
எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்துகொள்ள உதவுவது புத்தகங்களே. முன்னோர்கள் அறிவையும் அனுபவத்தையும் நமக்குள் இறக்கிவைக்கிற நண்பர்கள் தான் நூல்கள். "உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்" என்கிறார் அமெரிக்க கவிஞர் வாங்ஃபெல்லோ.
ஆயிரமாயிரம் மகரந்த சேர்க்கையே தேன் கூடாகிறது. கருத்துக்களின் சேகரமே புத்தகங்கள். புத்தகத்தைத் திறப்பில் அறிவுச் சுரங்கத்தின் வாயில் திறக்கப்படுகிறது. நண்பர்களில் கூட சில சமயங்களில் சறுக்க நேரலாம். ஆனால் புத்தகங்கள் நம்மை ஒருநாளும் கைவிடாத நண்பர்கள்.
"வாசிப்பு எப்போதும் ஒருவனை தயாராக இருப்பவராக உருவாக்குகிறது" என்றார் ஃப்ரான்சிஸ் பேகன் என்ற அறிஞர். படையெடுப்பின்போது நூல்களைப் பாதுகாத்த மன்னர்கள் வரிசையில் அலெக்சாண்டர், பாபர் ஆகியோர் முதன்மையானவர்கள் அரண்மனை நூலகத்தில் ஏராளமான நூல்களை சேகரித்து வைத்த அக்பர் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்றாலும் நல்ல நூல்களை வாசிக்கச் சொல்லி கேட்டதன் விளைவாக சான்றாளராக விளங்கினார்.
வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத் திறனைக் கூட்டும். கற்பனையையும், மேதாவிலாசத்தையும் செழுமை செய்யும். வாசிப்பது என்பது சிறுகதை அல்ல. அது ஒரு தொடர்கதை. கிரேக்க நாட்டு சிந்தனையாளர் சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டேயிருந்தாராம்.
லிபியா நாட்டு உம்ரா முக்தர் என்ற புரட்சியாளர் தூக்குக் கயிற்றை மாட்டும் வரை படித்துக் கொண்டிருந்தாராம். நேரு தான் மறைந்த பின் தன் சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக் கூடாது புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பேரறிஞர் அண்ணா புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபோது இன்று உங்களுக்கு அறுவைசிகிச்சை என்று மருத்துவர்கூற, தான் படிக்கும் புத்தகத்தை முடிக்கும் வரை சிகிச்சையைத் தள்ளிவைக்கச் சொன்னாராம்.
முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் ஒரு நாளில் 12 மணிநேரம் படிப்பதிலும் சிந்திப்பதிலும் செலவிடுவாராம். ரஷ்ய இரும்பு மனிதரான ஸ்டாலினைக் கவர்ந்த பேரறிஞராக விளங்கக் காரணம் அவருடைய நூல் படிக்கும் பழக்கமே. ஒருவரின் நேரம் வெட்டிப் பொழுதாக ஆகாமல் வெற்றிப் பொழுதாக மாற்றும் வல்லமை நூல்கள் வாசிப்பிற்கே உண்டு.
மகாத்மா காந்தியைப் பார்த்து நீங்கள் எப்படி மகாத்மா ஆனீர்கள் என்று கேட்க அவர், "உலகம் போற்றும் சான்றோர்களுடைய வாழ்க்கையின் அனுபவங்களை அறிந்துகொண்டு அவர்கள் எங்கு முடித்தார்களோ அதிலிருந்து நான் வாழ்க்கையை தொடங்கினேன்.
அதனால் மகாத்மாவாக ஆக முடிந்தது" என்றாராம். நாம் மகாத்மாவாக ஆகவேண்டாம். குறைந்தபட்சம் முழுமையான மனிதர்களாக ஆக வேண்டாமா?. அதற்காகவாவது படிக்க வேண்டும்.