
இன்றைய குழந்தைகளுக்கு ஏட்டுப் படிப்பு மட்டுமல்லாமல், பிற கல்விகளும் முக்கியமாக தேவைப்படுகிறது. எனவே பெற்றோர்கள் அவர்களுக்கு அதனை கற்க வாய்ப்பு அளித்து, நல்ல முறையில் கற்றுணர வழிவகுக்க வேண்டும்.
மதிப்பெண்களை வாங்குவது மட்டுமே இலட்சியமாக இல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் தங்களுடைய புத்தகங்களில் படித்த கருத்துகளை வாழ்க்கையில் மறக்காமல் வைத்துக்கொண்டு, அதில் உள்ள அர்த்தங்களை உணர்ந்து மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.
தினமும் குழந்தைகளுடன் அரைமணி நேரமாவது அமர்ந்து அவர்களின் பள்ளிப் படிப்பில் பாட புத்தகத்தில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். அது அவர்களுக்கு கற்கும் ஆர்வம் மேலும் மேலும் வளரும்.
தங்களுக்கு தேவையான கட்டுரை, கவிதை போன்றவற்றை எழுத ஊக்குவிக்க வேண்டும். பிறகு அதைச் சீர்படுத்தி, திருத்தி கொடுத்தால்தான் அது பயனுள்ளதாக இருக்கும்.
ஒவ்வொரு விசேஷ நாளிலும் அவர்களுக்கு ஏதாவது ஒரு புத்தகத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும். புத்தகம் வாங்கிக் கொடுக்கும்போது, அந்த புத்தகத்தின் சிறப்புகள் மற்றும் எழுத்தாளரைப் பற்றிய குறிப்பு கூறி கொடுத்தால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
புத்தகங்களை வாங்கும்போது, அவர்கள் என்ன தேவை, அந்த புத்தகத்தின் உள்ளடக்கம் அவர்களுக்கு எப்படிப் பொருந்தும் என்பதைக் கேட்டுத் தெரிந்து வாங்கவேண்டும்.
மதிப்பெண்கள் மட்டுமே கல்வி அல்ல; புரிந்து படித்தல் மட்டுமே வாழ்க்கைக்கு என்றும் உதவும். புரிந்து படித்த கல்விதான் வாழ்க்கையை மேலும் உயர்த்தும்.
ஒரு புத்தகத்தில் உள்ள கருத்துக்களை விளையாட்டு போலப் பேசி அவர்களிடம் பதிய வைக்கவேண்டும். பத்திரிகை வாசிப்பு, நாளிதழ் வாசிப்புகள் போன்றவை அவர்களின் ஆர்வத்தை வளர்க்கும். வாசிப்பை நேசிக்க கற்றுக்கொடுத்தாலே போதும் – அவர்களுடைய படிப்பார்வம் வளர்ந்துவிடும்.
அவர்கள் பள்ளியில், தங்களுடைய வயதுடைய மாணவர்களுடன் பேசி நட்புறவு வளர்க்க வேண்டும். எந்த போட்டியாக இருந்தாலும் கலந்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும். கட்டுரை, கவிதை போன்ற போட்டிகளில் கலந்துகொண்டாலே மேடை பயம் குறையும்.
ஓவியத்தில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு ஓவிய புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம். கவிதை, கட்டுரை எழுத ஆர்வம் உள்ளவர்களை பயிற்றுவித்து ஊக்குவிக்க வேண்டும்.
இன்று எல்லோரும் வேலைக்குச் செல்லும் நிலையில் இருக்கின்றனர். அதனால், தங்கள் குழந்தைகளின் படிப்புத் தேவைகளை அறிய இயலாமல் போகிறது. ஏதாவது ஒரு பயிற்சி மையத்தில் அனுப்பிவிட்டால் மட்டும் போதாது. அவர்களை மதிப்பெண் பெறுவதில் மட்டுமே முயற்சிக்க செய்வது தவறானது.