

'போப்பா, என்னைப் பார்த்தாலே நெறைய பேர் பொறாமைப்படுறாங்க' அப்படின்னு சில பேர் புலம்புவார்கள். பொறாமைப்படுவது, தனக்கு எதிரானது என்றும் தீங்கு விளைவிக்க கூடியது என்றும் நினைப்பார்கள்.
குயிலைப் பார்த்து காகமும், மானைப் பார்த்து ஆமையும் பொறாமைப்படலாம். ஏனென்றால், குயிலின் இனியகூவல் காக்கையிடம் இல்லை. மானின் வேகம் ஆமையிடம் இல்லை. அதே போல சிங்கத்தின் கர்ஜனைக் கேட்டு சிறுநரி கூட பொறாமைக் கொள்ளலாம்.
பொறாமைப் படுபவர்களால், நமக்கு ஒரு தீமையும் ஏற்படாது. அப்படி இருக்க நாம் ஏன் கவலைப்படவேண்டும்.
உங்களைப் பார்த்து பொறாமைப்படுகிறார்களா? அதற்காக சந்தோஷப்படுங்கள், கொண்டாடுங்கள். ஏனென்றால், உங்களிடம் இருக்கும் திறமைகள் அவர்களிடம் இருக்காது.
எப்போதும் புன்னகைத் தவழும் முகம் உங்களுடையது என்றால், பொறாமைப் படுபவர்களின் முகங்களைக் கூர்ந்து கவனியுங்கள். அது, ஏதோ போரில் புறமுதுகு காட்டியவன் முகம்போலவே இருக்கும்.
நீங்கள் நாலுபேருக்கு உதவுகிறீர்கள். அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். அதனால் உங்களுக்கு ஒரு திருப்தி ஏற்படுகிறது. அதைப் பார்த்து பொறாமைப்படுகிறார்களா, நாலு பேருக்கு உதவியதை எட்டுபேருக்கு என இரட்டிப்பாக்குங்கள். இன்னும் பொறாமைப் படட்டுமே!
பொறாமைக் குணம் பெண்களிடத்தில் அதிகம் என்பார்கள். ஆனால் உண்மையில் அது பொறாமையே இல்லை. அது 'தனக்கே உரித்தானது' என்ற மனப்பான்மையாகும். அதைப் பங்கீட்டால் தான் பிரச்சினையே.
தீயில் அகப்பட்டவன் ஒரு நாளில் குணமடைந்து விடுவான். ஆனால் பொறாமை தீயால் வெந்து போகிறவன் வாழ்வே கேள்விக் குறியாகும். நிம்மதியாக அவனால் உறங்க உண்ண முடியாது. மனம் முழுவதும் பொறாமை எண்ணங்களாலே சூழப்பட்டிருக்கும்.
அத்தகைய மனப்பான்மை கொண்டவரை உறவினர்களும், நண்பர்கள் வட்டாரத்திலும் ஒதுக்கியே வைத்திருப்பார்கள். 'ஆமை புகுந்த வீடு விளங்காது' என்பார்கள்.
ஆனால், ஒருவன் மனதில் பொறாமை புகுந்து விட்டால் அவ்வளவுதான். அடுத்த வீட்டு பெண்மணி இனோவா காரில் பவனி வருகிறாள் என்று பொறாமைப்பட்டால் என்ன செய்ய முடியும். அவர்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தார்கள். அவர்களின் குடும்ப உழைப்பு என்ன, அதனால் வந்த பயனை அனுபவிக்கிறார்கள் என்று விட்டு விட வேண்டும். அல்லது அவர்களைப் போல உழைத்து முன்னேற வேண்டுமே தவிர பொறாமை எண்ணம் அறவே கூடாது.
மிதிவண்டியில் போகிறவன், காரில் போகிறவனையும், காரில் போகிறவன் விமானத்தில் பறக்கிறவனையும் பார்த்து பொறாமைப்படுகிறார்கள். பொறாமைப் படுவதை விடுத்து தத்தம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதுதானே நமது கடமையாகும்.
நம் நாட்டு சுதந்திர போராட்டத்தில், காந்தியடிகள், ‘தண்டி என்ற இடத்தில் ஒரு பிடி உப்பு எடுக்க போகிறேன். முடிந்தால் தடுத்து பாருங்கள்’ என பிரிட்டிஷாருக்கு சவால் விட்டார். அதற்கு பிரிட்டிஷார் 'ஒரு பிடி உப்பா' அவர் எடுத்து விடுவாரா? கேலியும் செய்திருப்பார்கள். இந்த ஒல்லிகுச்சி ஒடம்புக்காரர் கூப்பிட்டால் மக்கள் ஓடோடி வரக்காத்திருக்கிறார்களே! என உள்ளுக்குள் பொறாமைப்பட்டிருப்பார்கள். அசந்தாரா? காந்தியடிகள் நினைத்ததை முடித்தார். அது மிகப்பெரும் போராட்டமாக உருவெடுத்து சுதந்திரம் பெறுவதற்கு உறுதுணையானது.
பொறாமைக் கொண்டவர்களிடம் செல்வ வளங்களை வழங்கும் திருமகள், அவர்களை தன் தமக்கையிடம் காட்டிவிட்டு தங்காமல் விலகி விடுவதாக வள்ளுவ பெருந்தகை கீழ்க்குறிப்பிட்ட குறள்வழியே கூறி உள்ளார்.
'அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.'
ஆதலால், பொறாமைப் படுபவர்களை அலட்சியப்படுத்துங்கள். இன்னும் முன்னேறுங்கள். பொறாமைப் படுபவர்கள் நன்றாய் பொறாமைப் படட்டுமே!