
பலரிடமும் இருக்கும் நடுத்தர வர்க்க மனநிலை மனிதர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் முக்கியமான அம்சமாகும். இந்த மனநிலை உள்ள மனிதர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்குவார்கள். இவர்கள் வாழ்வில் எப்பொழுதும் பொருளாதாரப் போராட்டங்கள் நிறைந்திருக்கும். கடினமாக வேலை செய்தாலும் கூட தன்னால் பணக்காரனாகவோ வெற்றியாளராகவோ ஆக முடியாது என்று நினைப்பார்கள். நடுத்தர வர்க்க மனநிலையில் இருந்து தப்பித்தால் மட்டுமே ஒருவரால் வாழ்க்கையில் நினைத்ததை சாதிக்க முடியும்.
நடுத்தர வர்க்க மனநிலை:
பெரும்பான்மையான மக்கள் ஒரு நிலையான வேலை, சொந்த வீடு, ஓரளவு பணவசதி இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். சமூகத்தால் ஏற்படுத்தப்பட்ட இந்த கண்ணுக்குத் தெரியாத பொறியில் நிறைய பேர் சிக்கிக் கொண்டுள்ளார்கள். இதனால் வாழ்க்கையில் அவர்களால் எதுவும் பெரிதாக சாதிக்க முடியாமல் போகிறது.
நடுத்தர வர்க்க மனநிலையில் இருந்து தப்பிக்கும் வழிகள்.
1. அடையாளம் கண்டு கொள்வது:
நடுத்தர வர்க்க வசதிகள் என்பது ஒரு எல்லைக்கு உட்பட்டவை என்பதை முதலில் ஒருவர் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். தற்போதைய சவுகரியத்தை மட்டும் நினைக்காமல் எதிர்கால வசதிகளையும் வெற்றிகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும். தனக்குப் பிடித்த சவுகர்யமான வாழ்க்கை முறையிலிருந்து வெளியே வந்து ரிஸ்க் எடுத்து கடினமான செயல்களை செய்யும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
2. அதிக வருமானம் ஈட்டும் திறன்களை உருவாக்குதல்:
அதிக வருமானம் தரும் துறைகளை தேர்ந்தெடுத்து அது சார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை கற்றுக் கொள்வதும் தேர்ச்சி பெறுவது மிக முக்கியம். விற்பனை, சந்தைப்படுத்துதல், கோடிங், காபிரைட்டிங், டிசைனிங், தலைமைத்துவம் போன்ற அரிதான திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். முதலாளி தரும் சம்பளத்தை மட்டும் நம்பிராமல் தனக்கான சொந்த வாய்ப்புகளை தானே உருவாக்க வேண்டும். பணக்காரர்கள் 24 மணி நேர வரம்பைத் தாண்டி பணம் ஈட்டுகிறார்கள்.
3. மனநிலையை மாற்றுதல்:
பல நடுத்தர வர்க்க மக்கள் பற்றாக்குறை மனநிலையை கொண்டுள்ளனர். போதுமான பணத்தை தங்களால் சம்பாதிக்க முடியாது அல்லது அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று நினைக்கிறார்கள். இந்த மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். வாய்ப்புகள் எல்லா இடங்களிலும் உள்ளன. புத்திசாலித்தனமாக உழைத்து அதில் உள்ள ஆபத்துகளையும் திறமையாக கையாண்டு நினைத்ததை அடைய முடியும். செல்வத்தை உருவாக்க முடியும் என்றும் நம்பும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்
4. நிதி சுதந்திரம்:
வேலையில் இருந்து பணம் சம்பாதிப்பதற்கு பதிலாக பங்குகள், ரியல் எஸ்டேட் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவற்றை செய்யலாம். சொந்தத் தொழில் தொடங்கி, பணத்தை நிறைய சம்பாதிப்பதில் கவனம் செலுத்தலாம். செயலற்ற வருமானத்தை ஈட்டும் சொத்துக்களை உருவாக்குவது நிதி சுதந்திரத்திற்கு முக்கியமானதாகும்.
5. நல்ல நண்பர்கள்:
செல்வந்தர்களும் வெற்றியாளர்களும் எவ்வாறு சிந்திக்கிறார்கள்? செயல்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் பழக்க வழக்கங்கள், பயன்படுத்தும் டெக்னிக்கைகள் போன்றவற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் லட்சியம் மிக்கவர்களாகவும், உங்களை ஊக்குவிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்களைத் தேடிப் பழக வேண்டும்.
6. நிதானமான முன்னேற்றம்:
திடீரென்று ஒருவரால் வெற்றியாளராகவோ செல்வந்தராகவோ முடியாது. பொறுமை, விடாமுயற்சி, ஒழுக்கம் போன்றவற்றின் மூலமே நிதானமான முன்னேற்றம் ஏற்படும். விரைவான உடனடி முடிவுகளை எதிர்பார்க்கக் கூடாது.