
கடினமான மனிதர்களை சமாளிப்பது சவாலான விஷயம்தான். சில நேரங்களில் நாம் கடினமான மனிதர்களையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறோம். அத்தகைய சூழ்நிலையில் மன அழுத்தம் ஏற்பட்டு எரிச்சலும் கோபமும் கூடவே பயமும் சேர்ந்து வரும். இப்படி நிம்மதியற்ற உணர்வு நிலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் அவர்களை எப்படி சமாளிப்பது என்று தெரியாததால்தான்.
முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இம்மாதிரியான கடினமான மனிதர்களின் நடத்தையை மாற்றுவது நம் வேலை அல்ல. அவர்களைப் பற்றிய நம் பார்வையை மாற்றுவதுதான் சரியான வழி. கடினமான மனிதர்களை கையாளும் பொழுது நம் கட்டுப்பாட்டை இழந்து உணர்ச்சி வசப்படக்கூடாது. அப்படி உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினை புரியாமல் இருப்பதற்கு பழக வேண்டும். இம்மாதிரி தருணங்களில் நாம் பார்வையாளராக மாற வேண்டும். அதாவது இந்த சம்பவம் நமக்கானதல்ல. வேறு யாருக்கோ நடைபெறுகிறது. அதை எப்படி அவர்கள் அணுகுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்பதுபோல் பார்வையாளராக மாறி விலகி இருப்பது அவசியம்.
கடினமான மனிதர்களின் பேச்சு மற்றும் நடவடிக்கைகள் எப்பொழுதும் நம் மீதான தனிநபர் தாக்குதலாகத்தான் இருக்கும். அம்மாதிரி தருணங்களில் நாம் எதிர்வினை புரிந்தால் அது பிரச்னையை அதிகரிப்பதோடு நம் நிம்மதியையும் குலைத்துவிடும். எனவே எதிர்வினை ஆற்றாமல் இருக்க பழகவேண்டும். இம்மாதிரியான மனிதர்களிடம் விவாதம் புரிவது நம் நேரத்தை வீணடித்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் அமைதி காப்பது தான் சிக்கலை பெரிதுபடுத்தாமல் இருக்க உதவும். நேருக்கு நேர் சண்டையிடுவதை விட, வாக்குவாதம் செய்வதே விட அவர்களை விட்டு விலகி விடுவது நல்லது. இதன் மூலம் வீணான வெறுப்பு, தேவையில்லாத மனத் துன்பம் ஆகியவற்றை தவிர்த்து விடலாம்.
கடினமான மனிதர்களை உளவியல் ரீதியாக நோக்கும் பொழுது அவர்கள் ஏதேனும் பிரச்னையில், மன உளைச்சலில் இருப்பதால்தான் இவ்வாறு கடினமாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது. எனவே அவர்களுக்கு தேவை அன்பும், பரிவும்தான். முடிந்தால் அவர்களுடன் சிறிது கனிவாக பழகத் தொடங்கலாம். இது அவர்களின் மனப்புண்ணிற்கு ஆறுதல் தரும் விஷயமாக இருக்கும். தொடர்ந்து அன்பை செலுத்தியும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ளாமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் அவர்களை விட்டு விலகி விடுவதுதான் சிறந்தது.
பொதுவாக குழந்தைப் பருவத்தில் தனக்குத் தேவையானது கிடைக்க வேண்டும் என்பதற்காக அடம் பிடிப்பது, சின்ன சின்ன பொய்கள் சொல்லி தாங்கள் நினைப்பதை அடைவது, கிடைக்கவில்லை என்றால் பிடிவாதம் பிடித்து, முரண்டு பிடித்து காரியத்தை சாதித்துக் கொள்வது என்று இருப்பவர்கள் வளர்ந்த பின்னும் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள். இவர்கள் மனதால் முதிர்ச்சியற்றவர்கள் என்பதை உணர்ந்து கொண்டால் அம்மாதிரி மனிதர்களை நம்மால் எளிதாக சமாளிக்க முடியும்.
ஒவ்வொருவருக்குமே அவரவர்கள் செய்வது சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் இருக்கும். அதற்கான காரணங்களையும் வைத்திருப்பார்கள். சிலர் மற்றவர்களை காயப்படுத்துவதற்காகவே கடினமாக நடந்து கொள்வார்கள். இம்மாதிரி சமயங்களில் நீங்கள் அமைதியாக எதிர்வினை ஆற்றாமல் இருப்பதுடன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை தெளிவாகவும் உறுதியுடனும் கூறி விடுங்கள். கடினமான மனிதர்களின் நாடித்துடிப்பை அறிந்துகொண்டால் அவர்களை எப்படி கையாளவேண்டும் என்ற வழி நமக்கு தெரிந்துவிடும். அவர்களுடன் பழகும்போது பச்சாதாபம் மற்றும் புரிதலுடன் இருக்க முயற்சி செய்தாலே போதும். சிக்கலான மனிதர்களை சமாளிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இம்மாதிரி மனிதர்களுடன் பழகுவதால் ஏற்படும் அனுபவம் நம்மை வாழ்வில் இன்னும் மேம்பட வைக்கும்.
சவாலான விஷயங்களை சமாளிப்பது எப்பொழுதும் சுவாரஸ்யமானதுதானே நண்பர்களே!