
எதிர்மறை ஆற்றல் என்பது பயம், பொறாமை, கோபம், மன அழுத்தம் போன்ற எதிர்மறை எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் குறிக்கும். நமக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை கட்டுப்படுத்தவில்லை எனில் குடும்பத்தில் அமைதியின்மை, பிரச்னைகள் போன்றவை ஏற்படும். மோசமான சூழ்நிலையை உண்டாக்கும். எனவே நமக்குள் இருக்கும் எதிர்மறை ஆற்றலை அடையாளம் கண்டு அவற்றை அகற்ற வேண்டியது மிகவும் அவசியம்.
எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்த நேர்மறை எண்ணங்களை வளர்க்கப் பழகவேண்டும். நண்பர்களுடன் மனம் திறந்து பேசுவதும், நமக்கு பிடித்தமான செயல்களை செய்வதும், நல்ல புத்தகங்களை படிப்பதும் என்று பல வழிகளில் எதிர்மறை ஆற்றலை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
அத்துடன் நம்மைச் சுற்றி நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதாவது நம் வீட்டை சுத்தமாகவும், ஒழுங்காகவும் பராமரிக்க வேண்டும். ஜன்னல்களை திறந்து வைத்து வீட்டுக்குள் காற்றோட்டத்தையும், சூரிய வெளிச்சத்தையும் கொண்டுவர எதிர்மறை ஆற்றல்கள் தானாகவே நீங்கிவிடும்.
வீட்டுக்குள் இருக்கும் தேவையற்ற பொருட்களை உடனுக்குடன் அகற்றி விடுவதும், வீட்டிற்குள் எப்போதும் மெல்லிய இசையை காதுக்கு இனிமையாக தவழ விடுவதும் நம் வீட்டு சூழலை ரம்யமாக்கும். வீட்டுச் சூழல் அழகாக இருந்தால் மனம் தானாகவே சந்தோஷம் அடையும்.
அதிகாலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதும், வெளிச்சம் மற்றும் காற்றோட்டமான சூழலில் வசிப்பதும், மனதையும் உடலையும் அமைதிப்படுத்த தியானம், யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்வதும் நம் மனதில் இருந்து எதிர்மறை எண்ணங்களை விரட்டி அடிக்கும். நகைச்சுவை காட்சிகளை பார்ப்பதும், நல்ல மனிதர்களுடன் தொடர்பு கொள்வதும் மனதை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.
முக்கியமாக இயற்கையான சூழலில் இருப்பது நம் மன அமைதிக்கு மட்டுமல்ல நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதற்கும் உதவும். வீட்டைச் சுற்றி மரங்கள், செடி, கொடிகள் இருப்பது நம்மை, நம் மனதை ஆரோக்கியமுடன் செயல்பட வைக்கும். பூங்காக்களில் நடப்பதும், சிறிதளவு உடற்பயிற்சி செய்வதும் எதிர்மறை எண்ணங்களை விரட்டி நேர்மறை சிந்தனைகளைத் தூண்டும்.
அத்துடன் சிரிப்பது என்பது ஒரு சிறந்த பயிற்சியாகும். தினமும் சிறிது நேரமாவது மனம் விட்டு சிரிப்பது என்பது ஆரோக்கியமான மனதிற்கும் உடலுக்கும் சிறந்த டானிக்காக இருக்கும்.
காலாற நடப்பதும், நீச்சல் போன்ற உடற்பயிற்சி செய்வதும் நம் உடலை மட்டுமல்ல மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவும். இதனால் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் பொழுது அவற்றை நேர்மறை எண்ணங்களால் மாற்ற முயற்சிக்கலாம். 'என்னால் இது முடியாது' என்று நினைப்பதற்கு பதிலாக 'நான் இதை செய்து முடிப்பேன்' என்ற நேர்மறையான எண்ணம் நம்மை நினைத்ததை சாதிக்கத் தூண்டும்.
நினைத்தால் முடியாதது என்று எதுவுமே இல்லை. உண்மைதானே நண்பர்களே!