நமக்குள் இருக்கும் குப்பை: ஜாகீர் உசேன் சொன்ன அந்த ஒரு விஷயம்!

புறக்குப்பைகளை அகற்றி குப்பைத்தொட்டியில் போடுவதைப் போல அகக்குப்பைகளையும் நாம் நம் மனதிலிருந்து அகற்றப்பழகினால் மகத்தான வாழ்வினைப் பெறலாம்.
Professor Dr. Zakir Husain teaching cleanliness
Professor Dr. Zakir Husain - positive thoughts
Published on

குப்பை என்பது வேண்டாத ஒரு பொருள் என்பது நமக்கெல்லாம் தெரியும். நாம் வேண்டாத பொருட்களை அவ்வப்போது நம் வீட்டிலிருந்து அகற்றி குப்பைத்தொட்டியில் போடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். புறக்குப்பைகளை அகற்றி குப்பைத்தொட்டியில் போடுவதைப் போல அகக்குப்பைகளையும் நாம் நம் மனதிலிருந்து அகற்றப்பழகினால் மகத்தான வாழ்வினைப் பெறலாம்.

நம் மனமானது ஒரு குப்பைத் தொட்டி அல்ல என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். நம் மனமானது புனிதமானது. அதில் தூய சிந்தனைகளுக்கும் நல்ல எண்ணங்களுக்கு மட்டுமே இடம் தர வேண்டும். நமது மன ஆரோக்கியமே நம் வாழ்வைப் புனிதமாக்குகிறது. வாழ்வை அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகிறது.

இந்தியாவின் குடியரசுத்தலைவராக 1967 முதல் 1969 வரை பதவி வகித்தவர் ஜாகீர்உசேன். மிகச்சிறந்த கல்வியாளர். ஜெர்மனியில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் தில்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 1926 முதல் 1948 வரை துணைவேந்தராய் பணியாற்றியவர்.

ஒருநாள் பாடம் நடத்த வகுப்பிற்குச் சென்ற போது வகுப்பிற்கு வெளியே குப்பைகள் கிடந்ததைக் கண்டார். அவற்றை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். பாடம் நடத்தி முடித்ததும் தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து குப்பைகளை எடுத்து மேஜை மீது வைத்தார். மாணவர்கள் அதைக் கண்டு வியந்தார்கள்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தம் போக்கி மனமகிழ்ச்சி தரும் 5 விஷயங்கள்!
Professor Dr. Zakir Husain teaching cleanliness

“ஏன் இப்படிப் பார்க்கீறீர்கள். இவை உங்கள் வகுப்பிற்கு வெளியே கிடந்த குப்பைகள்தான். கல்விச்சாலை மிகவும் புனிதமானது. அதைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டியது நம் அனைவரின் கடமை அல்லவா? புறத்தூய்மை கடமை; அகத்தூய்மை பெருமை! கடமையை செய்தால் பெருமை கூடும்! நீங்கள் செய்யத் தவறிய கடமையை நான் செய்தேன். இனி குப்பைகளை குப்பைத் தொட்டியில் போடப்பழகுங்கள்,” என்றார்.

தாங்கள் அலட்சியமாகப் போட்ட குப்பையை மிகப்பெரிய பொறுப்பில் உள்ள துணைவேந்தர் கௌரவம் பார்க்காமல் பொறுப்போடு அகற்றியிருக்கிறாரே என்று நினைத்து மாணவர்கள் வேதனைப்பட்டனர். அவர்களின் மனதில் ஒரு பெரும் மாற்றம் நிகழ்ந்தது.

நாம் நல்லதையே எண்ண வேண்டும். நல்லதையே பேச வேண்டும். பிறர் உயர்வை நம் உயர்வாக எண்ண வேண்டும். மனம் போல வாழ்வு என்பார்கள். நம்மில் பலர் உறவினரையோ அல்லது நண்பரையோ பார்த்து உரையாடும் போது நன்றாகப் பேசுவார்கள்.

ஆனால் மனதுள் அவரைப் பற்றிய பொறாமை எண்ணங்கள் நிரம்பி வழியும். அவர் வாழ்வில் சிக்கலைச் சந்திக்க நேர்ந்தால் அதை நினைத்து மனமானது மகிழ்ச்சி அடையும். இதுவே மனக்குப்பையாகும். நம்மில் பலருக்கு நாம் மட்டுமே ராஜபோகமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதுவும் மனக்குப்பைதான்.

உடலைப் போலவே மனதையும் நாம் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளப் பழக வேண்டும். இது எப்படி சாத்தியமாகும் ? நல்லவர்களுடன் நட்பு கொள்ளுதல், நல்லவற்றையே பார்த்தல், நல்லவற்றையே பேசுதல், சகமனிதர்கள் நல்லவற்றைச் செய்தால் அவர்களை மனதாரப் பாராட்டுதல், பிறர் துன்பம் கண்டு இரங்குதல், ஏழைகளுக்கு உதவுதல், சக மனிதர்களை மதித்து அவர்களிடம் மரியாதையுடன் பழகுதல் முதலான செயல்களைச் செய்து வந்தாலே போதும். நம் மனமானது நாளுக்கு நாள் செம்மையடையும்.

இதையும் படியுங்கள்:
மனநிறைவுக்கான எளிய ரகசியம்: பகிர்ந்தளித்தல்!
Professor Dr. Zakir Husain teaching cleanliness

எல்லாவற்றிற்கும் மேலாக பிறரைப் பார்த்து பொறாமைப்படும் குணத்தை அறவே கைவிட வேண்டும். பொறாமை மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் வல்லமை படைத்தது. ஒருவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டால் அவர் வாழ்க்கையில் உயரவே முடியாது. இன்றிலிருந்து மனக்குப்பைகளை படிப்படியாக வெளியேற்றுவோம். வாழ்வில் உயர்ந்து முழுநிலவாய்ப் பிரகாசிப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com