மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற தயக்கத்துடன் வாழாதீர்கள். உங்களுக்கு சரி என்று தோன்றுவதைத் துணிச்சலாகச் செய்யுங்கள். பெரும்பாலான நேரங்களில் நெருக்கடி ஏற்படும்போது உங்கள் மனம் உங்களைத் தெளிவாகவே வழி நடத்தும்.
நெருக்கமாகப் பழகுகிறார் என்பதற்காக யாரிடமும் முக்கியமான ரகசியங்களை பகிராதீர்கள். பிற்காலத்தில் பிரச்னை வரும்போது, அந்த ரகசியங்களையே உங்களுக்கு எதிரான ஆயுதங்களாக அவர்கள் பயன்படுத்துவார்கள். இதற்கு உதாரணமே இக்கதை
ஒரு துறவியைப் பார்க்கச் சோகமாக வந்தான் ஒரு இளைஞன், துறவியிடம் "என் வாழ்க்கையில் எல்லாமே முடிந்து விட்டது. நெருக்கடியான இந்தக் காலத்தில் என் தொழிலில், ஏகப்பட்ட நஷ்டம், வாங்கிய கடன்களைத் தர முடியவில்லை. யாரும் மதிக்காத செல்லாக்காசாக ஆகிவிட்டேன்" என்று புலம்பினான்.
துறவி, அவனை அமைதியாகப் பார்த்தார்.
"கவலைப்படாதே! உன் பிரச்னைகளுக்கு நான் ஒரு மருந்து தருகிறேன்" என்றார்.
"பணப்பிரச்னைக்கு மருந்து இருக்கிறதா" என்று கேட்டான்.
துறவி ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்து அதில் ஒரு கைப்பிடி உப்பைப் போட்டுக் கலக்கி அவனிடம் கொடுத்து குடிக்கச் சொன்னார்.
அவனால் ஒரு துளி கூட குடிக்க முடியவில்லை.
"குமட்டுகிறது" என்று கீழே வைத்தான்.
"துறவி, உடனே "சரி என்னுடன் வா" என்று ஒரு குளத்திற்கு அவனை அழைத்துச் சென்று, அக்குளத்தில் அதே கைப்பிடி உப்பைப் போட்டுவிட்டு "இந்தத் தண்ணீரை குடித்துப் பார்" என்றார்.
அவனால் குடிக்க முடிந்தது. "இனிப்பாக இருக்கிறது" என்றான்.
துறவி சிரித்தபடி கேட்டார், "இதே அளவு உப்பைத்தானே கோப்பையில் போட்டுக் கொடுத்தேன். அது குமட்டுகிறது என்றாய், இது இனிக்கிறது என்று சொல்கிறாயே?
"கோப்பையில் இருப்பது கொஞ்சம் தண்ணீர், அதில் கைப்பிடி உப்பு போட குமட்டத்தான் செய்யும். குளம் பெரியது, அதனால் குமட்டாது" என்றான் இளைஞன்.
உடனே துறவி, "உன் மனதைக் கோப்பைபோல சிறிதாக வைத்துள்ளாய். குளம்போல பெரிதாக்கிக் கொள். வருகின்ற கவலை, நெருக்கடி என்னும் உப்பு கரைந்து வாழ்க்கை இனிமை மாறாமல் வாழலாம்" என்றார்.
'வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை'
என்பது கண்ணதாசன் பாடிய வரிகள்.
அணைகள் நிரம்பி வழியும்போது விவசாயம் செய்வது பெரிய விஷயம் இல்லை.
மழை பொய்க்கும் நாட்களில் கிடைக்கும் கொஞ்ச நீரை சாமர்த்தியமாகப் பயன்படுத்தி விளைச்சலை எடுப்பவரே திறமையான விவசாயி.
அது போல நெருக்கடிகளைத் தாண்டி வாழ்வில் வெற்றி பெறுவதற்குச் சில நெறி முறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.