
எதையாவது ஏடாகூடமாக சொல்லிவிட்டு நான் நகைச்சுவைக்காக சொன்னேன் என்று சமாளிப்பவர்கள் அதிகம். சிலர் இஷ்டத்திற்கு மற்றவர்களை விமர்சனம் செய்வதும் அவர்கள் மனம் புண்படுமே என்று சிறிதும் யோசிக்காமல் இருப்பதும் மிகவும் தவறு. சும்மா ஜோக்குக்காக சொன்னேன் என்று மற்றவரை பற்றி எதை வேண்டுமானாலும் சொல்லலாமா? விமர்சனங்கள் நம்மை பாதிக்காமல் இருக்க நாம் ஒன்றும் உணர்ச்சியற்ற ஜடங்கள் அல்ல. விமர்சனங்கள் யாரிடமிருந்து வருகிறது என்பதும், அதன் உள்ளே மறைந்துள்ள உண்மை என்ன என்பதையும் பார்ப்பது முக்கியம்.
பிறர் நம்மை விமர்சிப்பதே நாம் அதற்கு ரியாக்ட் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். எனவே நம்மை விமர்சிப்பதை கேட்க விருப்பம் இல்லை என்றால் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் மௌனமாக இருந்து விடுவது நல்லது. விமர்சனங்கள் அறியாமையால் செய்யும் மூடர்களின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள். அதற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டிய அவசியம் இல்லை. விமர்சனங்களை கடந்து சென்றால் மட்டுமே நம்மால் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு செல்ல முடியும். விமர்சனத்தை எதிர் நோக்காத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை எனலாம். மனிதர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பது இல்லை. அவர்களுக்குள்ளும் சில தேவையற்ற சின்னத்தனமான குணங்கள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர்களை விமர்சனம் செய்வார்கள்.
விமர்சனங்கள் நல்ல வகையில் இருந்தால் பாதிப்பு இருக்காது. அதுவே மற்றவர்களை அதிகளவில் காயப்படுத்தும் வகையில் இருந்தால் அது கண்டிக்கத்தக்கது. பொதுவாகவே விமர்சனங்களை புன்னகையுடன் கடந்து செல்வதுதான் நல்லது. அதில் ஏதேனும் உண்மை இருப்பின் நம்மை மாற்றிக் கொள்ளலாம். இல்லையெனில் மனதில் ஏற்றிக் கொள்ளாமல் கடந்து செல்வதுதான் சரி. ஒருவர் நம்மை விமர்சனம் செய்கிறார் என்றால் அதற்கு கருத்து தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் கூறுவது பொய் என்று மறுக்க வேண்டிய தேவையும் இல்லை. நாம் நம் வேலையை பார்த்துக் கொண்டு செல்ல வேண்டியதுதான்.
ஒரு நேர்மையான விமர்சகர் தனி நபர் தாக்குதலில் இறங்கமாட்டார். அவர்களுடைய விமர்சனம் படைப்பாளியின் திறமையை அடையாளம் காட்டுவதாகதான் இருக்கும். அது படைப்பாளி தன் திறமையை வளர்த்துக் கொள்ள உதவுவதாக இருக்கும். இப்படிப்பட்ட விமர்சனத்தை எதிர்கொள்வதற்கு ஒரு பக்குவம் தேவைப்படுகிறது. யாராவது நம்மை கடுமையாக விமர்சித்து விட்டால் நான் யார் தெரியுமா? என்னைப் போய் இப்படி சொல்லலாமா? என்று சிலர் கோபப்படுவார்கள். வேறு சிலரோ நான் மட்டுமா தப்பு செய்கிறேன் என்னை மட்டும் குற்றம் சாட்டுவானேன் என்று புலம்புவதை பார்க்கிறோம். நம்மை யாராவது விமர்சனம் செய்யும் பொழுது அதில் உண்மை தன்மை இருக்கிறதா என்று ஆராய்ந்து, நம் மீது தவறு இருப்பின் அதை சரி செய்ய முன்வர வேண்டும். இதுதான் நம்மை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும்.
ஆனால் சிலருக்கு எல்லாவற்றிலும் ஏதேனும் குறை கண்டுபிடிப்பதே வழக்கமாக இருக்கும். பாராட்ட மனம் வராது. குறைகளை பூதக்கண்ணாடி கொண்டு தேடுவது இவர்களின் வழக்கமாக இருக்கும். இது போன்றவர்களின் கருத்துக்களை கேட்பதை தவிர்த்து விடுவது நல்லது. அப்படிப்பட்டவர்களின் விமர்சனத்தை அலட்சியப்படுத்த பழகிக் கொள்ள வேண்டும். உள்நோக்கம் இல்லாத ஒருவர் உள்ளதை உள்ளபடி சொல்ல முடிந்தால் அது பாராட்டாக இல்லாமல் விமர்சனமாக இருந்தாலும் கூட ஏற்றுக் கொள்ளலாம். மற்றபடி எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அதை விமர்சிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் எப்பொழுதும் இருக்கும். அதை கண்டுகொள்ளாமல் மௌனமாக கடந்து செல்வதே நல்லது.
விமர்சனங்களை கடந்து செல்லுங்கள் நண்பர்களே!