இந்த உலகத்தில் வெற்றி பெற்றவர்களின் சுயசரிதையை படித்தோம் என்றால், அவர்களிடத்தில் ஈகோ என்ற குணமே இருக்காது. தன்னைவிட வயதில் சிறியவர்களாக இருந்தாலும் சரி, அல்லது வயதில் பெரியவர்களாக இருந்தாலும் சரி, உரியவர்களுக்கு உரிய மரியாதை தருவதில் தயங்கமாட்டார்கள்.
"நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்" என்ற பழைய திரைப்பட பாடலுக்கு ஏற்ப ஒருவர் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தற்பெருமை என்பது ஒருவரை மற்றவர்கள் அருவருக்க செய்து விடும். தற்பெருமை பேசும் ஒருவரை கண்டாலே தலை தெறிக்க ஓடி விடுவார்கள். சிலர் பார்த்தீர்கள் என்றால் வாயை திறந்தாலே தன்னை பற்றியே பேசிக்கொண்டு இருப்பார்கள். எதிரில் உட்கார்ந்து இருப்பவர் நெளிந்து கொண்டு இருப்பதை கூட புரிந்து கொள்ளாமால் அவர் பாட்டுக்கு தன்னுடைய சுய புராணத்தை பாடி கொண்டு இருப்பார். தற்பெருமை பேசும் ஒருவரை மற்றவர்கள் விரும்ப மாட்டார்கள்.
தெரியாத விஷயத்தை அடக்கத்துடன் தெரிந்து கொள்ளுங்கள். வயது வித்தியாசம் பார்க்காதீர்கள். இவன் என்ன பெரிய ஆள் இவனிடம் நாம் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைக்காதீர்கள். உங்களது அடக்கம் மற்றவர்கள் உங்களை நேசிக்கச் செய்யும்.
மற்றவர்களிடம் பழகும்போது எந்தவித சுயநலத்துடனும் பழகாதீர்கள். பின்னால் உங்களுக்கு ஆகவேண்டிய காரியத்திற்காக மற்றவர்களிடம் போலியாக பழகாதீர்கள். சுயநலமில்லாத உங்களது பழக்கம் மற்றவர்களிடத்து உங்களை பெரிதும் விரும்பசெய்யும்.
நட்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கள்ளம் கபடமில்லாத நட்புடன் பழகுங்கள். அதே சமயத்தில் உங்கள் நட்பை மற்றவர்கள் அவர்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்த நினைக்கும்போது நாசூக்காக அந்த நட்பை அவர்கள் மனம் கோணாதபடி ஒதுங்கி கொள்ளுங்கள்.
எனவே ஒருவருடைய மனதை புண்படுத்தாத, நல்ல குணங்கள் உங்களையும் அறியாமல் உங்களிடம் குடியிருக்கும்போது வெற்றிகளும் உங்களைத்தேடி வரும் மற்றவர்களும் உங்களை அதிகம் விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.