எது தேவையானது. எது தேவையற்றது என்பதை அறிந்து தேடுதல் தேவை. காலம் தவறிய தேடுதல் தேவையற்றது. வருங்காலத்தைப் பற்றி வருடங்களாக யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி சிறிது சிந்தித்தால் போதும். சொந்தங்களை தேடி வைப்பதுபோல் சொந்தமாக நம் முயற்சியில் ஏதாவது உபயோகமாக தேடி வைக்க இறுதியில் அவை நமக்கு கை கொடுக்கும்.
யார் நம்முடன் இருப்பார்கள் அல்லது விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை. நம்முடைய வார்த்தையும் நடத்தையும்தான் முடிவு செய்கிறது. வாய் தவறி விழும் பேச்சுக்கள் கை தவறி விழும் கண்ணாடியை விட ஆபத்தானது. நல்ல நட்பையோ உறவையோ தொலைத்துவிட்டு பின்பு காலம் தவறிய தேடுதல் தேவையற்றது. யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து பேசுவது நல்லது. மற்றவர் தவறை கவனித்துக் கொண்டு இருக்கும் நாம் நம் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறோம்.
லட்சியத்திற்கு சூழல் ஒத்து வரவில்லை என்றால் சூழலை மாற்றவும், மனிதர்களை மனிதம் மாறாமல் நட்பு கொள்ளவும், உலகில் உள்ள அனைவரும் நமக்கு வேண்டப்பட்டவர்கள்தான் என்று எண்ணிப் பழக காலம் தவறி தேட மாட்டோம் இழந்த உறவுகளை. சத்தமான குரலில் பேசப்படுவதெல்லாம் உண்மை என்றும், மென்மையான குரலில் சொல்லப்படுவது எல்லாம் பொய் என்றும் நினைக்க வேண்டாம். வலிமையான உண்மைகள் பலவும் மென்மையான குரலில்தான் வெளிப்படும். தடைகள் இல்லாத பாதைகள் இல்லை. அதற்காக நாம் நடக்காமல் இருப்பதும் இல்லை. எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு நம்மிடமே உள்ளது. எதையும் காலம் அறிந்து செய்வது அவசியம்.
காலம் தவறி தேடுதல் அவசியமற்றது. எது தேவையானது தேவையற்றது என்பதை அறிந்து தேடுதல் வேண்டும். அனுபவம் என்பது நமக்கு என்ன நடக்கிறது என்பதல்ல. என்ன நடந்தாலும் என்ன நடக்கிறது என்பதை நாம் எவ்வாறு மதிப்பிடுகிறோம் என்பதிலேயே உள்ளது. வாழ்க்கைப் பயணம் அன்பு நிறைந்தது. நட்பு, உறவு, மகிழ்ச்சி, நம்பிக்கை, நிம்மதி, மனநிறைவு போன்றவற்றை காலத்தே தேடி வளர்த்துக் கொள்வது அவசியம்.
மனம் தேவையில்லாத சமயங்களில் தேவையில்லாத சுமைகளை சுமப்பதும், அச்சச்சோ இத்தனை காலம் இதனை சுமந்துவிட்டோமே பாரமாக உள்ளதே என்று இறக்கி வைத்து விட்டு நிம்மதியை காலம் தவறி தேடுவதும் அவசியமற்றது. காலத்தே பயிர் செய் என்பது போல் காலத்தே நமக்கு தேவையானதைத்தேடி பெறுதல் வேண்டும். நாம் செல்லும் பாதை இலகுவாக உள்ளதா கஷ்டமாக உள்ளதா என்று பார்க்க வேண்டாம். செல்லும் பாதை சரியானதா என்று மட்டும் பார்த்தால் போதும். வாழ்க்கை என்பதே தேடுதல் நிறைந்ததுதான். ஓஹோ என்று வாழ்ந்தவர்கள் ஒன்றுமில்லாமல் போனதும் உண்டு. ஒன்றும் இல்லாமல் இருந்தவர்கள் ஓஹோ என்று வாழ்வதும் உண்டு. துன்பத்தை தூரமாக வைத்து, இன்பத்தை இதயத்தில் வைத்து, நம்பிக்கையை நமக்குள் வைத்து வாழ்வில் நல்லனவற்றையே தேடிச்செல்வது வாழ்வில் நம்மை உயர வைக்கும்.
எது தேவையானது என்பதை அறிந்து தேடுதல் வேண்டும். செய்வோமா?