மௌனம் காக்க வேண்டிய 9 இடங்கள் பற்றி சாணக்கிய நீதி சொல்வது என்ன?
மௌனம் என்பது ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். வாழ்க்கையில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தியாகும். உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதற்கு பதிலாக அமைதியாக இருப்பது ஒருவருக்கு மிகப்பெரிய பலமாக மாறும். அதிலும் 9 இடங்களில் மௌனத்தைக் கடைப்பிடிப்பது மிகவும் சிறந்தது என்று சாணக்கியர் கூறுகிறார். அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. கோபமாக இருக்கும்போது: கோபம் என்பது ஒரு கொடிய விஷம் போன்றது. கோபத்தில் நிதானம் தவறி பேசக் கூடாத வார்த்தைகளை பேசக்கூடும். அவற்றை பேசி விட்டு அழிக்கவும் மாற்றவும் முடியாது. அவை நிரந்த வடுக்களாக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மனதில் பதிந்து விடும். எனவே, கோபமாக இருக்கும்போது மௌனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
2. பிறர் தூண்டும்போது: பிறர் தேவையில்லாமல் வேண்டுமென்றே உங்களை கோபப்படுத்த முயற்சி செய்வார்கள். அந்த நேரத்தில் அமைதியை இழக்காமல் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும். அவர்களை நோக்கி புன்னகைத்து விட்டு விலகிச் செல்வது நல்லது. மௌனமாக இருப்பது மிகவும் நல்லது.
3. வெற்றி: நமது முயற்சிகளில் கிடைக்கும் வெற்றிகளைப் பற்றி பெருமை அடித்துக் கொள்ளக் கூடாது. ரகசியமாக கடினமாக உழைக்க வேண்டும். நாம் பெரும் வெற்றியை பற்றி நாம் பேச வேண்டியது இல்லை. பிறர் அதைப் பற்றி உரக்கப் பேசலாம். சிறிய வெற்றியோ அல்லது பெரிய வெற்றியோ பெறும்போதும் மௌனமாக இருப்பது நல்லது. எதிர்காலத் திட்டத்தைப் பற்றியும் பெருமை பேசக் கூடாது.
4. திட்டங்கள்: நமது திட்டங்கள், கனவுகள், லட்சியங்கள், குறிக்கோள்களைப் பற்றி யாரிடமும் விளக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவற்றைப் பற்றி பிறரிடம் விவாதிக்கவும் வேண்டியது இல்லை. தொடர்ந்து வேலை செய்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இறுதி முடிவுகள் வெளியாகும் வரை அமைதியாக இருப்பது நல்லது.
5. வீண் வாதங்கள்: வாதம் செய்யும்போது அது சரியான நபருடன் இருக்க வேண்டும். வீணான தேவையில்லாத விவாதங்களில் கலந்து கொண்டு சக்தியையும் நேரத்தையும் வீணாக்கக் கூடாது. பயனற்ற வாதத்தில் ஒரு பயனும் இல்லை. எனவே, தேவையில்லாத வீண் விவாதங்களில் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும்.
6. பலவீனம்: உங்களது பலவீனம் என்னவென்று பிறர் கேட்டால் அதை ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது. அதைப் பிறர் தங்கள் சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார்கள். தனது பலத்தை மட்டுமே ஒருவர் வெளியே காட்ட வேண்டுமே தவிர, பலவீனத்தைப் பற்றி வெளியே மூச்சு விடக்கூடாது. மௌனமாக இருக்க வேண்டும்.
7. குறிக்கோள்களை பகிரக் கூடாது: பெரிய இலக்கை அடைய முயற்சிக்கும்போது உங்களது மிகப்பெரிய முக்கியமான குறிக்கோள்களை வெளியே பறைசாற்றாமல் தனிப்பட்டதாக வைத்திருக்க வேண்டும். உங்கள் கனவுகளை முன்கூட்டியே பகிர்ந்து கொள்வது பொறாமையையும் ஊக்கமின்மையையும் வரவழைக்கும். கனவு நனவாகும் வரை அமைதியாக, மௌனமாக வேலை செய்ய வேண்டும்.
8. பிறர் விமர்சிக்கும்போது: விமர்சனம் என்பது நீங்கள் முன்னேறி வருவதற்கான அறிகுறியாகும். நீங்கள் வெற்றி பெறுவதற்கேற்ப விமர்சனங்களும் கூடுதலாக வரும். தொடர்ச்சியான வெற்றியே அதற்குப் பதிலாக இருக்க வேண்டுமே தவிர, விமர்சனத்திற்குப் பதிலளித்து நேரத்தை வீணாக்கிக்கொள்ளக் கூடாது. மௌனமாக இருக்க வேண்டும்.
9. காலம்: காலம் எதிராக இருக்கும் கடினமான காலகட்டங்களில் மனம் தளரக் கூடாது. அப்போது எல்லாமே தவறாக நடப்பது போலத் தோன்றும். அதற்காக அச்சப்படுவதோ, முயற்சியை கைவிடுவதோ கூடாது. பொறுமையாக தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். சிரமங்கள் தற்காலிகமானவை என்பதை உணர்ந்து அமைதியாக வேலை செய்ய வேண்டும்.

