ஒருவர் வியாபாரத்தில் புத்திசாலியாக இருப்பார். மற்றவர் கம்ப்யூட்டர் துறையில் புத்திசாலியாக இருப்பார். இன்னொருவர் செருப்பு தைப்பதில் அனுபவசாலியாக இருப்பார்.
மற்றொருவர் சமையல் செய்வதில் கெட்டிக்காராக இருப்பார். ஒருவர் அரசியலில் கொடிகட்டிப் பறப்பார். இப்படி ஒரு குறிப்பிட்ட செயலில் திறமையாக இருந்துவிட்டால், இவர்கள் புத்திசாலிகள் என்று அர்த்தம் உள்ளதாகிவிடுமா..?
இவர்களால் தத்தம் தொழில் தொடர்பற்ற மற்றவற்றில் நிலைகளில் வெற்றி அடைய முடியாமல் போகலாம். அப்போது இவர்களின் தொழில் சாமர்த்தியம் அர்த்தமற்றதாகிவிடும்.
இவர்கள் பணம் சம்பாதிப்பதிலும், வியாபாரத்திலும், அரசியலிலும் வெற்றி அடையலாம். இப்படி பிழைப்பையே வாழ்க்கையின் நோக்கமாக இருப்பவர்களை புத்திசாலிகள் என்று அழைக்க முடியாது.
இவர்கள் தங்கள் வாழ்க்கையை நல்வழியில் ஈடுபடுத்தாமல், வசதிகளை மட்டும் அதிகப்படுத்திக் கொள்பவர்களின் அந்த மாதிரி புத்திசாலித்தனம் நமக்குத் தேவை இல்லை.
நாம் எப்போதும் பிரச்னைகளால் அறிவு மந்தமாகிவிட்டது என்ற அவசர முடிவுக்கு வந்து விடாதீர்கள். எந்த சூழ்நிலையை நாம் எப்படி அணுகிறோம் என்பதில்தான் பிரச்னைக்குத் தீர்வு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை நாம் விரும்பவில்லை என்பதால், அந்தச் சூழ்நிலையைத் துரத்திவிட முடியாது.
அப்போது நாம் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி, என்ன செய்தால் குறைவான பாதிப்பு இருக்கும் என்று செயல்பட வேண்டும். எனவே எந்த சூழ்நிலையையும் விருப்பு, வெறுப்பு இன்றி நோக்குங்கள்.
ஒவ்வொரு நிகழ்வையும் நம் முன்னேற்றத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று கொஞ்சம் நம் புத்திசாலித் தனத்தோடு திறந்த மனதோடு ஆராயுங்கள். பிரச்னையா? இல்லையா? என்பது நிகழ்வில் இல்லை. அதை நாம் எப்படி புத்திசாலித்தனத்தோடு நாம் ஏற்கின்றோம் என்பதில்தான் இருக்கிறது.
கிடைத்ததை வைத்து வாழ்க்கையில் மேல் நோக்கி எப்படிப் போவது என்று பார்ப்பதுதான் உண்மையான புத்திசாலித்தனம்.