எண்ணங்கள் மூலம் வாழ்வில் ஏற்றம் பெறுவது எப்படி?

motivation Image
motivation Imagepixabay.com

‘’எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்’’

ஒரு செயலை செய்ய எண்ணுபவர் அந்த செயலை செய்து முடிப்பதற்கு ஏற்ற மன உறுதியும் வலிமையும் உடையவராக இருந்தால் அவர் எண்ணியவாறு வெற்றி பெறுவார் என்கிறார் திருவள்ளுவர். மற்றொரு குறளில் கூட ‘’உள்ளத் தனையது உயர்வு’’ என்கிறார். தாம் நினைத்த வண்ணமே ஒருவரால் வாழ்வில் உயரமுடியும். எண்ணங்களை மேம்படுத்தி அதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

எண்ணங்களுக்கு எப்போதுமே மிகுந்த சக்தியும் வலிமையும் உண்டு. ‘’எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே ’எண்ணல் வேண்டும்’’ என்கிறார் பாரதியார். நாம் ’எண்ணும் எண்ணங்கள் நல்லதாகவும் ஆற்றல் மிக்கதாகவும் இருக்க வேண்டும். ஒருவருடைய வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை எண்ணங்களால் ஏற்படுத்த முடியும்.

‘’தான் வலிமையானவன், தன்னால் எதுவும் செய்ய முடியும், எதையும் சாதிக்க முடியும்’’ என்று ’எண்ணுபவரால் அவர் எண்ணப்படியே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும். ‘’தான் எதற்கும் லாயக்கில்லை, ’’என்னால் முடியாது’’ என்று நினைப்பவரின் வாழ்வு அவர் எண்ணத்திற்கு ஏற்றார் போலவே மிகுந்த சிக்கல்களையும் துயரத்தையும் உடையதாக இருக்கும். எனவே எதிர்மறை சிந்தனைகளைக் களைந்து அவற்றைப் புறந்தள்ளி நல்ல எண்ணங்களை எண்ணுவது மிக முக்கியம்.

எதிர்மறை எண்ணங்கள் தலை தூக்கும் போது அவற்றை மனதில் இருந்து அகற்றும் வண்ணம் நேர்மறையான, யதார்த்தமான சிந்தனைகளை மனதில் நிரப்ப வேண்டும். நமது அறிவாற்றலால் இந்த மறுசீரமைப்பை செயல்படுத்த முடியும். எண்ணங்களை மாற்றி அமைக்கும் போது மனநிலையும் மேம்படும்.

தன் மேல் சுய நேசிப்பு இருப்பது மிகவும் அவசியம். தன்னை ஒருவர் நேசித்தால் மட்டுமே பிறரிடம் அவரால் அன்பும் கருணையும் காட்ட முடியும். அவர்களைப் புரிந்து கொள்ளவும் முடியும். இந்த உலகில் பிறந்த அனைவருமே சில சமயங்களில் சில தவறுகளை செய்வார்கள். தானும் அந்த தவறுகளை செய்யக்கூடும் என்று உணர்ந்து கொண்டு தன்னையும் மன்னித்து பிறரையும் மன்னித்து ஏற்றுக் கொள்வது அவரது மனநிலைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இதையும் படியுங்கள்:
கூர்க்கில் சுற்றிப்பார்க்க வேண்டிய 5 அழகிய இடங்களைப் பற்றி காணலாம்!
motivation Image

எண்ணங்களை நல்லதாக வடிவமைத்துக் கொள்வதற்கு முதலில் எதார்த்தமான எதிர்பார்ப்புகளை அமைத்துக் கொள்ளவும், நம்பத் தகுந்த நடக்கக்கூடிய விஷயங்களை எதிர்பார்க்க வேண்டும். அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவதற்கான முயற்சிகளை செய்து சிறு வெற்றிகளை கூட கொண்டாட வேண்டும். இதனால் எதையும் சாதிக்கலாம் என்கிற எண்ணம் உருவாகும். நேர்மறை எண்ணம் இன்னும் வலுப்படும்.

நேர்மறையான சுய கவனிப்பில் ஈடுபட வேண்டும். தன்னுடைய மனம் எதைப் பற்றி நினைக்கிறது என்பதில் கவனம் வைக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம் போன்றவையும் மிகவும் அவசியம். நேர்மறையான நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுடன் நேரம் செலவழிக்க வேண்டும்.

வாழ்க்கையில் எப்போதும் நன்றி உணர்வு பாராட்டுவது எண்ணங்களை நேர்மறையாக வைத்துக் கொள்ள உதவும். சிறிய விஷயங்களுக்கு கூட பிறருக்கு மறக்காமல் நன்றி தெரிவிக்க வேண்டும். அதனால் மனிதர்கள் மீதும் இந்த உலகத்தின் மீதும் ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படும். அவர்களைப் பற்றிய நல்ல எண்ணங்களே மனதில் மேலோங்கும்.

கடந்த காலத்தையும் வருங்காலத்தையும் நினைத்து கவலைப்படக்கூடாது. கடந்த காலக் கசப்புகளை துடைத்து எறிந்து விட்டு வருங்காலத்தைப் பற்றிய பயத்தையும் அகற்றிவிட்டு நிகழ் காலத்தில் வாழ வேண்டும். அதனால் எண்ணங்கள் தூய்மையாகும். அப்போது செய்யும் வேலையில் கவனம் வைக்கும் போது எண்ணம் அதில் குவிந்திருக்கும். அதனால் சுய விழிப்புணர்வோடும் மனநிறைவோடும் வேலை செய்ய முடியும். இது மன அழுத்தத்தையும் மனச்சோர்வையும் விரட்டி மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நல்ல எண்ணங்களை எண்ணுவதன் மூலம் ஒருவர் தன்னுடைய நிகழ்கால வாழ்க்கை மோசமாக இருந்தாலும் அதை மிகப் பிரகாசம் ஆக நல்ல முறையில் மாற்றி அமைக்க முடியும். அதற்கு ஆதாரமாக உள்ள எண்ணங்களை பற்றிக் கொண்டு எப்போதும் நேர்மறையாக நல்லவிதமாக சிந்திக்க வேண்டும். இதனால் வாழ்வில் ஏற்றம், வெற்றி, மகிழ்ச்சி எல்லாம் வந்து சேரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com