அன்றாட வாழ்க்கையில் எப்படியெல்லாம் நம்மைச் சுற்றியுள்ளவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம்? இதைப் பற்றி இன்று யோசிக்கலாமா? அடுத்தவர்களைத் 'திருப்தி' ப்படுத்த வேண்டும் என்பதற்காக எப்படியெல்லாம் பொய்யாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்? இருந்தால் 'இருக்கிறது' என்றும் இல்லாததை 'இல்லை' என்றும் நம்மால் ஏன் சொல்ல முடியவில்லை? அடுத்தவர்களின் விமர்சனம் நம்மை அச்சத்தில் ஆழ்த்துகிறது. அதனால், தயங்காமல் பொய்ச் சொல்கின்றோம்.
ஆனால் உண்மை என்ன?
வெளிப்படையானவர்களைத்தான் இந்த உலகம் உயர்த்தியிருக்கிறது. அவர்களும் வாழ்க்கையில் சாதித்திருக்கிறார்கள். இவற்றைப் புரிந்தாலே நம்மால் முன்னேற முடியும். இல்லாததை இருப்பதாகக் காட்டிக் கொள்வதில் நமக்கு எத்தகைய மகிழ்ச்சி? அடுத்தவர்களிடம் ஜெயிப்பதற்காக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை எப்போது அறியப் போகிறோம்? ஒருவர் சர்க்கரை நோயாளி. ஆனாலும் விருந்தில் இனிப்புகளை உண்கிறார். உடல் கெட்டாலும் பரவாயில்லை. எந்த நிலையிலும் தன் வியாதி அடுத்தவர்களுக்குத் தெரியக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். இவர் தனக்காக வாழவில்லை. அடுத்தவர்களுக்காக வாழ்கின்றார். இவரைப் போன்ற 'பொய்முக' புண்ணியவான்கள் நம்மில் அதிகம்.
சமன்பாடுகளே தெரியாத மகள். ஆனாலும், பொறியியல் பட்டத்தில் சேர்த்து விடுகிறார் தந்தை. தன் உறவினர்களின் பிள்ளை களெல்லாம் பொறியியல் பட்டதாரிகள். தானும் தன் மகளைப் பொறியியல் பட்டதாரியாக, எப்படியாவது உருவாக்கி விட வேண்டும். இப்படி.. பல பெற்றோர்கள், தன் மகளின் எதிர்காலத்தை விட தன் நிகழ்காலம் முக்கியம் என்ற மனோபாவம். இவர்களெல்லாம் எலிக்குச் சிங்கத்தின் தலையைப் பொருத்துபவர்கள்.
ஊரெங்கும் கடன். ஆனாலும், மிதிவண்டியில் போக நாம் விரும்பவில்லை. காசில்லையென்றாலும், கடன் பெற்று, பெட்ரோல் வாங்கி மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்துகின்றோம். சைக்கிளில் சென்றால் செலவு மிச்சம். சேமிக்கவும் முடியும். உடலுக்கோ மிக நல்லது. ஆனாலும், இந்த உண்மையை மனம் ஏற்க மறுக்கிறது. “நம்மைச் சுற்றியுள்ளவர்கள் என்ன நினைப்பார்களோ?" என்ற மாயையை உடைக்காமல் நம்மால் முன்னேற முடியாது. பொய் சொல்வதை 'நாகரிகம்' என்கின்றோம்.
இனிமேலாவது அவன் என்ன நினைப்பான் இவன் என்ன நினைப்பான் என்று ஒரு போலியான வாழ்க்கை வாழாமல் வாழக் கற்றுக்கொள்வோம். அப்படி செய்வதால் இந்த சமுதாயத்தில் நிச்சயமாக உங்கள் இமேஜ் உயரும்.