
நம்மில் பலரும் பல நேரங்களில், செய்யவேண்டிய வேலைகளில் கவனமின்றி மனச்சோர்வுடன் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்க்கிறோம். இதற்கு காரணமாக அவர்கள் கூறுவது சமூக வலைத்தளங்கள், உடலில் சக்தியின்மை, அதிகளவு மீட்டிங் போன்றவையாகும். ஆனால் உண்மையான காரணம் அவர்களின் தவறான பழக்க வழக்கங்களேயாகும். அவர்கள் நல்ல மனநிலையுடன் பணியாற்ற என்னென்ன பழக்கங்களை எப்படி மாற்றி அமைக்கவேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. உட்கார்ந்த இடத்திலேயே அசையாமல் ஒருவர் இருப்பது ஈடுபாட்டுடன் வேலை செய்ய ஆரம்பிப்பதற்கு தடை உண்டாக்கும். அவர்களின் மூளைக்கு சரியான அளவில் இரத்தம் செல்லாமலிருப்பதே இதற்கு காரணம். மூளை புத்துணர்ச்சியுடன் செயல்பட ஒரு மணிக்கு ஒருதரம் எழுந்து நிற்பது, கை கால்களை நீட்டி மடக்குவது, சிறிது நடப்பது போன்ற பழக்கங்களை பின்பற்றுதல் அவசியம்.
2.சிலர் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணரக்கூடிய முக்கிய வேலைகளில் கவனம் செலுத்தாமல், ஈமெயில் பார்ப்பது, நோட்டிபிகேஷன்களை வாசிப்பது போன்ற மேம்போக்கான செயல்களில் நேரத்தை செலவிடுவர். இவற்றையெல்லாம் தவிர்த்து முக்கியமான வேலையில் முழு மனதுடன் ஈடுபடுவது பலன் தரும்.
3.இரவில் ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் போவதும் வேலையில் கவனம் செலுத்துவதற்கு தடையாகும். சரியான நேரத்திற்கு படுக்க சென்று தொந்தரவில்லாத தூக்கம் பெறுவது ஞாபக சக்தி, அறிவாற்றல், கவனம் மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த உதவும்.
4.வேலையில் கவனமின்றி இருப்பதற்கு அதிகளவு காபி குடிப்பதும் ஒரு காரணம். ஒரு நாளில் இரண்டு கப் காபி மட்டும் அருந்துவது படபடப்பு, கவனக்குறைவு, சக்தியின்மை போன்ற குறைபாடுகள் வருவதைத் தடுக்கும். அடிக்கடி தண்ணீர் குடித்து சிறிய நடைப்பயிற்சி அல்லது மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வது சுறு சுறுப்புடன் வேலையில் ஈடுபட உதவும்.
5.பணிபுரியும் சூழலை கவனச்சிதறலுக்கு வாய்ப்பளிக்காமல், போதுமான வெளிச்சமிருக்குமாறு அமைத்துக் கொள்ளுதல் மனத் தெளிவுடன் திறமையாக பணிபுரிய உதவும்.
6.சீரமைக்கப்படாத சிந்தனைகள், கவலைகள், முடிக்கப்படாத வேலைகள், நினைவூட்டல்கள் போன்றவற்றால் நிரம்பி வழியும் மூளைக்கு கையிலிருக்கும் வேலையை கவனச் சிதைவின்றி செய்து முடிப்பது இயலாத ஒன்றாகிவிடும். நாளின் முடிவில் மூளைக்குள்ளிருக்கும் குப்பைகளை மூட்டை கட்டி வைக்கப் பழகிக் கொண்டால் வேலையை சுலபமாக செய்து முடித்து விடலாம்.
7.நவீன காலத்தில் மீடியா மற்றும் வலைத்தளம் வழியாக பலவகையான செய்திகளையும் மூளைக்குள் சேமித்து வைத்துக் கொள்கிறோம். இதன் காரணமாகவும் மூளைக்கு வேலையில் கவனம் செலுத்த சிரமமாகிறது. எனவே செய்திகளை அறிந்து கொள்ள குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, மற்ற நேரங்களில் கவனமுடன் வேலை செய்தல் வேலையின் தரத்தை உயர்த்த உதவும்.
8.ஒரு வேலை செய்யும்போது இன்னொன்றில் கவனத்தை திசை திருப்புதல் இரண்டையும் முடிக்க முடியாததாக்கிவிடும். எனவே எடுத்த வேலையை முடிக்கும்வரை வேறெதிலும் கவனம் செல்லவிடாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.