
நம்மைப் பற்றி தவறாக பேசுபவர்கள் நம்முடைய மனம் காயப்படும் என்பதை சிறிதும் நினைத்து பார்ப்பதில்லை. அப்படி நம்முடைய வாழ்க்கையில் சந்திக்கும் ஒருவர் நம்மைப் பற்றி தவறாக பேசினால் அவர்களை விட்டு விலகி விடுவதுதான் நல்லது. அதை விடுத்து அவர்களிடம் அதற்கு பதில் அளிக்க முயற்சித்தால் நம் மரியாதையை தான் நாம் இழக்க வேண்டி வரும்.
எனவே அவர்களை விட்டு விலகி விடுவதுதான் நல்லது. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் இந்த உலகத்தில் நல்ல உள்ளம் படைத்த மனிதர்களும் இருப்பார்கள்; இப்படி பிறர் மனம் புண்படும்படி பேசி திரிபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். இவர்களுக்காக நாம் நம்முடைய வாழ்க்கையின் நல்ல பண்புகளை இழக்க வேண்டிய அவசியம் இல்லை.
பிறருடைய வார்த்தைகளால் நாம் பாதிக்கப்படாமல் இருப்பதுதான் நல்லது. இல்லையெனில் அது நம் மன அமைதியை கெடுத்து விடும். நாம் நம் மனதிற்கு நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதும். பிறர் தவறாக பேசுவதற்காக எல்லாம் கவலைப்பட வேண்டியது இல்லை. தவறாக பேசுபவர்களுக்கு பதிலடி தருவதெல்லாம் தேவையற்றது. நம் நேரத்தை வீணடிக்கக் கூடியது. அதற்கு பதில் அவர்கள் ஏன் நம்மைப் பற்றி இப்படி பேசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள ஒரே ஒரு முறை முயற்சிப்பது அதை எதிர்கொள்ள உதவும்.
முடிந்தால் அவர்களுடன் பேசிப் பார்க்கலாம் ஏன் இவ்வாறு தவறாக நம்மைப் பற்றி பேசுகிறார்கள் என்று. இதன் மூலம் அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வாய்ப்புள்ளது. அப்படி எதுவும் நடக்காத பட்சத்தில் அவர்களை புறக்கணித்து விட்டு நம் வேலையில் கவனம் செலுத்துவது தான் சிறந்தது.
சிலர் நம் மீது உள்ள பொறாமையால் நம்மைப் பற்றி தவறாக பேசலாம். நம்முடைய உயர்வைக் கண்டு மனம் புழுங்கிப் போய் நம் மீது சேற்றை வாரி இறைக்க தவறாக பேசலாம். இப்படிப்பட்டவர்களின் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் தராமல் இருப்பதுதான் நல்லது.
நம்மைப் பற்றி தவறாக பேசுபவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்பட வேண்டாம். காரணம் அவர்களை விட நமக்குத்தான் நம்மைப் பற்றி அதிகம் தெரியும். எனவே அவர்களிடம் போய் சுயவிளக்கம் கொடுத்து நம்மை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை அவர்கள் கூறுவதில் ஏதேனும் உண்மை இருந்தால் அதை சரி செய்து கொள்ள முயற்சி செய்யலாம். இல்லையெனில் வேண்டுமென்றே நம்மை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் கூறப்படுகிறது என்றால் அதை அலட்சியம் செய்து விடுவதுதான் நல்லது.
ஒன்றை மட்டும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். உலகில் உள்ள அனைவருக்கும் பிடித்தாற்போல் வாழ்வது என்பது இயலாத காரியம். அவரவர் மனசாட்சிப்படி வாழ்வதே சிறந்தது. மற்றபடி வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதான் என்று எண்ணி தூற்றுவார் தூற்றட்டும் என்று நம் வேலையை பார்த்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
பிறர் தவறாக பேசுவதை பொருட்படுத்த தேவையில்லை. முக்கியத்துவம் கொடுத்து வருந்தவும் தேவையில்லை. நமக்கென்று வேலைகளும், கடமைகளும் தலைக்கு மேல் இருக்கும் போது இதைப் பற்றி எல்லாம் யோசித்து நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை.
தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள், பிறர் மீது பொறாமை கொண்டவர்கள் அல்லது தங்களை நிறைய விஷயம் அறிந்தவர்களாக காட்டிக் கொள்ளும் மனிதர்கள்தான் பிறரைப் பற்றி தவறாக பேசி அற்ப மனநிறைவு கொள்பவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு எப்பொழுதும் பிறருடைய குறைகள், தவறுகளை கண்டறிவதிலும், சுட்டிக் காட்டுவதிலும் ஆர்வம் அதிகம் இருக்கும். இப்படிப்பட்டவர்களை விட்டு விலகி இருப்பதுதான் நம் சந்தோஷத்திற்கும், மன அமைதிக்கும் சிறந்தது.