண்டிவிட்ட நாணயம் எந்தப் பக்கம் விழப்போகிறது என்று புரியாமல் அந்தப் பதற்றத்தில் வாழ்க்கை நடத்துவது நமக்கு வழக்கமாகிவிட்டது. நீங்கள் நெருக்கமாக இருப்பவருடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள கூடத் தயாராக இருப்பீர்கள். ஆனால் அவர் பதிலுக்கு எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் உங்களிடம் இருக்குமானால் அங்கே ஏமாற்றத்திற்கான வாய்ப்பு அதிகம்.
ஒரே ஒரு காரியம் உங்களுக்குத்தெரியாமல் மறைத்து அவர் செய்வதைக் கவனித்துவிட்டால், அவர் மீது வைத்த நம்பிக்கை போய் சந்தேகம் முளைவிட்டுவிடும். எனவே மிக நெருக்கமானவர்களிடம் கூட எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதற்காக நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்படி வாழ்க்கை நடத்த முடியும். அதற்கு ஒரு வழிதான் இருக்கிறது. அதன் பெயர் அன்பு.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியில் சிறைகள் நிரம்பி வழிந்து. ஒரு குறிப்பிட்ட அறையில் இருக்கும் சில கைதிகளுக்கு மரண தண்டனை கொடுத்து எண்ணிக்கையைக் குறைக்க முடிவானது. ஒவ்வொருவருக்கும் ஒரு எண் கொடுக்கப்பட்டது. ஒரு நாள் ரிச்சர்ட் என்ற கைதி அழைக்கப்பட்டான். அவன் நடுக்கத்துடன் இருந்தான். பக்கத்தில் இருந்த பாதிரியாரான கைதி ரிச்சர்ட் இடம் "உனக்கு சாக விருப்பமில்லை என்றால் நம் எண்களை மாற்றிக் கொள்வோம். உன் இடத்தில் நான் போகிறேன்" என்றார்.
ரிச்சர்டுக்கு உறுத்தலாக இருந்தாலும் உயிர் மீதுள்ள ஆசையால் உடன்பட்டார். பாதிரியார் மரண மேடைக்கு போனார். அன்று ராத்திரி ஜெர்மனி போரில் தோற்றது. கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ரிச்சர்ட் அதற்குப் பிறகு பல வருடங்கள் உயிர் வாழ்ந்தார். அது பாதிரியார் போட்ட பிச்சை என அவர் மனதை வாட்டியது. அவர் உறவோ அல்லது நண்பரோ கிடையாது. அடுத்தவருக்காக தன் உயிரையே விடத் துணிந்தார். பாதிரியார் மாதிரி தியாகம் செய்ய வேண்டும் என்று இல்லை. அவர் அன்பின் அர்த்தத்தை உணர்ந்திருந்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்தார்.
மிகுந்த அறிவாளிகள் கூட அடுத்தவரிடம் அன்பாக பேசத் தெரியாது. அன்பாக இருக்கச் சொன்னால் எதற்கு என்று கேட்பார்கள். அன்பாக இருப்பது அடிப்படை புத்திசாலித்தனம் என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை.
முடிவைப் பற்றிய சிந்தனை இல்லாமல் செய்வதை முழுமையான ப்ரியத்துடன் செய்தால் வெற்றி நம்மைத்தேடி வரும். வெற்றியை எதிர்பார்க்காததால் தோல்வி பற்றிய பயம் வராது. பயம் இல்லாத இடத்தில் பதற்றம் இருக்காது. இதனால் கவனம் சிதறாது. கவனம் சிதறாமல் போது செய்வதிலேயே மகிழ்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சியுடன் செயல்படும்போது முழுத் திறமையும் வெளிப்பட்டால், வெற்றி நிச்சயம்.