நாம் நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ பேரிடம் பழகுகிறோம். அப்படியிருக்கையில், அதில் யாரெல்லாம் நமக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார்கள் என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது. நம்முடன் பழகும் அனைவரும் சுயநலமின்றி நம் நட்புக்காக மட்டும்தான் பழகுகிறார்களா? இல்லை ஒருவரின் இனிமையான பேச்சுக்கு பின் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா? அதைப் பற்றி தெளிவாக இந்தப் பதிவில் காண்போம்.
ஒரு ஊரில் மிகப் பெரிய வியாபாரி இருந்தார். அவருக்கு எதிர்ப்பாராத ஒரு தொழிலின் மூலம் எதிர்ப்பாராத லாபம் கிடைத்தது. அந்த லாபத்தின் சிறுபகுதியை தனக்கு உண்மையாக இருக்கும் வேலையாட்களுக்கு பகிர்ந்துக்கொடுக்க நினைத்தார். ஆனால் தன்னிடம் உண்மையாக இருக்கக்கூடிய வேலையாட்கள் யார் என்பதையே அவரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.
எனவே, அந்த ஊரில் உள்ள அறிஞர் ஒருவரிடம் அறிவுரைக் கேட்கிறார். அதற்கு அறிஞர் சொன்னாராம், இது மிகவும் சுலபம்தான். உனக்கு மிகபெரிய லாபம் கிடைத்துள்ளது அல்லவா? ஆனால், உன் வேலையாட்களிடம் சென்று உனக்கு மிகபெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்று சொல். அதற்கு பிறகும் உன்னுடன் யார் இருக்கிறார்களோ? அவர்கள்தான் உண்மையான வேலையாட்கள் என்று கூறினார்.
இந்தக் கதையில் வந்தது போலத்தான், நாம் நல்ல நிலையில் இருக்கும்போது, நம்மிடம் காசு, பணம் இருக்கும்போது, நாம் ஒரு நல்ல அந்தஸ்த்தில் இருக்கும் போது நிறைய பேர் நம்மை சுற்றியிருக்கலாம், நம்மிடம் நல்ல விதமாக பழகலாம். நமக்காக இருப்பதாக கூறலாம்.
ஆனால், நம்முடைய இக்கட்டான சூழ்நிலையில் நம்மிடம் எதுவுமே இல்லாத சமயத்தில் எந்த லாபத்தையும் எதிர்ப்பார்க்காமல் வெகுசிலர் மட்டுமே நம்முடன் இருப்பார்கள். அப்படி நம்முடைய கஷ்டக் காலத்தில் நம்முடன் கைக்கோர்த்து நிற்பவர்களே நமக்கு உண்மையாக இருக்கும் நம்முடைய நலன் விரும்பிகள் என்று அர்த்தம். அப்படிப்பட்டவர்களை எப்போதுமே மரியாதையோடு நடத்துங்கள். அவர்களை உங்களுடைய வாழ்க்கையிலிருந்து தொலைத்து விடாதீர்கள். இதை சரியாக புரிந்து நடந்துக் கொண்டால் வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும் தானாகவே வந்து சேரும். முயற்சித்துப் பாருங்களேன்.