
ஒருவனது நம்பிக்கையே அவனை உயர்த்தும். ஒருவன் தன்னைப் பற்றி அவநம்பிக்கை கொண்டிருந்தால் அதுவே அவனைத் தாழ்த்தும்.
இதை விளக்க “The Elephant Rope” - யானையின் கயிறு என்ற கதையைக் கூறுவார்கள்.
ஒரு இளைஞன் கோவில் ஒன்றுக்குச் சென்றான். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருந்தாலும் அவநம்பிக்கை கொண்டிருந்ததால் அவனுக்கு முன்னேறும் வழி தெரியவில்லை.
இறைவனை வணங்கி விட்டு வெளியே வரும் போது கோவில் வாயில் அருகே இருந்த யானை வைக்கப்பட்டிருந்த கூடாரத்திற்குள் சென்றான். யானை ஒரு சின்ன சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. யானைப் பாகனோ அதை ஒரு சின்ன அங்குசத்தால் அதட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான்.
இளைஞனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதன் வலிமைக்கு அது எளிதாக சின்ன சங்கிலியை அறுத்துவிட்டு ஓடலாம்.
பாகனிடம் இது பற்றிக் கேட்டபோது அவன் கூறினான். யானை குட்டியாக இருக்கும்போது சங்கிலியை வைத்துக் கட்டிவிடுகிறோம்.
அது சங்கிலிப் பிணைப்பிலிருந்து தப்பிக்கவே முடியாது என்ற மனநிலையை உருவாக்கி விடுகிறோம். இதுவே அது வலிமை வாய்ந்த பெரிய யானையாக வளர்ந்தபோதும் அதனிடம் இருக்கிறது. எல்லாம் மனதில் ஊட்டப்படும் நம்பிக்கையைப் பொறுத்துத்தான் இருக்கிறது.
இளைஞனுக்கு இப்போது தன் நிலை புரிந்தது. தானும் “கண்டிஷன்” செய்யப்பட்ட ஒரு யானைதான் என்பதை உணர்ந்தான். நம்பிக்கை கொண்டான். சங்கிலியை அறுத்தான். முன்னேறினான்.
இன்னொரு சம்பவமும் உண்டு.
ஒரு வியாபாரி வணிகத்தில் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்தார். அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் அவரைப் பணம் கேட்டு நச்சரித்தனர். வணிகத்திற்கான பொருள்களைக் கொடுத்தவர்கள் பொருள்களுக்கான பணம் எங்கே என்று கேட்டு அவருக்கு இடைவிடாது தொல்லை கொடுத்தனர்.
மனவருத்தம் அடைந்த வியாபாரி ஒன்றும் தோன்றாமல் ஒரு பார்க்கில் வந்து உட்கார்ந்தார்.
அப்போது அவர் அருகில் ஒரு வயதானவர் வந்து உட்கார்ந்தார்.
“என்ன விஷயம்? ஏன் இப்படி கவலையுடன் இருக்கிறாய்?” என்று கேட்டார். வியாபாரி தன் கதையைச் சொல்லி வருந்தினார்.
“பூ! இதற்காகவா வருத்தப்படுகிறாய்! இதோ இதை வைத்துக்கொள்! அடுத்த வருடம் இதே இடத்தில் உன்னைப் பார்க்கிறேன். மறந்து விடாமல் வா” என்ற அந்த மனிதர் ஒரு சின்ன காகிதத்தைக் கொடுத்தார். அது பத்து லட்சம் டாலருக்கான ஒரு செக்!
அதில் ஜான் ராக்பெல்லர் என்று கையெழுத்திடப் பட்டிருந்தது. வியாபாரி அசந்து போனார். அட ராக்பெல்லரா இவர், கோடீஸ்வரர் தந்த செக்கா இது? என்று நினைத்த அவர் வேகமாக தன் கடைக்குத் திரும்பினார்.
அந்த செக்கை பணமாக அவர் மாற்றவில்லை.
அனைவரிடமும் தன்னிடம் நிறையப் பணம் இருக்கிறது என்று நம்பிக்கையுடன் கூறி வணிகத்தை சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் நடத்தினார்.
அனைவரும் அவரது நம்பிக்கையோடு கூறிய தைரியமான வார்த்தைகளை நம்பினர். அவரது சுறுசுறுப்பைப் பார்த்து வியந்தனர். வியாபாரம் அமோகமாக நடந்து அவர் பெரும் பணக்காரராக ஆனார். ஒரு வருடம் கழித்தது. அந்த நாள் வந்தது. அவர் அதே பார்க்கிற்கு ஓடி வந்தார். தான் உட்கார்ந்த இடத்தை அடைந்தார்.
அட, அதே மனிதர்! ராக்பெல்லர்தான் அங்கு உட்கார்ந்திருந்தார்.
“அடடா! உங்களுக்கு எப்படி நான் நன்றி சொல்லப்போகிறேனோ தெரியவில்லை. இந்தாருங்கள் நீங்கள் கொடுத்த செக்” என்று கண்களில் நீர் ததும்ப செக்கை அவரிடம் நீட்டினார் வியாபாரி.
அப்போது ஒரு நர்ஸ் ஓடோடி வந்து அந்த பெரியவரின் கையைப் பிடித்துக்கொண்டாள்.
“இதே தொல்லையாப் போச்சு. இங்கு வரவேண்டியது, ராக்பெல்லர்னு ஒரு செக்கை எப்போதாவது யாருக்காவது தர வேண்டியது.” என்று கூறிய அவள் வியாபாரியைப் பார்த்து, “மன்னித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? வீட்டை விட்டு அடிக்கடி இப்படி ஓடி வந்து விடுகிறார். ராக்பெல்லர் என்று கூறிக்கொள்கிறார். இவருக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.
வியாபாரி திகைத்தார். அவருக்குப் புரிந்தது – போலி ராக்பெல்லர் தனக்குக் கொடுத்தது ஒரு செக்கை அல்ல, நம்பிக்கையைத்தான் என்று!
தன்னம்பிக்கையே வாழ்க்கையில் வெற்றி தரும்!