
இன்றைய சூழ்நிலைக்கேற்ப எவ்வளவோ முக்கியமான, அதிலும் இப்போது இருக்கின்ற, இப்போது வாழ்கின்ற வாழ்க்கை நிலைக்கு வேண்டி பற்பல புதிய விஷயங்கள் கற்று, அறிந்து, தெரிந்து உணர்ந்து வைத்திருக்க வேண்டும். அப்படித் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகமிக அவசியமும் கட்டாயமும் கூட.
அதிலும் எவ்வளவு தெரிந்து வைத்திருக்கின்றோம் என்பது முக்கியமல்ல. அவரவர் வாழ்க்கை நிலைக்கு, சூழலுக்கு ஏற்ப என்னென்ன தெரிந்து வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம். வாழ்க்கை நிலைக்குத் தேவையில்லாத, ஒத்துவராத, வேண்டப்படாத பல விஷயங்களை தெரிந்து வைத்திருப்பதில் பயனில்லை.
தனக்குத் தெரியாததை கற்றுணர்ந்து தெரிந்து வைத்துக்கொள்வது ஒவ்வொரு மனிதனுடைய பொறுப்பு. அதோடு அது அவசியமும் கூட. அதிலும் தெரியாததை தைரியமாக கேட்டுக் கற்றறிந்து தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகத்தான் ஒவ்வொருவரும் அவரவருடைய வாழ்க்கையில் நிறையில் கேள்விகள் கேட்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
கேள்விகளைக் கேட்கத் தயங்கக்கூடாது. பயப்படக்கூடாது. பின் வாங்கக் கூடாது. கேள்விகள் கேட்கவில்லை என்றால் தெளிவான அறிவு வளர்ச்சி பெற முடியாமல், உணர்ந்துகொள்ள வேண்டியதை உணர்ந்துகொள்ளாமல் போய்விடும். திறந்த மனதுடன் கேள்விகள் கேட்க வேண்டும்.
யார் யாரிடம் கேள்விகள் கேட்கவேண்டும் என்பதும் மிக முக்கியம். அதைவிட்டு விட்டு ஒரு காரியத்தைச் குறித்து அதைக்குறித்து எதுவுமே அறிந்திராத தெரிந்திராத, சம்பந்தப்படாதவரிடம் கேள்வி கேட்பது தவறு. எந்த விஷயத்தையும் அது சம்பத்தப்பட்ட நபரிடம்தான் கேட்க வேண்டும். இதைவிட்டு விட்டு சம்பந்தமே இல்லாத நபரிடம் கேட்டு பதிலைப் பெற்று கார்யம் செய்தால் செய்யவேண்டிய கார்யம் கெட்டு விடும். காலமும் வீணாகும் பிறகு காலம் சரியில்லை, நேரம் சரியில்லை, மனிதர்கள் சரியில்லை என்று குறை கூறுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.
காரணம் கேள்விகளிலிருந்து பிறப்பது தெளிவு, தெளிவிலிருந்து பிறப்பது அறிவு, அறிவிலிருந்து தொடர்ந்து வருவது அறிவு வளர்ச்சி. அறிவு வளர்ச்சியிலிருந்து தோன்றுவது சிந்தனைபுரட்சி, சிந்தனை புரட்சியிலிருந்து பிறப்பது மனித வாழ்வில் புதுமை மறுமலர்ச்சி.
மனிதனுடைய வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மறுமலர்ச்சி இருந்துகொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் மனிதனுடைய மன வளர்ச்சி மேம்பாடு கண்டு வாழ்வும் செழித்தோங்கும். இதுதான் மனித குல பரிணாம வளர்ச்சி.