
ஒரு நிறுவனத்தில் தன்னை தக்க வைத்துக் கொண்டு அதில் முன்னேறுவது என்பது அனைவரும் விரும்பும் ஒரு விஷயம். இதை எப்படிச் செய்வது?
சிலர் என்ன செய்தார்கள் என்று பார்ப்போமா?
1. நான் எப்படி வேலை செய்கிறேன்?
விற்பனைப் பிரிவில் சேர்ந்திருந்த ஒரு சேல்ஸ் - கேர்ள் ஒரு நாள் டெலிபோன் பூத் ஒன்றுக்குச் சென்றாள்.
அவள் தனது நிறுவனத்தின் பி ஆர் ஓவிற்கு - பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆபீஸருக்கு - போன் செய்தாள்.
“சார், சமீபத்தில் விற்பனைப் பிரிவிற்கு சேல்ஸ் கேர்ள் கேட்டு ஒரு விளம்பரம் வந்ததே. அந்த வேலைக்கு ஆள் எடுத்தாகி விட்டதா?” என்று கேட்டாள்.
“ஓ! அந்த வேலைக்கு ஆள் வந்தாகி விட்டதே!” என்றார் அதிகாரி.
“இல்லை, சார்! நான் அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாமா என்று கேட்கத் தான் கூப்பிட்டேன். அந்த வேலை திறம்பட நடக்கிறதா?”
“ஓ! சூப்பராக நடக்கிறதே! வந்த சேல்ஸ் கேர்ள் ஸ்மார்ட். நன்கு வேலை செய்கிறாள். ஆகவே நீங்கள் வேறு இடத்தில் வேலையைத் தேடுங்கள்.”
“தேங்க் யூ சார்!” என்று போனை வைத்தாள் அந்தப் பெண்.
போன் பூத்தில் அவள் அருகே காத்திருந்த இன்னொரு வயதான பெண்மணி அவள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டு அவளை இரக்கத்துடன் பார்த்தாள்.
“கவலைப்படாதே! இன்னொரு கம்பெனியில் நிச்சயம் உனக்கு நல்ல வேலை கிடைக்கும்.” என்றாள் அந்தப் பெண்மணி.
“ஓ! நீங்கள் கவலைப்படவேண்டாம். அந்தக் கம்பெனியில் அந்த வேலையில் இருப்பவளே நான் தான்! என் வேலையைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளவே இப்படி ஒரு போன் செய்தேன்..” என்றாள் அந்த இளம் பெண்!
பலே சேல்ஸ் கேர்ள் தானே அவள்!
நீதி: உங்கள் வேலைத் தரத்தைப் பற்றி உங்கள் அதிகாரிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்!
2. வேலை பிடிக்கும் ஆனால் பாஸின் தொந்தரவு பிடிக்காது!
ஒரு நிறுவனத்தில் சேர்ந்த ஒருவருக்கு அவரது வேலை மிகவும் பிடித்திருந்தது. கூட வேலை பார்ப்பவர்கள் அவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்து அவரை வெகுவாக மதித்தனர்.
ஆனால் அவரது பாஸ் – மேலதிகாரியோ - அவரைத் திட்டாத நாள் இல்லை. எது செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருந்தார்.
ஒரு நாள் கோபத்துடன் அவரது பாஸ் அவரிடம், “வேறு ஏதாவது வேலை தேடிக் கொள்ளக் கூடாதா நீ?" என்று கேட்டு விட்டு, ஒரு கார்டை தூக்கி அவரிடம் போட்டு, “இவர் ரெக்ரூட்மெண்ட் நிறுவனம் வைத்திருப்பவர். வேலை தேடுவோருக்கு உதவி செய்பவர்” என்றார்.
அந்த கார்டை எடுத்துக் கொண்ட அந்த நண்பர் குழப்பத்தில் ஆழ்ந்தார். நேராக வேலை தேடித்தரும் நிறுவன அதிகாரியைச் சந்தித்தார்.
அவர், “ஒரு நல்ல பயோ டேட்டா தயார் செய்து கொண்டு வா” என்றார்.
மறுநாள் அருமையான பயோ டேட்டா ஒன்றை அவர் அந்த அதிகாரியிடம் தர அவர் பிரமித்தார்.
“நல்ல வேலை கிடைப்பது நிச்சயம்” என்று உறுதி கூறினார் அவர்.
அடுத்த மூன்றாம் நாளில் நண்பரை பாஸ் அவசரமாக அழைத்தார். அனைவரும் இன்று என்ன திட்டு வாங்கப் போகிறாரோ என்று அவரை அனுதாபத்துடன் பார்த்தனர்.
நண்பர் தனது பாஸின் கேபினுக்குச் சென்று அவரைச் சந்தித்தார்.
