முடியாதென்ற பல காரியங்கள் 'முடியும்" என்றானது எப்படி?
நாம் எடுக்கும் வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருந்தால் நிச்சயமாக வாழ்க்கை உச்சத்தை தொடலாம். நாம் செய்யும் வேலையை ஏதோ கடமைக்காகவும் செய்ய வேண்டும் என்பதற்காகவும் ஒரு விருப்பம் இல்லாமலும் வெறுப்போடும் செய்தால் நிச்சயமாக நம்மால் ஒரு படி கூட மேலே செல்ல முடியாது.
கருமமே கண்ணாயினார் என்று சொல்வார்கள். நாம் ஒரு வேலையை தொடங்கிவிட்டால் அதைப்பற்றிய சிந்தனையும் அதைப் பற்றிய எண்ணோற்றங்களும் மட்டுமே நம் மனதில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பிறரால் இவனால் முடிக்க முடியாது என்று நினைக்கும் காரியத்தை நீங்கள் மிக சுலபமாக முடித்து விடுவீர்கள். சாதித்து காட்டுவீர்கள். இதை உணர்த்தும் ஒரு உதாரணம்தான் இப்பதிவில்.
அமெரிக்காவின் தலைச்சிறந்த சட்ட நிபுணராகத் திகழ்ந்தவர் கார்டல் ஹால். அவர் தனது இளம் வயது வரை வீட்டை விட்டு வெளிவராத ஓர் ஆசாமி. ஆனால், சட்டத்துறையில் வல்லுநராக வேண்டும் என்று அவருக்கு அளவிற்கடந்த ஆசையிருந்தது. அமெரிக்க அரசியலில் பல ஆண்டுகள் உயர்ந்த பதவிகளை வகித்தவர். தனது வாழ்வில் மூன்றில் இரண்டு பங்கு பகுதியை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்த அவரிடம் இந்த சாதனைகளுக்குக் காரணம் கேட்டார்கள்.
அவர் கூறினார், “நான் இளம் வயது முதல் சட்டத்துறையில் சாதனை படைக்க எண்ணினேன். நான் சட்டமேதையாக வேண்டும் என்று எண்ணாத நாளே இல்லை. என் சக நண்பர்கள் மீன்பிடித்துக் கொண்டு, நீச்சலடித்துக் கொண்டு இருக்கும்போது ஒரு மரக்கிளையில் உட்கார்ந்து சட்டப் புத்தகங்களைப் படிப்பேன்.
என் தந்தை என்னைப்பற்றி மற்றவர்களிடம் "என் மகன் கார்டல் நடக்க ஆரம்பித்த நாள் முதல் பெரிய மனிதனைப் போல்தான் நடக்கிறான்" என்று கூறினார். எனது அயராத உழைப்பும், நம்பிக்கையுமே வாழ்க்கையில் பல உயரங்களை அடைய உதவியது.'
கருமமே கண்ணாகக் கொண்டு உழைக்கும் சில மனிதர்கள் உயர்ந்த நிலையை அடைகின்றார்கள். இத்தகைய மனிதர்களால்தான் முடியாது என்று எண்ணப்பட்ட பல காரியங்கள் 'முடியும்" என்று ஆகியுள்ளது.
இனியாவது நாம் தொடங்கும் காரியம் எல்லாவற்றையும் கண்ணும் கருத்துமாய் பொறுப்புடனும் விழிப்புடனும் இருந்து செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் காண்போம்.