
நாம் குழப்பமாக இருக்கும் நிலையில் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாக இருக்காது. அத்துடன் நம்மை குழப்புபவர்கள் எல்லோரும் அவரவர் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துச் சொல்வார்கள். அந்த நேரத்தில் நாம் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதே நல்லது. ரொம்ப குழப்பமாக இருக்கும் சமயம் தனியாக அமர்ந்து யோசிப்பது நல்ல பலனைத்தரும்.
காலாற ஒரு நடையை போட்டு சிந்திக்கத் தொடங்கினால் குழப்பம் தானாக தீர்ந்துவிடும். மனமும் லேசாகி பிரச்னைகளை எதிர்கொள்ளவும், தகுந்த முடிவெடுக்கவும் உதவும்.
யார் எந்த யோசனையை சொன்னாலும் அதை அப்படியே ஏற்று இறுதி முடிவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. எப்பொழுதுமே, எதற்குமே ஒரு மாற்றுக்கருத்து இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. எனவே நம் மனம் சொல்லும் வழியைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். ரொம்ப குழப்பமாக இருக்கும் சூழ்நிலையில் நல்ல தூக்கம் ஒன்று போட விழித்ததும் நமக்கு அருமையான யோசனை பிறக்கும். மனமும் தெளிவாக இருக்கும். அந்த சமயத்தில் எடுக்கும் முடிவுகள் சிறப்பாக இருக்கும்.
சிலர் எடுத்ததற்கெல்லாம் குழம்புவார்கள். தான் குழம்புவதுடன் இல்லாமல் மற்றவர்களையும் குழப்பி வேடிக்கை பார்ப்பார்கள். தெளிவான முடிவில் இருப்பவர்களையும் குழப்பிவிட்டு இது சரி இல்லை, அது சரி இல்லை என்று குறை கூறுவார்கள். அம்மாதிரி சமயங்களில் குழம்பாமல், எதிராளியின் பேச்சை காது கொடுத்து கேட்காமல் சுயமாக சிந்தித்து செயல்படுவதே நல்லது.
நம்மை எந்த முடிவையும் எடுக்கவிடாமல் குழப்புபவர்களைப் பார்த்து எதிர் கேள்வி கேட்டால் போதும் அவர்கள் நம் பக்கமே திரும்ப மாட்டார்கள். சிலர் ஆலோசனை கூறுகிறேன் என்று சொல்லி நம்மை மேலும் குழப்பி விடுவார்கள். அம்மாதிரி மனிதர்களிடம் சிக்காமல் "கவலையை விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று உறுதியாக சொல்லிவிடுங்கள்.
வேறு சிலரோ நம் பிரச்னைகளை விதவிதமான கோலத்தில் ஆராய்ந்து இப்படி இருக்கலாம், அப்படியும் இருக்கலாம் என ஏகப்பட்ட யோசனைகளைக் கூறி நம்மை கதி கலங்க வைப்பார்கள். இம்மாதிரியான குழப்ப மன்னர்கள் சாதாரண பிரச்னைகளைக் கூட பூதாகரமாக்கி அதிலிருந்து தப்பவே முடியாது என்பது போல் சித்தரித்து விடுவார்கள். இப்படி பயம் காட்டுபவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு துணிச்சலுடன் முடிவெடுப்பதுதான் நல்லது.
இன்னும் சிலரோ நம்மை வாயை திறக்க விடாமல் விதவிதமான அணுகுண்டுகளை போட்டு நம்மை குழப்பத்தின் உச்சிக்கே கொண்டு செல்வார்கள். இம்மாதிரியான குழப்பவாதிகள் செய்யும் ஆர்ப்பாட்டத்தில் உண்மையிலேயே நாம் குழம்பித்தான் போவோம். குழப்பமான மனநிலையில் நாம் நமது சிந்தனை ஓட்டத்தை தடை செய்யவோ, கட்டுப்படுத்தவோ கூடாது.
அதன் போக்கிலேயே விட்டுவிட சிறிது நேரத்தில் சிந்தனை வீரியத்தை இழந்து குழப்பம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு தெளிவுநிலை பிறக்கும். குழப்பமான மனநிலை என்பது நம்முடைய மனதின் ஒரு நிலையே. அதை நாம்தான் சரி பண்ண முடியுமே தவிர வெளியில் இருந்து யாராலும் எதுவும் செய்ய முடியாது.