
பொதுவாக அன்பு வலுவாகவும், நேர்மறையான அனுபவமாகவும் இருக்கிறது. எளிமையான மகிழ்ச்சி முதல் ஆழ்ந்த தனித்தன்மையான பாசம் வரை அன்பு பல பரிமாணங்களில் வெளிப்படுகிறது. அன்பு என்ற சொல் குறிக்கும் பொருள்களின் எல்லைகளை விளக்க வேண்டுமெனில் இந்த எளிய எடுத்துக்காட்டை உணரலாம். பொதுவாக அன்பு என்பது ஒரு வலுவான ஈர்ப்பு உணர்வை குறிக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக இதை புரிந்துகொள்ளலாம்.
மகிழ்ச்சி, அன்பு, சோகம், கோபம் என்று எல்லா உணர்வு களும், ஒரு நாள் தங்களுக்குள் பேசிக்கொண்டன.
"ஒருநாள் கூட ஓய்வு இல்லாமல் இந்த மனிதர்களுக்காக நாம் உழைக்கிறோம். நாம் ஏன் எங்காவது சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்கக் கூடாது? என்று ஆலோசனை செய்தன.
எல்லாவற்றுக்கும் அந்த யோசனை பிடித்து இருந்தது. தீவு, சுற்றுலாத்தலம் ஒன்றுக்கு அனைத்தும் சென்றன.
உற்சாகமாக நேரத்தை கழித்தன. இரண்டு நாட்கள் மகிழ்ச்சியாக கடந்தன.
மூன்றாம் நாள் திடீரென பெரும் பரபரப்பு கடலுக்குள் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. எந்த நேரமும் தாக்கலாம் உடனடியாக எல்லோரும் வெளியேறுங்கள் என்று அறிவித்தார்கள்.
பலரும் படங்களில் ஏறி அந்த தீவிலிருந்து கிளம்பின. கடற்கரையில் ஒரே கூச்சலும் குழப்பமாக இருந்தது. எல்லா உணர்வுகளும் ஆளுக்கு ஒரு திசையில் ஓடி அங்கிருந்து தப்பிக்க முயன்றன.
அன்பு மட்டும் நாம் அவசரப்பட வேண்டாம் எல்லோரும் பாதுகாப்பாக வெளியேறட்டும். கடைசியாக போகலாம் என முடிவெடுத்தது. எல்லோருக்கும் வழிவிட்டு ஒதுங்கி கடைசியாக அது கடற்கரைக்கு போனபோது எந்த படமும் காலியாக இல்லை.
யாராவது நம்மை அழைத்துப் போவார்கள் என்ற நம்பிக்கையுடன் அது கடற்கரையில் நடந்தது. அப்போது வளம், ஒரு பிரம்மாண்ட படகில் போனது. என்னை அழைத்து போவியா? என்று அன்பு கேட்டது.
ஆனால், "என் படகு நிறைய பணம், தங்கம், வைரம் என விலை மதிப்புள்ள பொருட்கள் இருக்கின்றன. உனக்கு இதில் இடம் இல்லை? என வளம் சொன்னது.
அடுத்து வண்ணமயமான படகு ஒன்றில் அழகு போனது. அதனிடம் சென்று உதவி கேட்டது அன்பு. ஆனால் என் படகைப் பார் எவ்வளவு அழகாக இருக்கிறது? நீ கடற்கரையில் நடந்து அழுக்காக இருக்கிறாய் உன்னை ஏற்றினால் என் படகு அழுக்காகி விடும். எனக்கு அழகுதான் முக்கியம் என்று நிராகரித்துவிட்டது.
சிறிது நேரத்தில் சோகம் அந்த வழியாக படகில் வந்தது.
அது நடந்த எல்லாவற்றையும் நினைத்து நான் கவலையில் இருக்கிறேன். "நீ வந்தால் என்னை மாற்றி விடுவாய்" என மறுத்து விட்டது. பின்னாலேயே மகிழ்ச்சி ஒரு படகில் வந்தது.
அதனிடமும் அன்பு உதவி கேட்டது. "நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் யாரைப்பற்றியும் கவலைப்பட எனக்கு நேரமில்லை" என்று அதுவும் போய்விட்டது.
அப்போது, அன்பே என் படகில் வந்து ஏறிக்கொள் என யாரோ அழைத்தார்கள். திரும்பிப் பார்த்தால் அங்கே காலம் நின்றிருந்தது.
இது அன்புக்கு கை கொடுத்து தன் படகில் ஏற்றிக் கொண்டது.
பலரும் வளமாக இருக்கும்போது அன்பின் மதிப்பை உணர்வதில்லை. "தான் மட்டும் நன்றாக இருந்தால் போதும்" என்ற நினைப்பு இருக்கும். மகிழ்ச்சியிலும், சோகத்திலும் அன்பை யாரும் கண்டுகொள்வதில்லை. ஆனால் காலம் மட்டுமே அன்பின் உண்மையான மதிப்பை அறிந்திருக்கிறது. அன்பு மட்டுமே எல்லோருக்கும் மகிழ்ச்சியையும், வளத்தையும் தரும். அடுத்தவர்களின் அன்பை புரிந்துகொள்ளும் காலம் வரும்வரை காத்திருங்கள்.
தினம் தினம் அன்பைப் பொழியுங்கள். அன்பின் மதிப்பை அப்போதுதான் உணரமுடியும்!