
எல்லா இரவுகளும் விடிந்திருக்கின்றன. நாம் நம்புவது நடக்கும்.
மருத்துவரிடம் நம்பிக்கை இல்லாத நோயாளி எவ்வளவு மருந்து சாப்பிட்டாலும் சந்தேகத்தாலேயே மண்ணில் சாய்ந்து போகின்றான்.
எப்படியும் விடிவது நிச்சயம். துன்பங்கள் துயரங்கள் முடிந்துவிடும். நடக்கிறவரை நட, பாலைவனப் பயணத்திலும் பசுஞ்சோலை தென்படாமல் போகாது என்றுதானே மகான்கள் போதித்தார்கள்.
அசோக வனத்திலே சீதாப்பிராட்டியை வாழவைத்தது நம்பிக்கை
விடுதலைக் களத்தில் பாவேந்தன் பாரதிக்கும், கவிக்குயில் சரோஜினி தேவிக்கும் இருக்கிற மகத்தான இறப்பு - அவர்கள் சுதந்திரத்தின் மேல்வைத்த நம்பிக்கை; இல்லையென்றால் ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று அன்றைக்கே பாடியிருக்க மாட்டான் எட்டயபுரத்துக் கவிஞன்.
வியட்நாமில் கொரில்லாக்கள் இருபது வருடங்களாக போராடினார்கள். ஒரு நாள் அமெரிக்காவையே தோற்கடித்தார்கள். இவர்களது நம்பிக்கையை வாழ்த்தி எழுதிய புத்தகம்தான். "Why the War in Vietnam?" இன்றைக்கும் எல்லோராலும் பேசப்படுகின்ற புத்தகம் இது.'
அமெரிக்கப் பெருநாட்டின் வீதிகளில் மாவீரன் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் உரிமைக்காக போராடியபோது அவர்கள் பாடிய பாட்டின் முதல் வரி "இன்றில்லாமல் போகலாம் நாளை நாளை மறுநாள் என்றாவது ஒருநாள்" இதுதான். இந்த நம்பிக்கையை வலியுறுத்துவதுதான் எண்ணிய எண்ணியாங்கு எய்துப... என்ற குறளோவியம்.
வெட்ட வெளிகளில் வெண்பனித் துயரத்தையே சுவாசித்துக் கொண்டிருக்கின்ற எஸ்கிமோக்களை வாழவைப்பதே என்றைக்காவது ஒரு நாள் சூரியனின் செங்கதிரின் வெதுவெதுப்பு அவர்களது குகைக்குள்ளே எட்டிப் பார்க்கும் என்ற நம்பிக்கைதான்.
உடலோ ஊனம். இருந்த இடத்தை விட்டு நகர முடியாது. எழுந்திருக்கவோ உட்காரவோ படுக்கவோ ஒருவர் துணை இருத்தல் அவசியம். இத்தகைய உடல் குறைபாடுகள் உள்ள ஒருவன் இந்த நூற்றாண்டில் ஆங்கில இலக்கியத்தில் வியத்தகு சாதனை படைத்து பாராட்டுப் பெற்றான். அவன்தான் அலெக்சாண்டர் போப்.
மாவீரன் ஜூலியஸ் சீசர் உலக வரலாற்றின் சரித்திரத்தில் பதியப்பட்டவன். இவனது வீரம் எல்லோரையும் வியக்க வைத்தது. இந்த அஞ்சா நெஞ்சன் காக்கா வலிப்பு நோயால் தாக்கப்பட்டவன் என்பது பலருக்குத் தெரியாத ரகசியம்.
சிறைக்கொடுமையால் அவதிப்பட்டு, நொந்து, தைந்து போய் உடல்நிலை பஞ்சாய் போனபோது ஜான்பண்யன் என்ற ஆங்கில பேராசான் எழுதிய "யாத்திரிகனின் புறப்பாடு"என்ற ஆங்கிலக் காவியம் உலகம் முழுதும் ஆங்கிலம் அறிந்தோர் படிக்கத்தேடும் புத்தகமாக இருந்தது. உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.
மழலைகளுக்கு நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறு கதைகளை எழுதி புகழ் பெற்றவன் ராபர்ட் ஸ்டீபென்சன் நாளெல்லாம் தொடர்ந்து இருமிக் கொண்டும் முக்கி முனகிக்கொண்டும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டவன் அவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செவிப்புலன் கெட்டுபோன பிறகும் தாமஸ் ஆல்வா எடிசன் எப்படி விஞ்ஞானியாக விரிந்து சிறந்திருக்க முடிந்தது?
வாழ்நாள் முழுதும் தனது முதுகுத் தண்டில் ஒரு எலும்பு குறுகிப் போன பிறகும் எவ்வாறு ஜான் கென்னடி வெள்ளை மாளிகையை பரிபாலித்திருக்க முடிந்தது?
குள்ளக் கத்திரிக்காய்போல் குட்டையான உயரம் "குள்ளம்” அவனை பாதிக்காதபடி குதிரை மீதே எப்போதும் தோற்றமளிப்பான். இவனது காலடியில் தஞ்சம் புகுந்த நாடுகள் பல வெற்றிவாகை சூடிய வரலாற்று நாயகன்தான் நெப்போலியன்.
நம்பிக்கைதான் வளமான வாழ்வுக்கு உயிர் மூச்சு.
நமது நம்பிக்கைதான் வாழ்வை சொர்க்கமாகவும் நரகமாகவோ ஆக்கவல்லது.