
அலுவலகம் ஒரு பரபரப்பான கடல். அலைகளைப் போல பலர் உழைக்கிறார்கள். ஆனால், நீங்கள் ஒரு பளிச்சிடும் நட்சத்திரமாக மாற வேண்டுமா? உந்துதல் உங்களை உயர்த்தும்; புத்திசாலித்தனம் உங்களை முன்னேற்றும்.
"இன்னிக்கு எல்லாரையும் ஆச்சரியப்படுத்தணும்!" என்று காலையில் உங்கள் மனம் உற்சாகமாக சொல்லட்டும். உங்கள் பணியில் தனித்துவம் காட்டுங்கள். எல்லோரும் பழைய பாதையில் ஓடும்போது, நீங்கள் ஒரு புதிய சாலையை உருவாக்குங்கள். ஒரு சிக்கலை தீர்க்க புத்தம் புதிய யோசனைகளை முன்வையுங்கள். உதாரணமாக, ஒரு திட்டத்தை வேகமாகவும், சுவாரஸ்யமாகவும் முடிக்க ஒரு தனித்துவமான வழியை கண்டுபிடியுங்கள். உங்கள் மேலாளர் மனதில் ஒரு குரல் ஒலிக்கும் - "இவன் வேற லெவல் தான்!" என்று நினைத்து உங்களைப் பாராட்டவும் செய்வார். இதனால் " உங்கள் உள்ளம் உற்சாகத்தில் துள்ளும்.
"இன்னும் நிறைய கத்துக்கணும்," என்று உங்கள் மனதில் ஒரு சிறு குரல் எழட்டும். புதிய திறன்களை தேடுங்கள். ஒரு புதிய மென்பொருளை கற்று, உங்கள் வேலையை எளிதாக்குங்கள். பேச்சுத் திறனை மெருகேற்றி, கூட்டங்களில் பளிச்சிடுங்கள்.
ஒரு விற்பனையாளராக இருந்தால், "இந்த தடவை வாடிக்கையாளரை கவர்ந்து விடுவேன்!" என்று உற்சாகமாக முயலுங்கள். ஒரு சக ஊழியர் உங்களை பார்த்து, "எப்படி இவ்வளவு சீக்கிரம் கத்துக்குறான்?" என்று வியக்கலாம்.
"நான் உயரணும்!" என்ற உந்துதல் உங்களை புத்தகங்களை புரட்டவும், பயிற்சிகளை தேடவும், உங்களை ஒரு படி மேலே நகர்த்தவும் தூண்டும்.
பொறுப்பை ஏற்க தயங்காதீர்கள். மற்றவர்கள் பின்வாங்கும் இடத்தில், "நான் செய்யுறேன்!" என்று முன்னேறுங்கள். ஒரு குழு திட்டத்தில் தலைமை ஏறுங்கள். "என்னால முடியும்!" என்று உங்கள் உள்ளம் உற்சாகத்தில் துள்ளும்.
ஒரு சிக்கலான வேலையை முடித்து, "இவனால தான் இது சாத்தியமாச்சு!" என்று உங்கள் குழு உங்களை பாராட்டலாம். "நான் முன்னிலைப்படுத்த முடியும்!" என்ற உந்துதல் உங்களை ஒரு தலைவராக உருவாக்கும்.
மிக முக்கியமாக, மற்றவர்களுடன் இணக்கமாக பழகுங்கள். தனித்து தெரிவது என்றால் மற்றவர்களை ஒதுக்குவது,மட்டம் தட்டுவது என்று இல்லை. "இன்று இவனுக்கு உதவினா, நாளைக்கு இவனும் எனக்கு ஒரு கை கொடுப்பான்," என்று நினைத்து, சக ஊழியர்களுக்கு ஆதரவு கொடுங்கள். ஒரு சிக்கலை தீர்க்க அவர்களுடன் சேர்ந்து உழையுங்கள். "இவனோடு சேர்ந்து வேலை செய்வது இனிமையாக உள்ளது!" என்று அவர்கள் மனதில் நினைக்கலாம். ஒரு கூட்டத்தில் உங்கள் யோசனையை ஆதரிக்க அவர்கள் முன்வருவார்கள். இது உங்களை அனைவருக்கும் பிடித்தவராகவும், மதிப்புமிக்கவராகவும் ஆக்கும்.
ஒவ்வொரு காலையும், "இன்னிக்கு என்ன புதுசா செய்யலாம்?" என்று உங்களைக் கேளுங்கள். உங்கள் உள்ளத்தில் எரியும் உந்துதல் ஒரு சிறு தீப்பொறியாக தொடங்கி, பெரும் சுடராக மாறும். உங்கள் முயற்சி உங்களை வெற்றியின் உச்சிக்கு அழைத்துச் செல்லும்.
அலுவலகத்தில் ஒரு பளிச்சிடும் நட்சத்திரமாக உயர்ந்து, எல்லோரையும் வியக்க வையுங்கள்! குட் லக்....