

"நம்முடைய உழைப்புக்கு ஏன் தகுந்த மரியாதை கிடைப்பதில்லை?" – இந்த கேள்வி நம்மிடம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, கைம்மாறாக ஒரு சிறு மரியாதையை (How to earn respect) மட்டும் எதிர்பார்ப்பவர்களின் மனதில் என்றாவது ஒருநாள் நிச்சயம் தோன்றும்.
நம்முடைய நல்ல குணத்தையே பலவீனமாக நினைத்து, நம்மைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கூட்டம் இந்த உலகத்தில் எப்போதும் இருக்கவே செய்கிறது. எவ்வளவுதான் ஓடி ஓடி உழைத்தாலும், நமக்கான அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காதபோது மனம் சோர்வடைவது இயற்கை.
இந்த நிலையை மாற்றி, சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பையும் மரியாதையையும் நீங்கள் எப்படிப் பெற வேண்டும் என்பதைப் புரிய வைக்கிறது இந்த தத்துவக் கதை.
ஒரு ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் நல்லவன், கடினமாக உழைக்கக்கூடியவன்; ஆனால், சற்று மக்கு. அதனாலோ என்னவோ, அவனிடம் நிறைய பேர் வேலை வாங்குவார்கள்; ஆனால், அவனுக்கான சரியான மரியாதையைத் தர மாட்டார்கள். ரொம்ப நாட்களாக அவனுக்கு இது புரியவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் அவனும் அதை உணரத் தொடங்கினான்.
இதனால் அவன் மனவருத்தம் அடைந்தான். 'எதனால் நமக்கான மரியாதை நமக்குக் கிடைக்கவில்லை?' என்று அவனுக்குள்ளேயே கேட்டுக்கொண்டான். இந்த மாதிரியான கேள்விகளைத் தன் மனதிற்குள் சுமந்துக்கொண்டே, அவன் ஒரு மரத்தின் அடியில் வந்து நின்றான். அந்த மரம் ஒரு அதிசய மரமாக இருந்தது.
அதென்ன அதிசய மரம்?
அந்த மரத்தால் மனிதர்கள் பேசுவதைக் கேட்க முடியும், பதிலுக்குப் பேசவும் முடியும். இவன் அந்த மரத்திற்கு கீழே நின்றுகொண்டு, 'எதனால் எனக்கு மரியாதை கிடைக்கவில்லை?' என்று யோசித்துக் கொண்டிருந்தான் அல்லவா?
இப்போது அந்த மரம் இவனிடம் பேசத் தொடங்கியது:
"உன்னை யாரும் மதிக்கவில்லை என்றுதானே வருத்தப்படுகிறாய்? அப்படியானால் ஒன்று செய். முதலில் உன் நேரத்தை நீ மதிக்கக் கற்றுக்கொள். உன் நேரத்தை மதிப்பவர்களுக்காக மட்டுமே நீ பழகு. உன் நேரத்தை வீணாக யாருக்காகவும் செலவிடாதே! இதை நீ சரியாகச் செய்தாலே, உனக்கான மரியாதை தானாகத் தேடி வரும்" என்று சொன்னது.
அந்த மரம் சொன்னதை வேதவாக்காக எடுத்துக்கொண்டான் அந்த இளைஞன்.
அதன் பிறகு, யாரெல்லாம் அவனுடைய நேரத்திற்கு மதிப்பளித்தார்களோ, அவர்களுக்காக மட்டுமே வேலை செய்தான்; அவர்களோடு மட்டுமே பழகினான். தன் வாழ்வின் ஒவ்வொரு மணிநேரத்தையும் பயனுள்ளதாகவும் லாபகரமாகவும் மாற்றினான். சீக்கிரமே அவனுக்கான செல்வமும், புகழும், மரியாதையும் அவனைத் தேடி வந்தன.
உங்களுக்கும் இதேதான்! இனி உங்கள் வாழ்வின் ஒவ்வொரு மணித்துளியையும் வீணடிக்கும் போதும், இந்தத் தத்துவக் கதையை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.