
வாழ்வில் வெற்றிபெற நினைக்கும் அனைவருக்கும் முக்கியத் தேவையாக இருக்க வேண்டியது வளர்ச்சி மனப்பான்மையே. பலரும் தன்னுடைய திறமைகளைக் குறைத்து மதிப்பிட்டு தன்னுடைய வளர்ச்சியைத் தானே தடுத்து கொள்கிறார்கள். வளர்ச்சி மனப்பான்மையை வளர்த்து வெற்றியடைவது எப்படி என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் Fixed Mindset;
வாழ்வில் வெற்றி அடைந்த மனிதர்கள், பெரும் பணக்காரர்கள் மற்றும் அரிய சாதனை புரிந்தவர்கள் குறித்து பலரும் சொல்வது ‘’அவருக்கு நேரம் நல்லா இருக்கு. அதனாலதான் அவர் தொட்டதெல்லாம் பொன்னாகுது. அதிர்ஷ்ட தேவதை அவர் பக்கம் இருக்கிறது’’ என்று சொல்வார்கள். வெற்றி அடைந்த மனிதனின் பின் இருக்கும் கடின உழைப்பு, நம்பிக்கை, விடாமுயற்சி போன்றவற்றைக் கருத்தில் கொள்ள மாட்டார்கள்.
புத்திசாலித்தனமும் திறமைகளும் ஒரு மனிதனுக்குப் பிறவியிலேயே வரும் குணங்கள் என்று பெரும்பான்மையான மக்கள் நினைக்கிறார்கள். அதனால் தான் தன்னுடைய புத்திசாலித்தனத்தையும் திறமைகளையும் குறைத்து மதிப்பிட்டு எந்த முயற்சியும் எடுக்காமல், தான் இருக்கும் நிலையிலேயே வாழ்வைத் தொடர்கிறார்கள். முயற்சி செய்து தன்னுடைய திறமைகளையும் புத்திசாலித்தனத்தையும் வளர்த்துக்கொள்ளலாம் என்று அவர்கள் நினைப்பதும் இல்லை, செயல்படுவதும் இல்லை. அதனாலேயே அவர்கள் வாழ்நாள் முழுக்க சாதாரண மனிதனாகவே வாழ்ந்து மடிகிறார்கள். வெற்றிபெற நினைக்கும் ஒவ்வொருவரும் முதலில் மாற்ற வேண்டியது தன்னுடைய மனநிலையைத்தான். ஃபிக்சட் மைண்ட் செட்டை மாற்றி வளர்ச்சி மனப்பான்மைக்கு மாறவேண்டியது மிகவும் அவசியம்.
ஃபிக்ஸட் மைன்ஸ் செட் உள்ளவர்கள் செய்யும் தவறுகள்;
இவர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை இதுதான். என்ன முயன்றாலும் பெரிதாக முன்னேறப் போவதில்லை என முடிவெடுத்து விடுவார்கள். தனக்கு அறிவும், திறமையும் கம்மி என நம்புவார்கள். எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என இலக்குகள் நிர்ணயிப்பதில்லை. செயல்பாடுகளில் தோற்று விடுவோமோ என்கிற பயம் இவர்களை ஆட்டிப்படைக்கும்.
பிறருடைய ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களைத் தவிர்ப்பார்கள். அதற்கு அஞ்சியே அவர்கள் பெரிய அளவில் முயற்சிகள் எடுப்பதில்லை. பெரும்பாலும் முன்னேற்றம் பற்றிய குறுகிய பார்வையைக் கொண்டிருப்பார்கள். தாங்கள் எடுக்கும் முயற்சியில் தோல்வி ஏற்பட்டு விடுமோ, அதனால் பிறர் தம்மைக் கேலி செய்வார்களோ என்று அஞ்சியும், முயற்சியில் வரும் சவால்களை சமாளிக்கப் பயந்தும் அவர்கள் முயலமாட்டார்கள்.
வளர்ச்சி மனப்பான்மை உள்ளவர்களின் மனநிலையும், செயல்பாடுகளும்;
வளர்ச்சி மனப்பான்மை உள்ளவர்கள் தன்னுடைய திறமைகள் மற்றும் புத்திசாலித்தனம், இவற்றில் குறைகள் இருந்தாலும் அவற்றை கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் கற்றல் மூலம் வளர்த்துக் கொள்ள முடியும் என்று நம்புவார்கள். அது போலவே செயல்படுவார்கள். தோல்வியடைந்து விடுவோம் என்று பயந்து அவர்கள் எடுத்த காரியத்தை பாதியில் விடுவதில்லை. மதிப்பு மிக்க கற்றல் அனுபவமாக தொடர்ந்து பின்னடைவுகளை எப்படி மேம்படுத்துவது என்று தவறுகளை பகுப்பாய்வு செய்து கொள்கிறார்கள். பிறருடைய கருத்து மற்றும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் தங்களை எப்படி மேம்படுத்துகிறது என்பதை குறித்து ஆராய்ந்து பார்ப்பார்கள்.
வெற்றி என்பது உள்ளார்ந்த திறமையால் விளையும் பலன் என்று ஃபிக்ஸட் மைண்ட் செட்டுக்காரர்கள் நினைக்க, விடாமுயற்சி கற்றல் ஆகியவற்றின் வழியே யார் வேண்டுமானாலும் வெற்றியடையலாம் என்று நினைப்பவர்கள் வளர்ச்சி மனப்பான்மை உள்ளவர்கள். தங்களுடைய செயல்பாடுகளில் உறுதியான மனப்பான்மையுடன் தொடர்ந்து செயல்படுவார்கள். உடனடி முன்னேற்றத்தை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்தி படிப்படியாக முன்னேறுவதைத்தான் அவர்கள் விரும்புவார்கள்.