பிடிக்காதவர்களுடன் கூட இணைந்து சாதிக்கணுமா? இந்த ஒரு புரிதல் போதும்!

"நான் சொல்வதுதான் சரி" என்ற பிடிவாதம் இல்லாமல், எது வேலை செய்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். நமக்குத் தகுந்தாற்போல மற்றவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது.
Team work
Team workImg credit: AI Image
Published on

வாழ்க்கையிலும் சரி, பணியிடத்திலும் சரி, நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் எது தெரியுமா? கடினமான மனிதர்களைக் கையாளுவது தான். நம்மில் பலரும் அத்தகைய மனிதர்களைத் தவிர்த்துவிட்டு, நம்மைப் போலவே சிந்திக்கும் ஒரு குழுவை அமைத்துக்கொள்ளவே விரும்புவோம். ஆனால், உண்மையில் ஒரு பெரிய மாற்றத்தையோ அல்லது ஆக்கபூர்வமான ஒன்றையோ உருவாக்க நினைக்கும்போது, நமக்குத் தகுந்தாற்போல மற்றவர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது. பிடிக்காதவர்களுடன் கூட இணைந்து சாதிப்பது எப்படி என்று பார்ப்போம்.

ஒத்துப்போதல் என்பது கட்டாயமல்ல:

பொதுவாக ஒரு குழுவாக இணைந்து வேலை செய்யும்போது எல்லாரும் ஒரே நேர்க்கோட்டில் சிந்திக்க வேண்டும்; ஒருவருக்கொருவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கிறது. ஆனால், நிஜமான கூட்டுப்பணி என்பது ஒரு குழப்பமான சூழல்தான். அங்கே எல்லாரும் நண்பர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவரை ஒருவர் பிடிக்காவிட்டாலும், ஒரு பொதுவான இலக்கை நோக்கித் தற்காலிகமாக இணைந்து பயணிப்பதே புத்திசாலித்தனம்.

கட்டுப்படுத்தும் எண்ணத்தைக் கைவிடுதல்:

நமக்குத் தகுந்தாற்போல மற்றவர்களை மாற்ற முயற்சிப்பது அல்லது ஒரு சூழலை முழுமையாக நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர நினைப்பதுதான் மோதல்களுக்கு முக்கியக் காரணம். நாம் எப்போது மற்றவர்கள் நம்மைப் போலவே யோசிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறோமோ, அப்போதே அந்த உறவில் விரிசல் விழுகிறது. மற்றவர்களின் தனித்துவத்தையும், அவர்களது மாறுபட்ட கருத்துகளையும் அப்படியே ஏற்றுக்கொண்டு, அந்த முரண்பாடுகளுக்கு இடையிலேயே வேலையை எப்படிக் கொண்டு செல்வது என்று யோசிப்பதே முதிர்ச்சியான அணுகுமுறை.

பிரச்னைகளை எதிர்கொள்ளும் விதம்:

பல நேரங்களில் நாம் அமைதியை விரும்பி, ஒரு பிரச்னையைத் தீர்க்காமல் மறைத்து வைக்கப் பார்ப்போம். ஆனால், மோதல்கள் என்பது தவிர்க்க முடியாதவை மட்டுமல்ல, அவை சில நேரங்களில் அவசியமானவையும் கூட.

பிரச்னைகளை உடனடியாகத் தீர்த்து ‘சமாதானம்’ செய்யத் துடிப்பதை விட, அந்தப் பிரச்னைகளுடனேயே எப்படித் தொடர்ந்து பணியாற்றுவது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். இது ஒரு ரோடு மேப் இல்லாத பயணம் போன்றது; ஒவ்வொரு அடியிலும் நாம் புதிய பாடங்களைக் கற்றுக்கொண்டு, பாதையை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சதுரமான துளைக்குள் வட்டமான ஆணியைப் பொருத்த முடியுமா? அது அந்த ஆணியின் தவறா?
Team work

எதிர்வினையாற்றுதல்:

மற்றவர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்; அவர்கள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று சொல்வது எளிது. ஆனால், "இதில் என் பங்கு என்ன?" என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். ஒரு கடினமான சூழலில் நாம் எப்படி எதிர்வினையாற்றுகிறோம் என்பது மிக முக்கியம். நாம் ஒதுங்குகிறோமா, அல்லது தேவையில்லாமல் வற்புறுத்துகிறோமா? என்று நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் மற்றவர்களை நிர்வகிப்பதற்கு முன்னால், நம்முடைய உணர்ச்சிகளையும் செயல்களையும் நிர்வகிக்கப் பழக வேண்டும்.

சோதனை முயற்சி:

கூட்டுப்பணி என்பது ஒரு நிலையான சூத்திரம் அல்ல. இது ஒரு தொடர்ச்சியான பரிசோதனை. ஒரு வழிமுறை வேலை செய்யவில்லை என்றால், அடுத்த முறை வேறொரு கோணத்தில் அணுக வேண்டும். "நான் சொல்வதுதான் சரி" என்ற பிடிவாதம் இல்லாமல், எது வேலை செய்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். வெற்றி என்பது எப்போதும் அமைதியான பாதையில் கிடைப்பதில்லை. சில நேரங்களில் நமக்குச் சுத்தமாகப் பிடிக்காத ஒருவருடன் மேசையில் அமர்ந்து பேசுவதுதான் பெரிய வெற்றியாக இருக்கும். முன்னேற்றம் என்பது அமைதியால் வருவதல்ல, முரண்பாடுகளுக்கு இடையிலும் தொடர்ந்து முயற்சி செய்வதால் வருவது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இனிமேல் உங்களுக்குப் பிடிக்காத ஒருவருடன் வேலை செய்ய வேண்டிய சூழல் வந்தால், அங்கிருந்து விலகி ஓடாதீர்கள். மாறாக, அந்தப் பிடிக்காத சூழலையும் ஒரு கருவியாக மாற்றிக்கொண்டு முன்னேறப் பழகுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com