ஆறுதல் வார்த்தைகள் வேறு; ஆபத்தில் உதவும் செயல்கள் வேறு!

ஆறுதல் வார்த்தைகள் vs உண்மையான செயல்கள் | வள்ளுவர் வாக்கு!
உண்மையான மனிதர்கள்|a lion story
உண்மையான மனிதர்கள்AI image
Updated on

வெற்று வார்த்தை ஜாலங்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான மனிதர்கள்

"ஆயிரம் உறவுகள் அலறித் துடித்தாலும், ஆபத்தில் உதவும் ஒரு உறவே மேலானது" என்பார்கள். நம்முடைய வாழ்க்கையில் பலதரப்பட்ட மனிதர்களை நாம் கடந்து வருகிறோம். அதில் பலருக்கு, நாம் கஷ்டப்படும்போது வார்த்தைகளால் ஆறுதல் கூறுபவர்களைத்தான் மிகவும் பிடிக்கும். ஆனால், வெறும் வாய்ச் சொல்லில் காட்டும் ஆறுதலுக்கும், செயலால் காட்டும் ஆறுதலுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. நமது இன்ப துன்பங்களில் பங்குபெறுவதாகக் கூறிக்கொள்ளும் பலரில், யார் உண்மையானவர் என்பதை நாம் எவ்வாறு கண்டறிவது?

நம்மில் பலபேருக்கு ஆறுதலாகப் பேசுபவர்களை மிகவும் பிடிக்கும். ஆனால், ஆறுதலாய் பேசுவது வேறு; ஆறுதலாக நடந்துகொள்வது வேறு. இதைப் புரிந்து கொள்ள ஒரு குட்டி கதையைப் பார்ப்போம்.

ஒரு காட்டில் பலசாலியான சிங்கம் ஒன்று இருந்தது. அந்தச் சிங்கத்திற்கு நரி மற்றும் ஓநாய் ஆகிய இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். சிங்கத்திற்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், நரியும் ஓநாயும் முதல் ஆளாய் வந்து நிற்கும்; அதற்காக மற்றவர்களிடம் சண்டையும் போடும்.

இதைப் பார்க்கும்போது சிங்கம் நினைத்தது, "தான் வாழ்க்கையில் செய்த ஒரே நல்ல விஷயம் இப்படிப்பட்ட நண்பர்களைச் சேர்த்ததுதான்" என்று! இதனால் சிங்கம் பெருமிதம் கொண்டது; அவர்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லி மகிழ்ந்துகொள்ளும்.

ஒரு நாள் சிங்கம், நரியையும் ஓநாயையும் பற்றி ஆந்தையிடம் பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தது. அப்போது ஆந்தை சொன்னது, "ஆறுதலாய் பேசுவது வேறு, ஆறுதலாய் நடந்து கொள்வது வேறு" என்று. அப்போது அந்தச் சிங்கத்திற்கு ஆந்தை சொன்னதற்கான அர்த்தம் புரியவில்லை.

நாட்கள் சென்றன. ஒருநாள் சிங்கத்தின் காலில் முள் ஒன்று குத்திவிட்டது. இதனால் சிங்கத்தால் எங்கும் சென்று உணவு தேட முடியவில்லை. நரியும் ஓநாயும் சிங்கத்தைப் பார்க்க வந்தன; நலம் விசாரித்துவிட்டுச் சென்றன. இப்படியே தினமும் நடந்தது. நரி வந்தது, நலம் விசாரித்துவிட்டுச் சென்றது. ஆனால், ஓநாய் வந்து நலம் விசாரித்தது மட்டுமில்லாமல், சிங்கத்திற்கு உணவும் மருந்தும் எடுத்து வந்து தந்தது. அப்போதுதான் சிங்கத்திற்கு ஆந்தை சொன்ன வார்த்தையின் அர்த்தம் புரிந்தது—ஆறுதல் சொல்வது வேறு, ஆறுதலாய் நடந்து கொள்வது வேறு என்பது!

உண்மையான மனிதர்கள்|a true friendship
உண்மையான மனிதர்கள்AI image

நம்முடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட நண்பர்கள் இருப்பார்கள். அவர்களின் உண்மையான முகத்தைக் காலமும் சூழ்நிலையும் நமக்குத் தெளிவுபடுத்தும்.

ஆபத்துக் காலத்தில் நம் கரம் கோர்க்கும் உண்மையான மனிதர்கள்

"சொல்லுதல் யார்க்கும் எளியவாம் சொல்லியவண்ணம் செய்தல் அரிய" என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க, கஷ்ட காலத்தில் வெறும் வார்த்தைகளால் ஆறுதல் கூறுவது மிக எளிது. ஆனால், களத்தில் இறங்கி நமக்கு உதவுவதற்கு ஒரு தனி மனப்பக்குவம் வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சலிப்பின்றி வேலை செய்ய... பொமொடோரோ நுட்பத்தை இன்றே தொடங்குங்கள்!
உண்மையான மனிதர்கள்|a lion story

இந்தக் கதையில் வரும் நரியைப் போல, நம்மைச் சுற்றிலும் 'வார்த்தை ஜாலங்களால்' நம்மை மயக்கும் மனிதர்கள் பலர் இருக்கலாம். ஆனால், ஆபத்துக் காலத்தில் ஓநாயைப் போல செயலில் உதவி செய்பவர்களே நம்முடைய உண்மையான நலம் விரும்பிகள்.

எனவே, வெறும் இனிமையான பேச்சைக் கண்டு ஏமாந்துவிடாமல், ஆபத்தில் நமக்காகக் கரம் கொடுக்கும் உண்மையான மனிதர்களைக் கண்டறிந்து அவர்களை நம் நெஞ்சாரக் கொண்டாடுவோம். காலமும் சூழ்நிலையும் நமக்குப் புகட்டும் இந்த பாடமே வாழ்க்கையின் ஆகச்சிறந்த வழிகாட்டி!

logo
Kalki Online
kalkionline.com