உங்கள் திறமைகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி?

Motivational articles
Scientist Thomas Alva Edison
Published on

‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம். பொறுமையின் சிறப்பை விளக்கவே இந்த முதுமொழி பிறந்திருக்கக் கூடும் என்பதில் ஐயமில்லை.

எது நடந்தாலும், என்ன நடந்தாலும் அவைகளை அமைதியாகப் பொறுத்துக் கொள்ளும் தன்மையே ‘பொறுமை’. எதற்கும் உணர்ச்சி வசப்படாத தன்மையே ‘பொறுமை’  எதையும் சகித்துக் கொண்டு போவோர் பொறுமையாக இருக்க முடியும்.

விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன், (Scientist Thomas Alva Edison) ஆயிரம் முறைகளுக்கு மேல் தோல்வி கண்டு, பெரும் முயற்சிக்குப் பின் மின்சார பல்பைக் கண்டு பிடித்தார். ஆனால் வெற்றிக்குப் பின்னரும் அந்த ‘பல்பு’ எடிசன் உதவியாளரால் உடைந்து நொறுங்கிவிட்டது.

அந்த நிலையில் எடிசன் எப்படி நொந்து போய் இருப்பார்...?

அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் கூட எடிசன் பொறுமையுடன் நடந்து கொண்ட சம்பவம் இது.

தனது நண்பர்களுக்கும், சக விஞ்ஞானிகளுக்கும் மின்சார பல்பை ஒளிர வைத்துக் காட்டுவதற்காக எடிசன், ஒரு சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அவரது ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

எடிசன், தனது உதவியாளரை அழைத்து மின்சார பல்பை மேல் தளத்திற்குக் கொண்டு வரச்சொன்னார்.

பல்பைக் கொண்டு வரும்போது, அது கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது. அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் எடிசன் சற்றும் திகைக்கவில்லை.

ஆயிரம் தோல்விகளைச் சந்தித்து வெற்றி கண்ட அவருக்கு மின்சார பல்பை மீண்டும் உருவாக்குவது எளிதாக இருந்தது. 

சிறிது முயற்சி செய்து ஒரு பல்பை உடனடியாக உருவாக்கினார்.

அதனை மீண்டும் அந்த உதவியாளரிடமே கொடுத்து மேலே எடுத்து வரச்சொன்னார். பல்பைக் கீழே போட்டு உடைத்தவனிடமே மீண்டும் அந்த வேலையைக் கொடுக்கிறீர்களே? என்று சிலர் எடிசனிடம் கேட்டு விட்டனர்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கான வழி: உங்களை நீங்கள் அறிந்து கொள்வது!
Motivational articles

அதற்கு எடிசன், ‘பல்பு உடைந்தது என்னால் மீண்டும் செய்துகொள்ள முடிந்தது. ஆனால் அவரது மனதைக் காயப்படுத்திவிட்டால் அதை என்னால் சரி செய்து கொடுத்துவிட முடியுமா?

மீண்டும் அவனிடமே பணியைக் கொடுத்தால் அவன் தனது பொறுப்பையும், எனது நம்பிக்கையும் உணர்ந்து கூடுதல் கவனத்துடன் பணிபுரிவான். அதனால்தான் அப்படி செய்தேன்’ என்றார்.

எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத்தந்த பொறுமை உணர்ச்சியின் எல்லையை அப்போதுதான் மற்றவர்கள் முழுமையாக உணர்ந்துகொண்டனர்!

ஒருவனுடைய திறமைகளை வெற்றிகளாக உருமாற்றித் தருவது பொறுமையே. பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு. அதுவே வாழ்வின் அலைகளை எதிர்கொள்ளும் துடுப்பாய்ப் பயன் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com