

சிலருக்கு எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம் ஏற்படுவதில்லை. இதற்கு வாழ்க்கையில் தெளிவான நோக்கம் இல்லாமல் இருப்பது, மனச்சோர்வு, நீண்ட கால மன அழுத்தம் போன்றவை காரணமாக இருக்கலாம். இது மிகவும் இயல்பான ஒன்றுதான். இதிலிருந்து மீண்டு வருவதற்கு சிறிது முயற்சித்தாலே போதும்.
நாள் முழுவதும் என்ன செய்ய வேண்டும் என்று பெரிய திட்டங்கள் எதுவும் போடாமல் சிறிய இலக்குகளுடன் நாளைத் தொடங்கலாம். அந்த சிறிய இலக்குகளையும் முடித்தவுடன் நம்மை நாமே பாராட்டிக் கொள்வது மூளையில் 'டோபமைன்' என்ற மகிழ்ச்சி ஹார்மோனை சுரக்கச் செய்யும்.
தினமும் ஒரே நேரத்தில் எழுந்து, ஒரே மாதிரியான வேலைகளைச் செய்வதை தவிர்க்கலாம். அத்துடன் வேலை செய்யும் இடத்தை மாற்றி அமைப்பது அல்லது வேறு பாதையில் பயணிப்பது போன்ற சிறிய மாற்றங்கள் மூளைக்கு புதிய சுறுசுறுப்பையும், சந்தோஷத்தையும் தரும்.
பெரிய விஷயங்களை செய்வதைப் பற்றி அதிகம் யோசிக்காமல், தினமும் நம்மால் முடிந்த மிகச்சிறிய விஷயங்களை, நம் மனதுக்கு சந்தோஷம் தரும் விஷயங்களை செய்யத் தொடங்கலாம்.
இப்படி செய்ய ஆரம்பிக்கும்போது மனதிற்குள் ஒரு சந்தோஷம், உத்வேகம், நம்மால் எதுவும் முடியும் என்ற எண்ணம் வேரூன்றி விடும். அத்துடன் நம்முடைய வழக்கமான தினசரி அட்டவணையை சற்றே மாற்றி, புதிய இடங்களுக்குச் செல்வது அல்லது புதிய பொழுதுபோக்குகளை உண்டாக்கிக் கொள்வது என்று நம்மைச் சுற்றி புதிய சூழலை உருவாக்கிக் கொண்டால் வாழ்வதே சுவாரசியமாகத் தோன்றும். இதனால் வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதுடன், எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வமும் ஏற்பட ஆரம்பிக்கும்.
எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் இருப்பது என்பது பலரும் தங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் இந்த உணர்வை எதிர்கொள்ளத் தான் செய்கிறார்கள். இதற்கு முறையான தூக்கம், ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி போன்றவை நம் மனநிலையை மேம்படுத்த உதவும்.
அத்துடன் தினசரி ஒரு நிமிடம் தியானம் செய்வது, ஒரு நல்ல புத்தகம் படிப்பது, மகிழ்ச்சி தரும் பாடல்களைக் கேட்பது அல்லது மகிழ்ச்சியான பழைய நினைவுகளைத் தூண்டும் புகைப்படங்களை பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.
எந்த ஒரு காரணம் கொண்டும் உங்களை நீங்களே வருத்திக் கொள்ள வேண்டாம். இந்த நிலை தற்காலிகமானது தான் என்பதை உணர்வதுடன், உடனடியாக எல்லாவற்றிலும் ஆர்வம் வர வேண்டும் என்று நம்மை நாமே வறுத்திக் கொள்ளாமல் நமக்குப் பிடித்த நண்பர்களுடன் கலந்து பழகுவதும், நகைச்சுவை படங்களை பார்ப்பதும் என நம்மை புதிய சூழலுக்கு உட்படுத்திக் கொண்டால் காலப்போக்கில் நமக்கு எதிலும் வெறுமை தோன்றாது இருப்பதுடன் ஆர்வமும் துளிர்க்கும்.
தொடர்ந்து எதிலும் பிடிப்பில்லாமல் இருப்பது அல்லது ஆர்வம் இல்லாமல் இருப்பது என்பது சில சமயம் ஒரே மாதிரியான வழக்கமான வாழ்க்கை முறை சலிப்பைத் தருவதால் கூட இருக்கலாம். ஆர்வம் என்பது ஒரே நாளில் வந்து விடுவதில்லை; அது நாமாகத் தேடி உருவாக்கிக் கொள்ளும் ஒரு உணர்வு என்பதை உணர வேண்டும்.
கடந்த காலத் தோல்விகள் அல்லது எதிர்காலத்தைப் பற்றிய அதிகப்படியான சிந்தனைகள் கூட நம்முடைய ஆர்வத்தைக் குறைக்கும். எனவே தேவையற்ற சிந்தனைகளைப் போக்கி நிகழ்காலத்தில் மட்டும் நம் கவனத்தை செலுத்த ஆரம்பித்தாலே போதும்.
வாழ்க்கையில் எந்த விஷயத்திலும் ஆர்வமில்லாமல் போவது என்பது நம்மை நாமே கவனித்துக் கொள்ளவும், புதிய மாற்றங்களை ஏற்படுத்தவும் கிடைத்த ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ளலாம்.
நான் சொல்வது உண்மைதானே நண்பர்களே? நீங்களே சொல்லுங்கள்!