
மனித வாழ்க்கையில் பிறருக்கு உதவி செய்வதும் பிறரிடமிருந்து உதவியைப் பெறுவதும் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகும். ஒருவருக்கொருவர் உதவி வாழ்தலே சிறந்த வாழ்க்கை. ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் உதவி பெறாமல் வாழவே முடியாது என்பதே நிதர்சனம். ஏனெனில் நமது வாழ்க்கை முறை அப்படியாக வரையறுக்கப்பட்டுள்ளது. சரி. விஷயத்துக்கு வருவோம்.
நீங்கள் வங்கிக்கோ அல்லது தபால் அலுவலகத்திற்கோ செல்லுகிறீர்கள். அங்கே எழுதத் தெரியாத சிலர் வருவார்கள். அவர்கள் உங்களை அணுகி “சார் பணம் எடுக்கணும். கொஞ்சம் எழுதித்தாங்க” என்பார்கள். உங்களுக்கு நேரமிருந்தால் நிச்சயம் உதவி செய்யலாம்.
வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் செல்லுகிறீர்கள். உங்களுக்குப் பிறகு ஒருவர் நுழைந்து “சார் பணம் எடுக்கணும். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்று கேட்கலாம். அந்த நபர் உங்களுக்கு நன்கு பரிச்சியமானவராக இருந்தால் உதவி செய்யுங்கள். இல்லையென்றால் “சாரி“ என்று சொல்லிவிட்டுப் புறப்படுங்கள். ஏனென்றால் இதில் சில சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளது. உங்களிடம் உதவி கேட்பவர்கள் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஒருவேளை உங்களுக்கு நேரம் சரியாக இல்லையென்றால் சிக்கல் உங்களைத்தேடி வரும்.
இரண்டு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நண்பர் லிப்ட் கேட்கலாம். அவரை ஏற்றிக் கொண்டு செல்லுங்கள். ஆனால் முன்பின் தெரியாத நபராக இருந்தால் லிப்ட் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். முன்பின் தெரியாத நபர்களுக்கு லிப்ட் கொடுத்து அவர்கள் கெட்டவர்களாக இருக்கும் பட்சத்தில் அதன் மூலம் சிக்கல்களைச் சந்தித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
சில சமயங்களில் உங்களிடம் சிலர் பணத்திற்கு ஜாமின் கையெழுத்து கேட்பார்கள். அப்படிக் கேட்பவர் உங்களுடைய நெருங்கிய உறவினராக இருந்தாலோ அல்லது நேர்மையான நெருங்கிய நண்பராக இருந்தாலோ அவருக்கு கையெழுத்து போட்டு உதவலாம். கூடுமானவரை ஜாமின் கையெழுத்து போடுவதைத் தவிர்க்கப் பாருங்கள். உடன் பணியாற்றுபவர் மற்றும் அவ்வளவு நெருக்கமில்லாத உறவினர், நண்பர்கள் கேட்கும்போது தயவு தாட்சண்யம் பார்க்காமல் “சாரி. ஏற்கெனவே ஒருவருக்கு ஜாமின் கையெழுத்துப் போட்டுள்ளேன். மற்றொரு ஜாமின் போட இயலாது” என்று ஒரு பொய்யையாவது சொல்லி தவிர்த்து விடுங்கள்.
நன்கு பழகிய நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருக்கமான உறவினர் எவரேனும் அவசரத் தேவைக்குப் பணம் கேட்டால் அந்த தொகையை அவர்களுக்கு உங்களால் கொடுத்து உதவ முடிந்தால் கொடுத்து உதவுங்கள். பணத்தை கேட்ட உடனேயே கொடுத்து விடாதீர்கள். இரண்டொரு நாள் கழித்துக் கொடுங்கள். பொதுவாக வேறு யார் பணத்தைக் கடனாகக் கேட்டாலும் பணத்தைத் தந்து உதவாதீர்கள். பணம் கொடுத்து உதவி அந்த பணம் திரும்ப வராமல் பிரச்னையை சந்தித்து நட்புகளையும் உறவுகளையும் இழந்தவர்கள் ஏராளம்.
உங்களை அணுகி எனக்கு இந்த உதவியைச் செய்யுங்கள் என்று ஒருவர் கேட்டால் மட்டுமே அது உங்களால் செய்ய முடிந்த உதவியாக இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். நீங்களாகவே வலியக் சென்று உதவும் பழக்கத்தை இன்றோடு கைவிடுங்கள். பிறர் நம்மிடம் உதவி கேட்ட பின்பு நாம் உதவும் போதுதான் அதன் அருமை உதவி கேட்பவர்களுக்குப் புரியும். நீங்களாகவே வலியச் சென்று உதவினால் அதிலிருக்கும் கஷ்ட நஷ்டங்கள் அவர்களுக்குப் புரியாது. பிறகொருநாள் ஏதாவது இதுகுறித்துப் பேச்சு வரும்போது “நானா உங்க கிட்டே வந்து உதவி கேட்டேன். நீங்களாவே வந்து உதவிட்டு இப்ப சொல்லிக் காட்டுறீங்களே” என்று அவர்கள் உங்களைக் கேட்க நேரிடும். அப்போது உங்கள் மனது ஏகமாக வலிக்கும்.
சக மனிதர்களுக்கு உதவி செய்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை. ஆனால் ஒருவருக்கு உதவி செய்து அதனால் பிரச்னைகளையும் சிரமங்களையும் நாம் சந்திக்கக் கூடாது. யாருக்கு எந்த சமயத்தில் உதவவேண்டும். யாருக்கு உதவக்கூடாது என்ற சில நியதிகள் வாழ்க்கையில் உள்ளன. இதைப் புரிந்து கொண்டு சரியான நபர்களுக்கு உதவி செய்து மகிழ்ச்சிகரமாக வாழுங்கள். உங்கள் உதவியின் மூலம் பிறர் மகிழ்ச்சியாக வாழவும் அதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சி அடையவும் உங்கள் உதவி அமைய வேண்டும்.