அவரை மிகுந்த அன்புடன் வரவேற்ற பாஸ், “ நீ செய்த உதவிக்கு நன்றி. எனக்கு இன்னும் பெரிய கம்பெனியில் சி. இ. ஓ. ஆக வேலை கிடைத்து விட்டது. எனது பயோ டேட்டாவை நன்றாக தயார் செய்து, நான் கார்டில் கொடுத்த நிறுவன அதிகாரியைச் சந்தித்து எனக்கே உதவி செய்து விட்டாயே! நீ வந்து பயோ டேட்டா கொடுத்ததை அவரே சொன்னார். நன்றி” என்றார்.
நண்பர் மெதுவாகப் புன்னகைத்துத் திரும்பிச் செல்ல முயன்றார்.
“ஒரு நிமிடம், எனக்கு செய்த உதவிக்கு வாயால் நன்றி சொன்னால் போதாதே! இதோ உனது ப்ரமோஷன் ஆர்டர். எனது பதவிக்கு நீ தான் சரியான ஆள். இதோ ஆர்டரை வாங்கிக் கொள். இது தான் நான் இந்தக் கம்பெனியில் கொடுக்கும் கடைசி ஆர்டர்.” என்றார் அதிகாரி.
நீதி: எந்த நிலையிலும் ஒரு வாய்ப்பு வந்தால் நன்றாக யோசித்து அதைச் சரியாகப் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது நிச்சயம் முன்னேறலாம்!
3. மாற்றி யோசி
ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் தயார் செய்யும் நிறுவனம் ஒன்று தனது தயாரிப்பால் அதிக லாபம் சம்பாதித்துக் கொண்டிருந்தது. ஆனால் நாளடைவில் போட்டி நிறுவனங்கள் அதிகரிக்கவே என்ன செய்வதென்று ஷாம்பூ நிறுவனத்தின் தலைமை அதிகாரி யோசித்தார். ஷாம்பூவை எப்படி உபயோகிப்பது அதனால் என்ன பலன் என்பதைச் சுருக்கமாக அருமையாகத் தயாரித்து லேபிளாக தயாரிப்பின் மீது ஒட்டச் சொன்னார். அதைப் பார்த்த மக்கள் ஆர்வத்துடன் அதை வாங்கினர். ஆனால் இன்னும் அதிக லாபத்தை விரும்பிய அதிகாரி தனது நிறுவனத்தில் வேலைபார்க்கும் அனைவரையும் ஒரு இடத்தில் கூட்டினார்.
“போட்டி அதிகமாகும் இந்த சமயத்தில் நமது நிறுவனம் முன்னணியில் இருந்து இன்னும் அதிக லாபத்தைச் சம்பாதிக்க வேண்டும். ஏதாவது நல்ல யோசனை இருக்கிறதா? பெரிய பரிசு உண்டு.” என்றார் அவர்.
பலரும் தயாரிப்பை எப்படி மாற்றுவது, கலவையில் பல மூலப் பொருள்களை இன்னும் எப்படி சேர்ப்பது என்று பல யோசனைகளைக் கூறினர்.
‘ஆனால் இதனாலெல்லாம் செலவு கூடுமே, நமது தயாரிப்பின் விலை அதிகரித்து விற்பனையை பாதிக்குமே’ என்றார் தலைமை அதிகாரி.
விற்பனைப் பிரிவில் சமீபத்தில் சேர்ந்த ஒரு இளைஞன் எழுந்திருந்தான். “சார்! என்னிடம் ஒரு யோசனை இருக்கிறது. எந்தச் செலவும் செய்ய வேண்டாம். தயாரிப்பையும் மாற்ற வேண்டாம். ஆனால் விற்பனை இரட்டிப்பாகும் சார்” என்றான்.
அனைவரும் அவனை கேலியாகப் பார்த்தனர். “இது சாத்தியம் தானா! இந்த சின்னப் பையன் உளறுகிறானே” என்று அனுபவஸ்தர்கள் சிரித்தனர்.
ஆனால் தலைமை அதிகாரி, “சொல்! இண்டரஸ்டிங்காக இருக்கிறது. எந்தச் செலவும் செய்யாமல் விற்பனை இரட்டிப்பாகுமா? உன் யோசனையை சீக்கிரம் சொல்” என்றார்.
“ஒன்றுமில்லை சார்! எப்படி உபயோகிப்பது என்ற லேபிளின் கடைசியில் ‘ரிபீட்’ என்று ஒரு வார்த்தையைச் சேர்க்கலாம், சார், அவ்வளவு தான்” என்றான் அந்த இளைஞன்.
அனைவரும் அதிர்ந்து போயினர். மீண்டும் இதை திருப்பிச் செய்க என்ற அந்த ரிபீட் என்ற வார்த்தையால் தான் உபயோகித்த ஷாம்பூவை மீண்டும் ஒருமுறை ஒவ்வொருவரும் உபயோகிக்க ஆரம்பித்தனர். விற்பனை இரண்டு மடங்காகியது.
அந்த இளைஞனை விற்பனைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் நியமித்தார் தலைமை அதிகாரி.
நீதி: மாற்றி யோசி! முன்னேறலாம்!