புறக்கணிப்புகளைப் புன்னகையால் வெல்வது எப்படி?

overcome rejections
overcome rejections
Published on

 வாழ்க்கைப் பயணம் என்பது எப்போதும் ரோஜா இதழ்கள் தூவிய பாதையாக இருப்பதில்லை. சில நேரங்களில், யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்காத போதும்,  சுற்றியுள்ளவர்கள் நம் மீது காரணமே இல்லாத வெறுப்பைக் கொட்டுவதை உணர்ந்திருப்போம். ‘நான் என்ன தப்பு செய்தேன்? ஏன் எல்லாரும் என்னைத் தவிர்க்கிறார்கள்?’ என்ற கேள்விகள் மனதைக் குடையும்.

ஆனால், பழங்கால 'ஸ்டாயிக் (Stoic) தத்துவம் இதற்கு ஒரு வியக்கத்தக்கப் பதிலைத் தருகிறது. ‘மக்கள் உங்களை வெறுக்கிறார்கள் என்றால், நீங்கள் முன்னை விட மனதளவில் வலிமையானவராக மாறி வருகிறீர்கள் என்று அர்த்தம்!’

1. உங்களின் அமைதி அவர்களைக் குழப்புகிறது!

பொதுவாக, ஒரு பிரச்சனை வந்தால் எல்லோரும் கத்துவதும், பதற்றப்படுவதும் இயல்பு. ஆனால்,  ஒருவர் எதற்கும் கலங்காமல் அமைதியாகத் தியானம் செய்தவரைப் போல நிதானமாக இருந்தால், அது மற்றவர்களுக்கு ஒருவித பயத்தைத் தரும். ‘எல்லாரும் பதறும்போது இவன் மட்டும் எப்படி இவ்வளவு கூலாக இருக்கிறான்?’  என்ற பொறாமை அவர்களுக்குள் ஏற்படும். அந்தப் பொறாமைதான் வெறுப்பாக மாறுகிறது. அந்தத் தெளிவான மனநிலை, பிறருக்கு அச்சுறுத்தலாகத் தெரிகிறது.

2. நீங்கள் பிறருக்காக வாழவில்லை:

‘ஊர் என்ன நினைக்குமோ, உலகம் என்ன சொல்லுமோ’ என்று பயந்து வாழ்வதை நீங்கள் எப்போது நிறுத்துகிறீர்களோ, அப்போதே நீங்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கிறீர்கள். மற்றவர்களின் பாராட்டுக்காக நீங்கள் ஏங்குவதில்லை என்பதால், உங்களை யாராலும் அதிகாரம் செய்யவோ அல்லது மிரட்டவோ முடியாது. இது பலருக்குப் பிடிப்பதில்லை. உங்களைக் கட்டுப்படுத்த முடியாத கோபத்தில்தான் அவர்கள் உங்களைப் பற்றித் தவறான வதந்திகளைப் பரப்புகிறார்கள்.

 3. வெற்றியின் அடையாளங்கள்

நீங்கள் உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறும்போது, உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களை ஒரு போட்டியாளராகப் பார்க்கத் தொடங்குவார்கள். ‘நேற்று வரை நம்மோடு இருந்தவன் இன்று இவ்வளவு உயரத்தில் இருக்கிறானே’ என்ற எண்ணம் அவர்களுக்கு வரும். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிரித்துக் கொண்டே இருப்பதைப் பார்க்கும் போது, அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகும். அதை மறைப்பதற்காக உங்களைப் பற்றித் தவறான வதந்திகளைப் பரப்பலாம் அல்லது உங்கள் உழைப்பைக் குறைத்து மதிப்பிடலாம். ஆனால், உண்மையில் அவர்களின் கோபமும் பொறாமையும் உங்கள் வெற்றியின் அடையாளங்களே.

இதையும் படியுங்கள்:
மௌனம் காக்க வேண்டிய 9 இடங்கள் பற்றி சாணக்கிய நீதி சொல்வது என்ன?
overcome rejections

4. மௌனம் எனும் ஆயுதம்!

தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பதும், எல்லாவற்றிற்கும் எதிர்வினை ஆற்றாமல் இருப்பதும் ஒரு கலை. ஸ்டாயிக் தத்துவப்படி, மௌனம் என்பது பலவீனமல்ல, அது தன்னம்பிக்கையின் அடையாளம். நீங்கள் யாருக்கும் எதற்கும் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று முடிவு எடுக்கும்போது, உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்பவர்கள் வெறுப்பைக் கக்குவார்கள். அந்த மௌனமே உங்களைத் தேவையற்ற விஷயங்களிலிருந்து  காக்கும் அரணாக அமைகிறது.

5. உணர்ச்சிகளிலிருந்து விடுபடுதல்

யார் உங்களைப் புகழ்ந்தால் என்ன, இகழ்ந்தால் என்ன? உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் உண்மையாக இருந்தால் போதும். பிறருடைய எதிர்மறை உணர்ச்சிகளை உங்கள் தலைக்குள் ஏற்றிக்கொள்ளாத 'உணர்ச்சி விலகல்  மிக முக்கியமானது. உங்களை யாராலும் தூண்டிவிட முடியாது என்ற நிலை வரும்போது, நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு நீங்களே ராஜாவாகிறீர்கள்.

இதையும் படியுங்கள்:
சமூக வலைதளங்களில் அதிகரிக்கும் வெறுப்பு பதிவுகள்...
overcome rejections

வெறுப்பு என்பது பெரும்பாலும் ஒருவரின் பலத்தைக் கண்டு மற்றவர்கள் காட்டும் பலவீனம் மட்டுமே. காரணமில்லாத விமர்சனங்கள் வரும்போது, இலக்கை நோக்கி இன்னும் உறுதியாக நடைபோடுவதே சிறப்பு. உலகம் ஒருவரைத் தன் வசதிக்கேற்ப மாற்ற முயற்சிக்கும். ஆனால், தன்னைத்தானே கட்டுப்படுத்தும் ஆற்றலும் மன உறுதியும் ஒருவரிடம் இருந்தால், எந்த வெறுப்பும் அவரை ஒன்றும் செய்யாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com